வெள்ளி, 5 ஜூன், 2015

கோயில்களில் ஆபாசச் சிலைகள் வடித்தெடுக்கப்பட்டது ஏன்?! [பழசோ பழசு]

##கோயில்கள் ‘உடலுறவு மையங்கள்’ ஆக இருந்தன என்றால், அதிர்ச்சி அடைய வேண்டாம். மேலே படியுங்கள்##
சிவலிங்க வடிவத்தின் ‘தத்துவம்’ உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

இறைவனின் பிறப்பு உறுப்பு இறைவியின் பிறப்பு உறுப்புடன் இணைந்த கோலம் அது.

இது வெறும் ‘புனைந்துரை’;  நாத்திக வாதிகளால் பரப்பப்பட்டது என்று நம் மக்களில் பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நம்பிக்கை பொய்யானது.

இது, உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த மக்களின் நம்பிக்கையாக இருந்தது என்பது மனம் கொள்ளத்தக்கது.

எகிப்தியர்களின் ‘ஓசிரசு’, ‘ஏசீசு’ போன்ற கடவுள்கள் மனிதப் பிறப்பு உறுப்புகளின் வடிவம் கொண்டவைதானாம்.

சிந்துவெளி நாகரிகத்தின்  பண்பாட்டில், உடலுறவு வழிபாட்டுக்கு முக்கியத்துவம் இருந்திருக்க வேண்டும். அவர்களுடைய ‘சிஸ்ன’ தேவ வழிபாடுதான் பிறகு சிவலிங்க வழிபாடாக உருமாற்றம் பெற்றது என்கிறார்கள்.

மனிதர்கள், ஆறாவது அறிவு பெற்ற காலக்கட்டத்தில், உலகின் தோற்றம் குறித்துச் சிந்திக்கத் தலைப்பட்டார்கள்.

உயிர்களில், ஆணும் பெண்ணும் இணைந்து இன்பம் துய்ப்பதன் விளைவாகப் புதிய உயிர் தோன்றுவதைக் கண்ட அவர்கள், ஆகாயம் என்னும் ஆண் கடவுளும், பூமி என்னும் பெண் கடவுளும் இணைந்து உடலுறவு சுகம் அனுபவித்ததன் விளைவே உலகத் தோற்றம் என்னும் முடிவுக்கு வந்தார்கள்.

அந்தக் கடவுளை வழிபடுவதற்கு காட்சிப் பொருளாக உள்ள ஓர் வடிவம் தேவைப்பட்டது. இறைவனின் பிறப்பு உறுப்பும் இறைவியின் பிறப்பு உறுப்பும் இணைந்த கோலத்தை வடிவமைத்து வழிபடத் தொடங்கினார்கள்.

பின்னர் அதைத் தாங்கள் எழுப்பிய கோயில்களில் இடம்பெறச் செய்தார்கள்; விழாக்கள் நடத்தி மகிழ்ந்தார்கள்.

உலக மக்களில், அவரவர் சமூக பண்பாட்டு நிலைக்கேற்ப உடலுறவு நடைபெறும் மையங்களாக அக்கோயில்கள் ஆயின.

பாபிலோனியாவில் உள்ள பல பழைய கோயில்களில் உடலுறவு நிகழ்ச்சி விழாவின் முக்கிய சடங்காகவும் ஆக்கப்பட்டது.

நம் நாட்டுக் கோயில்களிலும்  உடலுறவு நிகழ்ச்சிகள்  ஒரு காலத்தில் இடம் பெற்றிருந்திருக்கக்கூடும் என்கிறார்கள் அறிஞர்கள்.[ஆதாரம்: ‘யுக்தி தர்ஷன்’ என்னும் தலைப்பிலான மலையாள நூல். தமிழில், ’ ‘மதமும் பகுத்தறிவும்’, முதல் பதிப்பு ஜூலை 2004, சூலூர் வெளியீட்டகம், கோவை-641402]

கோயில்களில் உள்ள, காம இச்சையைத் தூண்டும் சிற்பங்களும் இசைப் பாடல்களும், முன்பிருந்த தேவதாசி முறையும் இக்கருத்துக்கு வலுச் சேர்க்கின்றன என்று சொல்கிறார்கள்.
ஆக, இறை தரிசனத்திற்காகக் கோயிலுக்கு வருவோருக்குக் காமக் கலையைக் கற்றுத் தருவதற்காகவே, அல்லது கற்றுத் தருவதற்காகவும் ஆபாசச் சிற்பங்கள் வடிக்கப்பட்டன என்பது தெரிகிறது. 

எது எப்படியோ, பழங்காலச் சூழலில், பகுத்தறிவு வளர்ச்சி பெறாத காலக் கட்டத்தில்..........
கற்பனை செய்த கடவுள்களின் பிறப்பு உறுப்புகளை வழிபட்டதும், அவற்றைக் கோயில்களில் இடம் பெறச் செய்து விழாக்கள் எடுத்து ஆனந்தப் பரவசத்தில் மூழ்கியதும், பெரும் குற்றங்கள் எனக் கூற இயலாது என்பதே என் கருத்து.

உங்கள் கருத்து எதுவாயினும் வருகை புரிந்தமைக்கு என் மனம் நிறைந்த நன்றி.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக