“வாங்க......வாங்க.” -கை கூப்பி வரவேற்றார் அருணகிரி.
புன்னகை பூத்த முகத்துடன் உள்ளே நுழைந்தவர் மாசிலாமணி; அருணகிரிக்குக் கொஞ்சம் தூரத்துச் சொந்தம்.
“உட்காருங்க.”
மஞ்சள் பையிலிருந்து ஓர் அழைப்பிதழை எடுத்து அருணகிரியிடம் நீட்டிவிட்டு இருக்கையில் அமர்ந்தார் மாசிலாமணி.
அதில் பார்வையை ஓடவிட்ட அருணகிரி, “என்னங்க இது, ‘மழலை விழா’ன்னு போட்டிருக்கீங்க! மகள் குழந்தை பெற்றதுக்கு யாரும் பத்திரிகை அடிச்சி விழா கொண்டாடுவாங்களா என்ன?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.
“ரொம்ப நெருக்கமான, கொஞ்சமே கொஞ்சம் சொந்த பந்தங்களை மட்டும் அழைச்சி, என் மகள் கல்யாணத்தைக் கோயிலில் சிக்கனமா நடத்தி முடிச்சேன்......”
குறுக்கிட்டார் அருணகிரி. “அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”
“சொல்றேன். இப்பெல்லாம், கல்யாணம் முடிஞ்ச சூட்டோடு ரொம்பப்பேர் விவாகரத்துப் பண்ணிடுறாங்க. ரெண்டொரு வருசம்கூடத் தாக்குப்பிடிக்கிறது இல்லை. கணக்குப் பார்க்காம செலவு பண்ணினவங்கெல்லாம் தலையில் முக்காடு போட்டுட்டு முடங்கிக் கிடக்குறாங்க. அதனாலதான், நானும் சம்பந்தியும் மட்டும் கலந்து பேசிக் கல்யாணச் செலவை ரொம்ப மட்டுப்படுத்தினோம்.”
“சொல்லுங்க.”
“என் பொண்ணுக்குக் கல்யாணம் ஆகி இரண்டு வருசம் ஆயிடிச்சி. சின்னச் சின்ன மனத்தாங்கல்கள் இருந்தாலும் மாப்பிள்ளையும் பொண்ணும் சந்தோசமா குடும்பம் நடத்துறாங்க. குழந்தையும் பிறந்திருக்கு. இனி, குடும்பத்தில் பெரிய பிரச்சினை ஏதும் தலையெடுக்காதுன்னு நம்பிக்கை வந்திடிச்சி.”
சிறிது இடைவெளி கொடுத்துச் சொன்னார் மாசிலாமணி. “ஆயிரக் கணக்கில் பத்திரிகை அடிச்சி, சொந்தபந்தம், அக்கம்பக்கம், ஆகாதபக்கம், அறிமுகம் ஆனவங்க ஆகாதவங்கன்னு பெரிய கூட்டத்தைத் திரட்டிக் கோலாகலமா கல்யாணத்தை நடத்தாம, கமுக்கமாவும் சிக்கனமாகவும் நடத்திட்டமேன்னு சம்பந்தி வீட்டாருக்கும் என் வீட்டார்க்கும் மனக்குறை இருந்திச்சி. அந்த மனக்குறையைப் போக்கும் வகையில் ‘திருமண விழா’வுக்குப் பதிலாக, ‘மழலை விழா’ங்கிற பெயரில் புதுமையான ஒரு விழாவை, ஒரு திருமண நிகழ்ச்சி போல வெகு விமரிசையாக் கொண்டாடுறோம்.”
சொல்லி முடித்து, “விழாவுக்கு எல்லாரும் அவசியம் வந்துடுங்க” என்றார் மாசிலாமணி.
“புத்திசாலித்தனமா நீங்க நடத்துற இந்தப் புதுமையான விழாவுக்கு வராமல் இருப்போமா?” -சிரித்துக்கொண்டே சொன்னார் அருணகிரி.
* * * * *
*****இக்கதையை, “புதிய சிந்தனையில் உருவானதொரு புரட்சிப் படைப்பு” என்று நீங்கள் பாராட்டுவதை மானசீகமாக உணர்ந்து மகிழ்கிறேன்!
ஹி...ஹி...ஹி!!!
* * * * *
*****இது, பெருமளவில் திருத்தியமைக்கப்பட்ட பழையதொரு படைப்பு.