திங்கள், 14 ஜூலை, 2025

ஆணுக்கு நிகர் பெண்! அப்புறம் எதற்கு அவளுக்கு மட்டும் ஒப்பனை? மிகை அலங்காரம்?!

ண்கள் ஆதிக்கம் செலுத்தும் அத்தனைத் துறைகளிலும்[ராணுவம், வானூர்தி, வானியல் ஆய்வு, அறிவியல் ஆராய்ச்சி முதலியன] இன்று தங்களின் பங்களிப்பைச் செலுத்துகிறார்கள் பெண்கள்.

ஆண்களுக்கு நிகரான மன வலிமையைப் பெண்களும் பெற்றிருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

ஆனாலும், ஒப்பனை செய்துகொள்வதில் மட்டும் ஆண்களுக்கு இணையான மனப் பக்குவத்தை அவர்கள் பெற்றிடவில்லை.

மிகப் பெரும்பாலான ஆண்களுக்கு, மதிக்கத்தக்க வகையில் அல்லது ஆடம்பரமாக ஆடை உடுத்துதல், கடிகாரம் கட்டுதல்[கைப்பேசிப் பயன்பாடு அதிகரித்ததில் பலர் கைகளில் கடிகாரம் இடம்பெறுவதில்லை] ஆகியவை தவிர வேறு வகையில் தங்களை அவர்கள் அலங்கரித்துக்கொள்வதில்லை[இன்றைய இளைஞர்களில் கணிசமானவர்கள் தலைமுடி அலங்காரத்தில் கவனம் செலுத்துகிறார்கள்].

ஆனால், பெண்களைப் பொருத்துவரை[நடுத்தர வயதைக் கடக்கும்வரை> பெரும்பாலோர்] ஒப்பனை செய்துகொள்வதைத் தவிர்ப்பதே இல்லை.

காது, கழுத்து, மூக்கு, கை ஆகியவற்றில் நகைகள், கண் மை, நெற்றிப் பொட்டு,  முகப் பூச்சு, கிரீம்கள், உதட்டுச் சாயம்[இளசுகளில் கணிசமானவர்கள்],  ஹேர் ஸ்பிரே, ஜெல், நகப் பாலீஸ், விதம் விதமான ஆடைகள் முதலியன குறிப்பிடத்தக்க ஒப்பனைக்கான சாதனங்கள்.

வீடுகளில் தங்களாகவே அபிரித[விபரீத?] ஒப்பனைகள் செய்வதோடு, அழகு நிலைங்களுக்குச் செல்கிறார்கள். நேரத்தை வீணாக்குவது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கில் ரூபாய் செலவழித்துச் செய்துகொள்ளும் அலங்காரங்கள் யாரைத் திருப்திப்படுத்த என்பது புரியவில்லை.

மணப்பெண் என்றால் வானுலகிலிருந்து வந்த தேவதையோ என்று பிரமிக்க வைக்கிறார்கள் அழகு நிலையத்தார். குளித்து முடித்து ஒப்பனை இல்லாமல் தலைவிரி கோலமாய்க் காட்சிதரும் பெண்டாட்டியைப் பார்த்து மிரண்டுபோய், விவாகரத்துக் கோரும் கணவன்மார்கள் உண்டு என்பதை ஏனோ நம் பெண்கள் மறந்துபோகிறார்கள்[ஹி... ஹி... ஹி!!!].

அவ்வப்போது நடைபெறும் அழகிப் போட்டிகளால், நடத்துகிறவர்களும், ‘அழகி’ என்று கிரீடம் சூட்டப்படுபவளும் பணம் பண்ணுவதைத் தவிர, வேறு நன்மை ஏதுமில்லை. 

அழகிகளோடு தங்களை ஒப்பிட்டு அரைப் பைத்தியங்களாக அலைகிறார்கள் நம் பெண்கள் என்பதே இதன் பின்விளைவு.

காதணிகளோ, கழுத்து நகைகளோ, மூக்குத்தியோ, கை நிறைய வளையல்களோ இல்லாத பெண்களெல்லாம் பெண்கள் அல்லவா? 

பென்ணின் மதிப்பை மேம்படுத்துவது அவளின் நல்ல குணங்களும், நடத்தையும், உலக அறிவும், சிந்திக்கும் திறனும்தானே தவிர செய்துகொண்டிருக்கும் ஒப்பனையோ அலங்காரங்களோ அல்ல; அல்லவே அல்ல.

அதனால்தான் சொல்கிறோம்.

ஆண்களைப் போலவே, மிகை ஒப்பனையோ அசத்தல் அலங்காரமோ இல்லாமல் இயல்பாக இருத்தலே நல்லது என்று. இதனால், பெண்கள் மீதான வன்முறைக் குற்றங்கள் மட்டுமல்ல, கயவர்களால் கடத்தப்படுதலும் குறையும்[ஆறேழு வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு மட்டும் ஒப்பனை செய்து அழகுபடுத்தி ரசித்து மகிழலாம்].

தீர்க்கப்படாத நம் நீண்ட காலச் சந்தேகம்.....

காலங்காலமாக, பெண்ணென்றாலே வெகுவாக அலங்கரித்துக்கொள்வதைப் பழக்கப்படுத்தி வழக்கப்படுத்தியவர்கள் யார்? யாரெல்லாம்?

அவர்கள் ஆண்களோ பெண்களோ இரு சாராருமோ எவராயினும் அவர்கள் நம் கண்டனத்திற்கு உரியவர்கள்.