செவ்வாய், 22 ஜூலை, 2025

பாவப்பட்டவர்களா ‘பலான’ தொழில் செய்யும் அத்தனைப் பெண்களும்?!

விபச்சார விடுதியிலிருந்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டவர்களில் அவளும்[பெயர் தவிர்க்கப்படுகிறது] ஒருத்தி. விசாரித்த காவல்துறை அதிகாரியிடம் அவள் சொன்னாள்:

"அப்பாவும் அம்மாவும் கட்டடத் தொழிலாளிகள். என் எதிர்காலம் நல்லா இருக்கணும்னு படிக்க வைத்தார்கள். முகநூலில் அறிமுகமான ஒருத்தனைக் காதலிச்சேன். வீட்டில் கடுமையான எதிர்ப்பு. ஓடிப்போய்க் கல்யாணம் கட்டிகிட்டு வெளியூரில் குடும்பம் நடத்தினோம். ஆறு மாசம் போல ஆசை தீர என்னை அனுபவிச்சிட்டு, ஒரு விபச்சார விடுதியில் வித்துட்டு ஓடிட்டான் அந்தப் பொறுக்கி. அங்கிருந்து என்னால தப்பி வர முடியல. கெஞ்சிக் கேட்டுக்கிறேன், வழக்குப்போடாம என்னை என் பெற்றோரிடம் சேர்த்துடுங்க....."

சொல்லிக்கொண்டிருக்கும்போதே சரம் சரமாக அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

இது சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி[நண்பர்] பத்திரிகை நிருபரிடம் சொன்னது.

“அவனும் நானும் திருப்பூரில் ஒரு தையலாடை நிறுவனத்தில் ஒன்னா வேலை பார்த்தோம். மனப்பூர்வமா காதலிச்சோம். கல்யாணம் கட்டிக்காம சேர்ந்து வாழ்ந்தோம். கொஞ்ச நாள் சந்தோசமா வாழ்க்கை கழிஞ்சது. அவன் குடிக்கு அடிமை ஆனான். வேலை போச்சு. என் ஒருத்தி வருமானம் போதுமானதா இல்ல. அவனுக்குத் தெரிஞ்சவங்கள அழைச்சிட்டு வந்து என்னோடு ‘இருக்க’ அனுமதிச்சான். அதாவது, என்னோடு சேர்ந்து வாழ்ந்த அவனே எனக்குப் புரோக்கராகவும் ஆனான்.....

கொஞ்ச நாளுக்கு அப்புறம் போதையில் மாடிப்படியில் தடுக்கி விழுந்து செத்துப்போனான். வேறு வழியில்லாம முழு நேர விபச்சாரியா மாறினேன்.”

சம்பந்தப்பட்ட பெண்ணிடம் ஒரு பத்திரிகை நிருபர் நடத்தியப் பேட்டியில் வெளியான செய்தி இது.

“அப்பா மொடாக்குடியர். தினம் தினம் அம்மாவுக்கும் அவருக்கும் சண்டைதான். ஒரு நாள், சண்டை வலுத்ததில் அம்மாவை விறகுக் கட்டையால் அடிச்சிக் கொன்னுட்டு அப்பா ஜெயிலுக்குப் போய்ட்டார்.....

சித்தப்பா வீட்டில் கொஞ்ச நாள் வளர்ந்தேன். சித்தி என்னை வேலைக்காரியா நடத்திச்சே தவிர வயிறாரச் சோறு போடல.....

வீட்டிலிருந்து வெளியேறிப் பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்தேன். அங்கேயே படுத்துத் தூங்கினேன். ஒரு நாள் ஒரு நடுத்தர வயசுக்கார அம்மா, ‘உனக்கு என்ன வயசு?’ன்னு கேட்டாங்க. பத்து நடக்குதுன்னு சொன்னேன். ‘அடிப் பாவிப்புள்ள, இந்த வயசுல இப்படி அனாதையாப் படுத்துக் கிடந்தா காலிப் பசங்க தூக்கிட்டுப்போயிடுவாங்க. வா என்னோடு’ன்னு தன் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அங்கே போனப்புறம்தான் அந்த அம்மா விபச்சாரத் தொழில் நடத்துறவங்கன்னு தெரிஞ்சுது. தெரிஞ்சும் வயித்துப்பாட்டுக்காக அங்கேயே தங்கியிருந்தேன். நான் வயசுக்கு வந்ததும் வராததுமா என்னையும் அந்தத் தொழிலில் இறக்கிட்டாங்க அந்த அம்மா.” 

இது, குடியிருப்பில் விபச்சாரம் நடப்பதாகக் கேள்விப்பட்டு, வீட்டைச் சோதனையிட்ட காவல்துறையாரிடம் அந்தச் சின்னப் பெண் சொல்ல, அவர்கள் மூலம் ஊடகங்களில் வெளியான செய்தி.

புருசன்காரன் ரொம்பவே அப்பாவி. காலையில் புறப்பட்டுப்போனா, தள்ளுவண்டி வியாபாரத்தை முடிச்சுட்டு ஏழு எட்டு மணிக்கு மேல்தான் வீடு திரும்புவான். அதைப் பயன்படுத்தி, அண்டை அயல் வாலிபர்களோடு அவளுக்குக் கெட்ட சகவாசம் ஏற்பட்டுது....

இது தெரிஞ்சி அவளை அவன் கண்டிச்சான். அவள் திருந்தல. மானஸ்தனான அவன் ஒரு நாள் தூக்கில் தொங்கிட்டான்.....

கொஞ்ச நாள் கழிந்ததும் பிழைப்புக்கு வேறு வழியில்லாம, முழுநேரத் தொழில்காரியா அவள் மாறினாள்.

அவள் மீது தீராத கோபத்திலிருந்த அண்டை அயல் தெரு மக்கள் ஒன்றுகூடிக் காவல்துறையிடம் புகார் செய்ய, அவர்கள் அவளைக் கைது பண்ணினார்கள். இதை ஊடங்கங்கள் செய்தியாக வெளியிட்டன.