சனி, 23 அக்டோபர், 2021

மரணம் வரவேற்கத்தக்கதே!!!


தலைப்பைப் பார்த்து முகம் சுளிக்க வேண்டாம்.

இதில் பெரிய தத்துவமே அடங்கியுள்ளது.

வறட்டுத் தத்துவம் அல்ல; வாழ்க்கைத் தத்துவம்.

கவலைப்படுதலில் பல நிலைகள் உள்ளன. அவரவர் மனப்பக்குவத்தைப் பொருத்துச் சிறிய கவலைகள் பெரிதாகவும், பெரிய கவலைகள் அதனினும் பெரிதாகவும் உணரப்படக்கூடும்.

"கால் செருப்பு கண்டமாகி ஆறு மாசம் ஆச்சு; புதுசு வாங்க வசதி இல்ல."... "ஒரு செல்ஃபோன் வாங்க வக்கில்ல."... "சுற்றுலா போனதில்ல"... என்றிப்படிக் கவலைப்படுவோர் உள்ளனர்.  -செருப்பில்லாமலும், செல்ஃபோன் இல்லாமலும், சுற்றுலா போகாமலும் காலத்தைக் கடத்திட முடியும் என்பதால், இவை போன்றவை சிறிய ரகக் கவலைகள் ஆகும். 

படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காதது; செய்த தொழிலில் எதிர்பாராத இழப்பு; வயசாகியும் கல்யாணம் ஆகாதது; கட்டிகிட்ட கணவன் -மனைவிக்கிடையே பிரச்சினைகள் என்று இவையும், இவற்றை ஒத்தவையும் அற்பமானவை அல்ல என்பதோடு அலட்சியம் செய்ய இயலாத கவலைகள். 

அடுத்தடுத்துத் தாக்கும் தீராத நோய்களால் மரணத்தை எதிர்பார்த்து மனம் வெதும்பிச் சிதைந்து காத்திருப்பது; கயவர்களால் கடத்தப்பட்ட, பாசத்துக்குரிய பெண் பிள்ளையை ஆண்டுக்கணக்கில் தேடியும் கிடைக்கப்பெறாமல் அழுத கண்களுடன் செத்துச் செத்துப் பிழைத்துக்கொண்டிருப்பது என்று இத்தகைய கவலைகள் தீரவே தீராதவை.

இவற்றைத் தீர்த்திட.....

மகான்களோ, அவதாரங்களோ, ஞானிகளோ வழிகாட்டியதில்லை.

இவர்களால் போற்றிப் புகழ்ந்து பேசப்பட்ட/படும் கடவுளோ/கடவுள்களோ உதவியதில்லை. 

தீர்க்கவல்லது மரணம் மட்டுமே. எனவே, மரணம் வரவேற்கத்தக்க ஒன்றுதான்!

==========================================================================