எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

சனி, 20 ஜூன், 2020

ஒரு ‘நிரந்தர’க் கழித்தல் கணக்கு!!!

இந்தப் பூமியின் வயசு [The age of the Earth is approximately] 4.54 ± 0.05 billion years (4.54 × 109 years ± 1%).[1][2][3][4  -Wiki] என்று விஞ்ஞானிகள் அடிச்சிவிட்டிருக்காங்க. இது இதனுடைய இப்போதைய வயசு. முழு ஆயுள் இன்னும்  அதிகம். இவங்க சொல்றதெல்லாம் சரியா தப்பான்னு ஆராயறதுக்கான அறிவெல்லாம் நமக்கு இல்ல. கோடி கோடி ஆண்டுகள்னு பொத்தாம் பொதுவாச் சொல்ல மட்டும்தான்  நமக்குத் தெரியும்.

பூமியின் ஆயுசு இப்படின்னா, சூரியனுடையது இதைவிடவும் மிகப் பல மடங்கு[.....This lifespan began roughly 4.6 billion years ago, and will continue for about another 4.5 – 5.5 billionyears] அதிகமாகத்தான் இருக்கும்[கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடியுங்க... நான் சொல்ல வருகிற விசயமே வேறு]. 

சூரியனை விடவும் பலப்பல மடங்கு பெருசான நட்சத்திரங்களின் ஆயுசு இன்னும் இன்னும் இன்னும் அதிகம். இதுகளுக்கு அப்பன், முப்பாட்டன் கொள்ளுப் பாட்டன், எள்ளுப்பாட்டன் எல்லாம் இருக்காங்க. 

எல்லார்த்தையும் உள்ளடக்கிய ஒன்னுதான் 'அண்டம்'கிறான். 'பிரபஞ்சம்'கிறான். 'வெளி'[Space]யில் அவ்வப்போது நிகழ்கிற பெருவெடிப்புகள் காரணமா இதுகளெல்லாம் தோன்றுவதும் அழிவதுமாக இருக்கிறதுகளாம்.

கட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்துகொண்டே இருக்கும் இந்த நிகழ்வுகளுக்கு 'முற்றுப்பெறுதல்' என்பதே இல்லை என்கிறார்கள். முற்றுப்பெறாத இம்மாதிரி நிகழ்வுகளை உள்ளடக்கிய பிரபஞ்ச[வெளி]த்தின்  ஆயுளோடு மனிதர்களுடைய ஆயுளையும் ஒப்பிட்டுப் பார்த்தா.....இவர்களுடைய ஆயுள் அற்பம்...அற்பம்...வெகு அற்பம்... அற்பத்திலும் அற்பம்[துல்லியமாகச் சொல்லத் தெரியல].

மனிதர்களின் ஆயுள் நூறு[சிலர் கூடக்குறைய வாழலாம்]. அவற்றில், தூங்கிக் கழிக்கிற 30ஐக் கழித்தால் வாழக் கொடுத்துவைத்தது 70 ஆண்டுகள்தான். அதிலும்.....

வயித்துப்பாட்டுக்கு உழைக்கிறதுக்கும், வாட்டும் நோய்களுக்குச் சிகிச்சை பெறுவதற்கும், வாழ்க்கை வசதிகளை மேம்படுத்துறதுக்கும் என ஒரு 40 வருடங்களை ஒதுக்கிவிட்டால்  அந்த எழுபது 30 ஆகிறது.

எதிரிகளோடு போராடுவது, நம்மைவிடவும் நன்றாக வாழ்பவனைப் பார்த்துப் பொறாமைப்படுவது, ஆசைப்பட்டதெல்லாம் கிடைத்தாலும், 'இன்னும் வேணும்...இன்னும் வேணும்'னு பேராசைப்படுவது,  காதல் கத்திரிக்காய்னு சுய சிந்தனை இழந்து திரிவது, கோயில் குளம்னு உதவாக்கறைச் சாமிகளை வேண்டிக்கொண்டு அலைவது, சாதி மத வெறியர்களால் தூண்டப்பட்டுச் சக மனிதர்களைத் தாக்குவது என்றிவ்வாறு வேண்டத்தகாத காரியங்களுக்கு என்று 20 ஆண்டுகளுக்கு மேலாகச் செலவு செய்யுறோம்.

இந்த இருபதையும் முப்பதிலிருந்து கழிச்சா மிஞ்சுவது பத்தே பத்துதான்.

அந்தப் பத்துக்குள்ளேதான், கல்யாணம் கட்டிக் கணவனும் மனைவியும் இன்பசுகம் துய்த்தல், குழந்தை பெற்றுக் கொஞ்சிக் குலவுதல், ஊருலகமெல்லாம் சுற்றிவந்து குதூகலித்தல், சொந்தபந்தங்களோடு அளவளாவிப் பாசத்தையும் நேசத்தையும் பகிர்ந்து மகிழ்தல் என்றிப்படியான சுகங்கள் பலவும் அடக்கம்.

பிறந்ததன் பயன் பத்தே பத்து ஆண்டு மகிழ்ச்சிதானா?

பத்து என்பதைக் கிட்டத்தட்ட எழுபது ஆக்குவது சாத்தியமா?

சாத்தியம்தான்.

‘தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்றான் நம் பாரதி.

உலகில் உள்ள அத்தனை மனிதர்களும் ‘மனித நேயம்’ போற்றினால், எந்தவொரு மனிதனும் உணவின்றிச் செத்தொழியும் கொடூரம் நேராது.

அத்தனை மனிதர்களும் மனிதநேயம் போற்றினால், கொடிய நோயால் தாக்குண்டு ஆறுதல் சொல்லக்கூட நாதியில்லாம, அனாதரவாக ஒருவன் உயிர் துறக்கும் அவலநிலை மாறும்.

அத்தனை மனிதர்களும் மனிதநேயம் போற்றினால், சாதி, மதம், இனம், மொழி எனும் இவற்றால் உருவாகும் மோதல்கள் வேரறுக்கப்பட்டு, இவற்றால் நேரும் பொருளிழப்பும் உயிரிழப்பும் முற்றிலுமாய்த் தவிர்க்கப்படும்.

இவையெல்லாம் நடக்கணும்னா ஒவ்வொரு தனி மனிதனும் மனித நேயம் போற்றுபவனாக மாறணும்.

இப்போதைக்கு இது சாத்தியமே அல்ல. பின் எப்போது?

மனித இனம் அழியாமலே இருந்துகொண்டிருந்தால்.....

எப்போதாவது!?!?!
=======================================================================