திங்கள், 1 ஜூன், 2015

நீங்கள் ‘குங்குமம்’ வார இதழ் வாசகரா? இதைப் படிக்க வேண்டாமே!

“வேண்டாம்” என்று தடுத்தும் உள்ளே நுழைகிறீர்களா? நன்றி...நன்றி!


கதை:                                               தப்புக் கணக்கு

இதழ்:                                              குங்குமம்[08.06.2015]


“பெருமாயி, நீ செங்கல் எடுத்துட்டு வா. காளியம்மா, நீ கலவை போடு” என்று உத்தரவு போட்ட மேஸ்திரி பெரியசாமி, மீனாட்சியைப் பார்த்ததும் தொண்டையில் தேன் தடவிக்கொண்டு, “அதோ அந்த வேப்ப மர நிழலில் ஜல்லி உடைக்கிறது உன்னோட வேலை” என்றார்.
மனம் குமுறினாள் பெருமாயி. பெரியசாமியை எரித்துவிடுவதுபோல் முறைத்துவிட்டு நகர்ந்தாள்.

நண்பகல் சாப்பாடு முடிந்து, காளியம்மாவும் மீனாட்சியும் மணல் குவியலின் மீது சரிந்து அரைத் தூக்கத்தில் ஆழ்ந்திருக்க, வெற்றிலை குதப்பிக்கொண்டிருந்த பெரியசாமியை நெருங்கினாள் பெருமாயி.

“நானும் பார்த்துட்டுத்தான் இருக்கேன். கொஞ்ச நாளாவே வயசான எங்களுக்குக் கடுசான வேலையைக் குடுத்துட்டு அந்த மீனாட்சி கொமரிக்கு மணல் சலிக்கிறது, ஜல்லி உடைக்கிறதுன்னு இடுப்பு வளையாம நிழல்ல செய்யுற வேலைகளாத் தர்றியே, நியாயமா?” என்றாள் கோபத்துடன்.

“அடடா, உனக்குத் தெரியும்னு நினைச்சேன் பெருமாயி. மீனாட்சியை அடுத்த வாரம் பொண்ணுப் பார்க்க வர்றாங்க. அவ ஏற்கனவே கறுப்பு. வெயிலில் வேலை செஞ்சா இன்னும் கறுத்துட மாட்டாளா? அதான் நிழல்லையே வேலை வாங்குறேன். அதுக்குள்ள தப்புக் கணக்குப் போட்டுட்டியே!” என்றார் மேஸ்திரி வருத்தமாக.

“சேச்சே...உன்னை எனக்குத் தெரியாதா?” என அசடு வழிந்தாள் பெருமாயி.

*****************************************************************************************************************************************************
குங்குமம் இதழுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக