புதன், 3 ஜூன், 2015

புனித கங்கை தீப்பற்றி எரிந்த கதை!!!

இயற்கையை மனிதன் எந்த அளவுக்குக் காயப்படுத்தியிருக்கிறான் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணமாக இருக்க முடியும்.

நாம் எல்லோரும், கங்கை ஒரு புனித நதி என்றும், அதில் குளித்தால் அத்தனை பாவங்களும் கரைந்துபோகும் என்றும் நம்புகிறோம். மத ரீதியாக வெவ்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், அறிவியல் ரீதியாக, கங்கை நதி இமய மலையில் உற்பத்தியாகும் இடத்திலிருந்து மூலிகைச் செடிகளைக் குளிப்பாட்டி அடித்துக்கொண்டு வருவதால் அந்த நீர் மருத்துவ குணங்கள் உடையதாக இருக்கிறது என்பதே உண்மை.

அந்தக் கங்கை ஒருமுறை தீப்பற்றி எரிந்த கதை எத்தனை பேருக்குத் தெரியும்?
சூழ்நிலை பாதிப்பால் ஆக்ராவில் இருக்கும் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் தன் வெண்மை நிறத்தை இழந்து பழுப்பு நிறமாக மாறி வருகிறது என்பதை நாம் அறிவோம். ஆனால், மனிதர்கள் செய்யும் அடாவடித்தனங்களால் நதிகளில்கூட தீப்பிடிக்கும் என்பதை உலகிற்கே நாம் காட்டிக்கொடுத்திருக்கிறோம்.

1980ஆம் ஆண்டில் ஒரு நாள் இது நடந்தது. யாரோ ஒருவர் கொளுத்திப் போட்ட தீக்குச்சியால் ஏற்பட்ட பெரு நெருப்பு ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குக் கங்கை நதியின் மீது பரவிக் கொழுந்துவிட்டு எரிந்த துயரமான வரலாற்று நிகழ்ச்சி அது!

நதியோரமாக இருந்த இரண்டு தொழிற்சாலைகள் கங்கை நீரில் தங்கள் கழிவுகளைத் தாராளமாக கலந்துவிட்டுக் கொண்டிருந்தன. இந்தக் கழிவில் இருந்த வேதிப் பொருள்கள் கங்கை நதி நீரில் படலமாக மிதந்துகொண்டிருந்தன. தீப்பொறி பட்டதும் நதி நீர் 7 மீட்டர் உயரத்துக்குக் கொழுந்துவிட்டு எரிந்தது! இந்தத் தீயை அணைப்பதற்கு மூன்று மணி நேரத்துக்கு மேல் தீயணைப்புத் துறையினர் போராடினார்கள். இது நடந்தது புனித நகரமாகக் கருதப்படும் ஹரித்துவாருக்கு அருகில்தான்.
கங்கை மட்டுமல்ல, நம் நாட்டிலிருக்கும் அனைத்து நதிகளும் இது போன்ற ஆபத்தை எதிர்நோக்கித்தான் இருக்கின்றன.

மண்ணை அடி ஆழம்வரை சுரண்டி, கழிவுகளைக் கொட்டி நதிகளையெல்லாம் சென்னையின் கூவம் போல மனிதர்கள் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலை நீடித்தால், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் பழைய நதிகளின் படங்களை மாட்டி வைத்து, அவற்றின் முன்னால் ஆடிப்பெருக்குப் படையல் போடும் காலம் விரைவில் வரும் என்பதில் சந்தேகமில்லை.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

இந்தக் கட்டுரையை வழங்கிய ‘சிதம்பரம் ரவிச்சந்திரன்’[விஞ்ஞானச் சிறகு, ஜூன், 2015] அவர்களுக்கு மிக்க நன்றி. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக