பக்கங்கள்

ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

தேன் சிந்தும் வேப்ப மரம்!!!

பதிவுக்கு இப்படியொரு தலைப்பைக் கொடுத்து எதையேனும் கிறுக்கி வைத்தால் நீங்கள் உள்நுழைந்து வாசிக்க முற்படுவீர்களா? 

நிச்சயமாக இல்லை.

நீங்கள் சிந்திக்கத் தெரிந்தவர். வேப்ப மரத்தில் தேன் வடியாது; பால்[நாம் குடிக்கிற பால் அல்ல] வடியும். அது இயல்பானது என்பது உங்களுக்கு அத்துபடியாய்த் தெரியும்.

உங்களை ஒத்தவர்கள் இந்த நாட்டில் வெகு சிலரே. மற்றபடி, எங்கெங்கு காணினும் முட்டாள்களே நீக்கமற நிறைந்துள்ளனர்.

இந்த உண்மையைப் புரிந்து வைத்திருக்கும்  ஊடகக்காரர்கள்.....

எங்கேனும் ஒரு வேப்ப மரத்தில் பால் வடிந்தால், ‘இன்ன ஊரில் வேப்ப மரத்தில் பால் வடிகிறது. மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று குழுமி, மரத்துக்குப் பூஜை செய்து வழிபடுகிறார்கள்’ என்று செய்தி  சொல்லி/ வெளியிட்டுப் பத்திரிகையின் விற்பனையை அல்லது, தொ.கா.வின் பார்வையாளர்களை அதிகரிக்க முயல்கிறார்கள். 

வேப்பங்காயைப் பறித்தால் பால் சிந்துவதைக் கண்கூடாகக் காணலாம். அந்தப் பால்தான் அதிக அளவில் ஊறும்போது மரத்தின் கிளையிலும் அடிமரத்திலும் வெளிப்பட்டு வழிகிறது.

இது தெரிந்திருந்தும், வேப்ப மரத்தில் பால் வடிவது ஓர் அதிசயம் என்பதாகச் செய்தி வெளிட்டு, மக்களை மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டுவிடாமல் தடுக்கிறார்கள் ஊடகக்காரர்கள். மூடர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருந்தால் இவர்களின் காட்டில் தொடர்ந்து மழை பெய்துகொண்டிருக்கும்!

“வேப்ப மரத்தில் பால் வடியாமல் தேனா வடியும் முட்டாள்களே?” என்று கேட்டு இவர்களைச் சாடுவதற்கு இங்கு யாரும் இல்லை என்பது மிகப் பெரிய சோகம்.

அரசும் கண்டுகொள்வதில்லை. காரணம்.....

ஊடகங்களின் ஆதரவு இவர்களுக்கு நிரந்தரத் தேவையாக இருப்பதுதான்!
=================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக