தேடல்!

நடுவணரசில் இந்தி & இந்துமத வெறியர்களின் ஆதிக்கம் நீடிக்கும்வரை இந்தியும், இறந்த மொழி சமஸ்கிருதமும் போற்றப்படுவதும் நீடிக்கும்!

Feb 19, 2015

தமிழ்ப் பதிவர்களுக்கு என் பணிவான பத்துப் பரிந்துரைகள்!

ஆங்கிலத்தில் எழுதும்போது அல்லது பேசும்போது பிழை நேர்ந்துவிடுமோ  என்று அஞ்சுகிறோம். போதிய மொழிப் புலமை இல்லையெனில், எழுதுவதையும் பேசுவதையும் தவிர்த்துவிடுகிறோம். இந்த மனப்போக்கு, நம் தாய்மொழியாம் தமிழைப் பயன்படுத்தும்போது நம்மில் பெரும்பாலோர்க்கு இல்லை என்பது கசப்பான ஓர் உண்மை.

நான் எழுதும் தமிழிலும் பிழைகள் உள்ளன. எனினும், நண்பர்களின் கணிசமான பதிவுகளில் கண்களை உறுத்துகிற அளவுக்கு அவை கூடுதலாகத் தென்படுவதை மனதில் கொண்டு இந்தப் பத்துப் பரிந்துரைகளை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

பரிந்துரைகள்:

ஒன்று:
பதிவு எழுதி முடித்தவுடன், கருத்துப் பிழைகள் உள்ளனவா என்பதைச் சோதிப்பது போலவே, ஒரே ஒரு முறையேனும் சொற்பிழை, தொடர்ப்பிழை போன்ற மொழிப் பிழைகள் உள்ளனவா என்பதையும் சோதித்துவிடுங்கள்.

இரண்டு:
நாம் கையாளும் சொல்லின் அமைப்பு குறித்து ஐயம் எழுந்தால்[ஆவனமா, ஆவணமா? முந்தானையா, முந்தாணையா? என்பன போல] சோம்பலுக்கு இடம் தராமல், தமிழ் அகராதியைப் புரட்டிவிடுங்கள். கைவசம் இல்லையெனில் ஒன்று வாங்கிவிடுங்கள்.  தமிழில் பதிவெழுதிப் பிரபலம் ஆக ஆசைப்படு கிற நாம் அதை வாங்கத் தயங்கலாமா?

ஐயப்பாட்டுக்குரிய சொல்லைக் கூகிள் தேடலில் தட்டச்சு செய்வதன் மூலமும்[வரிசைகட்டும் பதிவுகளின் தலைப்புகளை வைத்து] அது பிழையானதா, அல்லவா என்பதை அறிய முடியும்.

மூன்று:
கருத்துகளைச் சிறு சிறு [simple sentence] வாக்கியங்களாக எழுதுவதன் மூலம் தொடர்ப் பிழைகள் நேர்வதைத் தவிர்க்கலாம். கலப்பு வாக்கியங்களைப் பயன்படுத்தும்போது, ஒருமை பன்மை மயக்கம், எழுவாய் பயனிலை முரண்பாடு போன்றவை இடம்பெற வாய்ப்பு உண்டு.

நான்கு:
ஒரு கருத்துக்கு ஒரு பத்தி[paragraph] என்ற முறையைக் கையாளுங்கள். அடுத்த ஒரு கருத்தைச் சொல்லும்போது, அடுத்த பத்திக்குத் தாவிவிடுங்கள்.

பத்திகள் சிறியனவாக அமைவது வாசிப்போரின் சிரமத்தைக் குறைக்கும் என்பதை மறக்கவே வேண்டாம்.

ஐந்து:
சிலருடைய பதிவுகளில் மிக மிகக் குறைவான பிழைகள் இடம்பெற்றிருப்பதை, அல்லது, பிழைகளே இல்லாமலிருப்பதைக் கருத்தூன்றிப் படிப்பதன் மூலம் அறியலாம். அத்தகையோரின் பதிவுகளைத் தவறாமல் வாசித்தால், அது உங்கள் மொழி நடையைச் செம்மைப்படுத்தும்.

திரு.வி.கல்யாண சுந்தரனார், மு.வரதராசனார் போன்ற தமிழறிஞர்களின் நூல்களை வாங்கி வைத்து, அவற்றை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் படிப்பது மிகுதியும் பயனளிக்கும் என்பதை நம்புங்கள்.

ஆறு:
சந்திப் பிழைகளை முற்றிலும் தவிர்ப்பதென்பது மிக மிக மிகப் பெரும்பாலோர்க்கு சாத்தியமில்லை. வார்த்தைகளை வாயால் உச்சரித்துப் பார்ப்பதன் மூலமும் முடிவு செய்யலாம்.

வாழை + பழம்......இவை இணையும்போது ‘ப்’ சேர்ப்பது அவசியம் என்பது புரியும்.

என்று + சொன்னான்....இவற்றை இயல்பாகச் சொல்லும்போது, ‘ச்’ தேவையில்லை என்பதை அறியலாம். ‘என்றுச் சொன்னான்’ என்று வராது. இலக்கணம் பயின்றவர்களையே திணறடிப்பது இந்தச் சந்தி! இதன் பொருட்டு வெகுவாக அலட்டிக்கொள்ள வேண்டாம்.

ஏழு:
 ‘பிழையின்றித் தமிழ் எழுதுவது எப்படி?’ என்ற தலைப்பிலான பதிவுகளைக் கூகிளில் தேடி அறிந்து, வாய்ப்பு அமையும்போது வாசிக்கலாம்.

எட்டு:
பதிவின் தலைப்பையும் சில ஆரம்ப வரிகளையும் மீண்டும் மீண்டும் கவனமாகப் படித்துப் பிழைகளை அகற்றிவிடுங்கள். திரட்டியில் இணைத்த பிறகு அவற்றைத் திருத்த வாய்ப்பில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஒன்பது:
பதிவுகளில் இடம்பெறும் கருத்துகள் பற்றிப் பின்னூட்டம் இடுகிறோம். அது போலவே, பதிவில் இடம்பெறும் மொழிப் பிழைகள் குறித்தும் பின்னூட்டம் இடுவதைப் பதிவர்களாகிய நாம் வழக்கம் ஆக்கிக்கொள்ளலாம். பிழை சுட்டப்படுவதை எவரும் கௌரவப் பிரச்சினையாக எண்ணுதல் கூடாது.

பத்து:
நல்ல கருத்துகளைப் பதிவிடுவதன் மூலம் நம் தாய்மொழி வாழவும் வளரவும் உதவுகிறோம். அது போலவே, பிழை நீக்கி எழுதுவதாலும் அது வாழுகிறது...வளருகிறது என்பதை ஒருபோதும் மறத்தல் ஆகாது.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பிழை காணின் மன்னியுங்கள்; திருத்துங்கள்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++