வெள்ளி, 19 ஜூன், 2020

இவர்கள் மகான்களா, ‘மாயாவி’களா?!

ஞானிகள் hashtag on Twitter
நம் மக்களில், பல்லாயிரவரால் பெரிதும் மதித்துப் போற்றி வழிபடப்படுகிற சில மகான்கள்[?!?!?!] குறித்த நிகழ்வுகள் கீழே தரப்பட்டுள்ளன. 

இவற்றையும் இவற்றையொத்த கதைகளையும் ஊடகங்கள் பிரசுரிப்பதும், பதிப்பகத்தார் தொகுத்து நூலாக வெளியிடுவதும் இன்றளவும் இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கிற அக்கிரமம்.

இம்மாதிரி இட்டுக்கட்டிய கதைகளை வாசிக்கும்போதெல்லாம், இன்னும் எத்தனையெத்தனை இளிச்சவாயர்களும் கூமுட்டைகளும் இந்த மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை எண்ணி, வேதனைப் பெருமூச்செறிபவன் நான்.

கொஞ்சமே கொஞ்சம் சிந்திக்கக் கற்ற பக்தர்களேனும், இவற்றை வாசிப்பதால் மனம் திருந்தக்கூடும் என்னும் நம்பிக்கையில் இங்கே பதிவு செய்கிறேன்.

நன்றி


*அந்நாளில், ஆதோனி, ரெய்ச்சூர் பகுதிகள் சித்திக் மசூத்கான் என்கிற தளபதியின் வசம் இருந்தது. ஒரு நாள், மற்றொரு தளபதியிடமிருந்து ஓலையொன்று வந்தது. அவனுக்குத் தெரியாத மொழியில் அது எழுதப்பட்டிருந்தது. அந்த மொழியறிந்தவர் யாரும் அருகில் இல்லை. அவன் கண்ணில் சற்றுத் தொலைவிலிருந்த வெங்கண்ணா[இது ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் பூர்வாசிரமப் பெயராம்] தென்பட்டான்.

“ஓலையை அவனிடம் நீட்டி, “இதைப் படித்துக்காட்டு” என்றான் மிரட்டும் தோரணையில்.

படிப்பு வாசனையில்லாத வெங்கண்ணா பயத்தால் நடுங்கினான். கடவுளைத் தியானித்தான். தன் கையிலிருந்த ஓலையை பிழையில்லாமலும் தெளிவாகவும் படித்துக் காட்டினான்.

பின்னர், நடந்த இந்த அதிசயத்தை அறிந்த நவாப் வெங்கண்ணாவைத் தன் திவானாக நியமித்தாராம்

*சாயிபாபா சீரடிக்கு வந்தபோது, ஊரின் எல்லையிலிருந்த கந்தோபா கோயிலில் தங்கிக்கொள்ள விரும்பினார்.  கோயில் பூசாரி அதற்குச் சம்மதிக்கவில்லை. ஆனாலும், அன்று இரவே, பூசாரியின் கனவில் தோன்றி, “மடையா, பாபா ஓர் அவதாரப் புருஷர்டா” என்று கடிந்துகொண்டாராம் கடவுள்.

விடிந்ததும் விடியாததுமாக, பாபாவைத் தேடிக் கண்டறிந்து அவரிடம் மன்னிப்புக் கோரினாராம் பூசாரி.

*பாம்பன் சுவாமிகள் திருமணம் புரிந்து மூன்று பிள்ளைகளைப் பெற்றவர்[இரண்டு ஆண், ஒரு பெண்]. இருப்பினும், அவரின் மனம் பெரிதும் துறவறத்தையே விரும்பியது.

ஒரு முறை தன் நண்பருடன் பேசிக்கொண்டிருக்கையில், “நாளை நான் பழனிக்குச் செல்கிறேன்” என்றார். “பழனிக்கு வருமாறு முருகன் கட்டளையிட்டிருக்கிறாரோ?” என்று நக்கலாகக் கேட்டார் நண்பர். “ஆம்” என்றார் சுவாமிகள்.

இதையறிந்த முருகப்பெருமான், “என் கட்டளை என்று நீ பொய் சொன்னதால், நானே கட்டளையிடும்வரை நீ பழனிக்கு வரக்கூடாது’ என்று முருகனே[அசரீரியாக?] கட்டளையிட்டுவிட்டாராம்.

*சேஷாத்ரி சாமி 1870ஆம் ஆண்டில் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே கிருஷ்ண பக்தர்.

“நான் நைஷ்டிக பிரமச்சாரி[?]. உபாசகன்” என்று சொல்லிக்கொண்டார். கால நேரம் பார்க்காமல் தியானத்தில் மூழ்கிவிடுவார். இரவு நேரங்களில் மயானத்திற்குச் சென்று தியானம் செய்வதும் உண்டு.

தினமும் மூன்று முறை குளிப்பதோடு, உடம்பில் அசுத்தம் ஏற்பட்டுவிட்டதென்று அடிக்கடி குளிப்பாராம். ஊரார் ‘நீர்க்காக்கை’ என்று பட்டப்பெயர் சூட்டி, இவரின் அன்றாட நடவடிக்கையை வேடிக்கை பார்த்தார்கள்.

இவரால் உண்டான அவமானங்களைப் பொறாமல், இவரின் தம்பி ஒரு நாள் இவரை ஓர் அறையில் தள்ளிப் பூட்டி வைத்தார். சில மணி நேரம் கழித்து கதவைத் திறந்து பார்த்தபோது சாமி மாயமாய் மறைந்துவிட்டிருந்தாராம்.

சில மாதங்கள் கழித்து, மாமண்டூர் கிராமத்தில், பஞ்சபாண்டவர் குகையில் இவர் தவக்கோலம் பூண்டிருப்பது கண்டு பிரமித்தாராம். இதையறிந்த ஊர் மக்கள்  இவர் ஓர் அவதார புருஷன் என்பதறிந்து போற்றினார்களாம்.

*குருஞான சம்பந்தர் ஸ்ரீவில்லிபுத்தூரைச் செர்ந்தவர். திருவாரூரில் இருந்த ஞானப்பிரகாசர் என்னும் அருளாளரைத் தன் குருவாக ஏற்றவர்.

ஒரு நாள் குருவானவர் அர்த்தஜாம பூஜை செய்துகொண்டிருந்தார்.

பணியாள் இல்லாததால், குருஞானசம்பந்தனே தீபம் ஏந்தி நின்றார். குரு தம் இல்லம் நோக்கிப் புறப்பட்டவுடன் இவரும் பின்தொடர்ந்தார்.

இல்லத்தை அடைந்தவுடன், “நீ இங்கேயே நில்” என்று சொல்லிவிட்டுக் குரு உள்ளே சென்றுவிட்டார்.

தீபம் ஏந்திய கோலத்தில் குருஞானசம்பந்தன் நின்ற இடத்தைவிட்டு அசையாமல் வாசலிலேயே நின்றுகொண்டிருந்தார்.

எதிர்பாராமல் மழை பெய்ய ஆரம்பித்தது. அது கன மழையாக மாறி இரவெல்லாம் கொட்டிக்கொண்டே இருந்தது. சம்பந்தனோ நின்ற இடத்தைவிட்டு நகரவேயில்லை. அவர் ஏந்தியிருந்த தீபம் அணையாமல் சுடர்விட்டுப் பிரகாசித்துக்கொண்டே இருந்ததாம்.

*தாமல் என்னும் பெரியவரும் அவர் மனைவியும் குழந்தை இல்லாத ஏக்கத்துடன் வாழ்ந்துவந்தனர்.

ஒரு நந்தவனத்தில் அனாதையாகக் கிடந்த குழந்தையை எடுத்து வளர்த்தார்கள். அதற்குக் ‘கபீர்’ என்று பெயரிட்டு வளர்த்தார்கள். அவன், குழந்தைப் பருவத்திலிருந்தே கருணை உள்ளத்துடன் வளர்ந்தான்.

ஒரு நாள், ஒரு பட்டுத் துண்டைக் கபீரிடம் கொடுத்து அதைச் சந்தையில் விற்றுவருமாறு சொன்னார்.

சந்தைக்குச் சென்ற கபீர், அங்கே ஓர் ஏழை அந்தணன் குளிரில் நடுங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து, அவரின் வேண்டுகோளின்படி, தான் வைத்திருந்த பட்டுத் துணியால் அவரின் காதுகளை மூடி, தலையில் சுற்றிவிட்டு வந்தான்.

வெறுங்கையுடன் வீடுவந்த கபீரிடம் விசாரித்த தாமல், கையில் பிரம்புடன் கபீரையும் இழுத்துக்கொண்டு சந்தைக்குப் போனார்.

தலையில் பட்டுத் துண்டுடன் இருந்த அந்தணனிடம் நடந்ததை விசாரித்து அறிந்துகொண்டு, கையிலிருந்த பிரம்பால் கபீரின் முதுகில் ஓங்கி ஓங்கி அடித்தார்.

இதை கவனித்த அந்தணர், “ஹரே ராம்...ஹரே ராம்” என்று ஓங்கிய குரலில் அலறினார்.

கபீருக்குப் பதிலாக, சந்தையிலிருந்த அத்தனை பேரும் அலறினார்கள். சாட்டையடி அத்தனை பேருக்கும் உறைத்ததுதான் காரணம்[பிட்டுக்கு மண் சுமந்த கதை நினைவுக்கு வந்ததா?].

“ராம்...ராம்” என்று சொல்லிக்கொண்டே பிராமணர் அங்கிருந்து அகல, ராமபிரான் அருளால்தான் இந்த அதிசயம் நிகழ்ந்தது என்பதை அறிந்த தாமலும் கபீரும் “ராம்...ராம்” என்று சொல்லிக்கொண்டே வீடு திரும்பினார்கள்.

கபீர் ஒரு முஸ்லீம் என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது.

இந்தக் கபீர் வேறு யாருமல்ல, மகான் என்று மக்களால் போற்றப்படும் கபீர்தாசர்தான்!

*கல்வி கற்காமல் இளம் பருவத்தை வீணாகக் கழித்தவர் ராமலிங்கம். 

தன் சகோதரர் சபாபதியிடம், கல்வி கற்பதற்குத் தனக்குத் தனி அறை ஒதுக்குமாறு கேட்டார். சபாபதியும் ஏற்பாடு செய்தார்.

அறையில் விளக்கேற்றி, ஒரு கண்ணாடியைச் சுவரில் மாட்டி, அதற்கு மாலை சூட்டி இமை கொட்டாமல் அதையே உற்று நோக்கினார் ராமலிங்கம். சற்று நேரத்தில் அதில் முருகப்பெருமானின் உருவம் தெரிந்தது. அன்று முதல் அத்திருவுருவத்தை வழிபடலானார். முருகனின் அருளால் கல்வியறிவைப் பெற்றார்.

இம்மாதிரிக் கதைகள் ஏராளம் உள்ளன. இவற்றிற்குக் கூடுதல் விமர்சனம் எழுதினால், அது மிக மிகக் கடுமையானதாக இருக்கும் என்பதால் தவிர்க்கிறேன். பதிவின் தலைப்பை மீண்டும் ஒருமுறை படியுங்கள்.
=======================================================================
நன்றி: ‘சிறந்த சித்தர்கள், ஞானிகள், மகான்களை அறிந்துகொள்ளுங்கள்’, மணிமேகலைப் பிரசுரம், பதிப்பு ஆண்டு 2000.