திங்கள், 11 நவம்பர், 2019

நான் ‘பிஸ்கட்’ வாங்கிய கதை!

ரு பிஸ்கட் பாக்கெட்டைக் கையில் எடுத்துக்கொண்டு கடைக்காரரிடம், “எவ்வளவுங்க?” என்றேன்.

“பதினேழு ரூபா” என்றார் பேருந்து நிலையக் கடைக்காரர்.

பாக்கெட்டை உற்றுப் பார்த்துவிட்டு, “பதினஞ்சுதானே போட்டிருக்கு” -நான்.

“எங்களுக்கு லாபம் வேண்டாமா?”

“பிஸ்கட் கம்பெனி கமிஷன் தருதில்ல, அப்புறம் என்ன?”

“இதோ பாருங்க மிஸ்டர், நாங்க விற்கிறது பதினேழுக்குத்தான். இஷ்டம்னா வாங்குங்க. இல்லேன்னா இடத்தைக் காலி பண்ணுங்க.”

மனைவியை அங்கேயே நிற்கச் சொல்லிவிட்டு அடுத்த கடைக்கு இடம் பெயர்ந்தேன்.

முந்தைய கடையில் விலை கேட்ட அதே மாதிரியான பிஸ்கட் பாக்கெட்டைத் தொட்டுக் காட்டி அங்கும் விலை கேட்டேன்.

“பதினேழு ரூபா” என்றார் கடைக்காரர்.

“பதினஞ்சுதானே போட்டிருக்கு?” - நான்.

“ஆமா. இந்த விலைக்கு வெளியே இருக்கிற கடைக்காரங்க தருவாங்க. இது பஸ் ஸ்டாண்டு. ஏலம் எடுத்தவரிடம் உள் வாடகை கொடுத்து நாங்க கடை நடத்துறோம். பொருளின் வெளி விலையை விடவும் கூடுதலா வித்தாத்தான் ஏதோ கொஞ்சம் லாபம் பார்க்க முடியும். புரிஞ்சுக்குவீங்கன்னு நினைக்கிறேன்” என்றார் அவர்.

ரூபா பதினேழைக் கொடுத்துவிட்டு, பாக்கெட்டுடன் மனைவி இருந்த இடத்தை அடைந்தேன்.

பாக்கெட்டைப் பார்த்துக்கொண்டே “என்ன விலை கொடுத்தீங்க?” என்றாள் என் மனைவி.

“பதினேழு.”

“இங்கேயே வாங்கியிருக்கலாமே?” 

“இவர் கொடுக்கத் தவறிய மரியாதையை அவர் கொடுத்தார். அதனால அங்கே வாங்கினேன்” என்று நான் விவரம் சொன்னபோது, “ரொம்பச் சரி” என்றாள் என்னவள்.
===================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக