பக்கங்கள்

சனி, 14 செப்டம்பர், 2019

“இந்தியாவின் ஒரே மொழி இந்தி”...அமித்ஷாவின் அடாவடித்தனம்!!!

இன்று இந்தி தினமாம்.

‘இந்தியாவில் பேசப்படும் மற்ற மொழிகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. ஆனால், இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும். அப்போதுதான் உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும்’ என்று டிவிட்டரில் அமித்ஷா கருத்துப் பதிவு செய்திருப்பதாக.....
சற்று முன்னர்வரை[14.09.2019 காலை 08.30 மணி] ‘நியூஸ் 18’ தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுக்கொண்டிருக்கிறது.

இந்தி மட்டுமே இந்தியாவின் ஒரே மொழியாதல் வேண்டும் என்பது உள்துறை அமைச்சரின் மொழி வெறியை அம்பலப்படுத்துகிறதே தவிர, அவருக்கு வாய்த்துள்ள அறிவுடைமையை அல்ல.

இந்திக்கு மட்டும் அந்தத் தகுதி வாய்த்தது எப்படி என்று இவரோ, இவரைப் போன்ற வெறியர்களோ ஒருபோதும் விவரித்துச் சொன்னதில்லை. பொய்க் கணக்கைக் காட்டி அது இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி என்று பிறமொழிக்காரர்களை முட்டாள்கள் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

பெரும்பான்மை மொழி என்பதற்காக ஒரு மொழியை மட்டும் இந்தியாவின் ‘ஒரே மொழி’யாக ஏற்பதற்கு மற்ற மொழி பேசும் இனத்தவர் அறிவீனர்கள் அல்ல.

இந்தியை நாட்டின் ஒரே மொழியாக ஆக்கி இந்தியாவை அடையாளப்படுத்துகிறாராம் அமித்ஷா. ஏன்? இன்றளவும் மற்ற நாட்டினரால் இந்தியாவை அடையாளம் காண இயலவில்லையா?

இந்தியை இந்தியாவின் ஒரே மொழியாக்கி, இந்தியாவை இந்தியாவாக அல்ல, ‘இந்தி நாடு’ என்று அடையாளப்படுத்தட்டும். நமக்கு மறுப்பு ஏதும் இல்லை. ஆனால்....

அந்த இந்தி நாட்டில் தமிழ்நாடு போன்ற தாய்மொழி போற்றுவோரின் மாநிலங்கள் உள்ளடங்கியிருக்குமா என்பது இமாலயக் கேள்வி.

இதற்கான பதில் அமித்ஷாவுக்குத் தெரியும்!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக