எனது படம்
பதிவுகளில் இடம்பெறும் கருத்துகளும் விமர்சனங்களும் வாசிப்பாளர்களைச் சிந்திக்கத் தூண்டுவனவாக அமைதல் வேண்டும் என்பது என் முதன்மை நோக்கம். எவரொருவரையும் திருத்துவதையோ, அவர்தம் மனங்களை நோகடிப்பதையோ நோக்கமாகக் கொண்டவை அல்ல. நான் தொடர்ந்து பதிவுகள் எழுதுவது என் நினைவாற்றலைத் தக்கவைப்பதற்காகவும், ஓய்வு நேரத்தைப் பயனுடையதாக ஆக்குவதற்காகவும் என்பதும் அறியத்தக்கது.

செவ்வாய், 9 டிசம்பர், 2025

பொல்லாத வெறிநாய்க் கடி நோய்(Rabies) இல்லாத நாள் வருமா?

இன்றளவும் 'வெறிநாய்'க் கடிக்கு ஆளாகி இறப்போர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. ஆயினும், இது குறித்த விழிப்புணர்வு நம் மக்களிடம் போதுமான அளவு இல்லை என்றே சொல்லலாம்.

எனவே, வெறிநாயிடம் தென்படும் அற்குறிகளை அனைவரும் அறிந்துகொண்டிருப்பது மிக மிக அவசியம்.

அறிகுறிகள்:

*ரேபிஸ்(Rabies) கிருமிகளால் தாக்கப்பட்ட நாய் காரணம் இல்லாமலே குரைக்கும். அது ஊளையிடுவதுபோல் இருக்கும்.

*ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும்.

*காண்போரையெல்லாம் துரத்திக் கடிக்கவரும்.

*அதன் நாக்கு வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் தொங்கிக்கொண்டிருக்கும்.

*அதன் வாயிலிருந்து எந்நேரமும் எச்சில் ஒழுகியவாறிருக்கும்.

*சில வெறிநாய்கள் தெருமுனைகளில் தனியாகவும் அமைதியாகவும் இருப்பதுண்டு.

*உணவு உண்ணாது; இந்நாய் பெரும்பாலும் 10 நாட்களில் இறந்துவிடும்.

இந்த அறிகுறிகளைக் கண்டிப்பாகச் சிறுவர் சிறுமியரிடம் சொல்லி எச்சரிக்கை செய்வது பெற்றோரின் தலையாய கடமை ஆகும்.

'வெறிநாய்'க் கடி குறித்த சில செய்திகள்:

*வெறிநாய் கடித்தால், ரேபிஸ்(Rabies) நோயின் அறிகுறிகள் 5 நாட்களுக்குப் பின்னர் தெரியவரும்; 90 நாட்களுக்குப் பிறகும்கூடத் தென்படலாம்.

*இதன் முதல் அறிகுறி நாய் கடித்த இடத்தில் வலி உண்டாகும்; காய்ச்சல் அடிக்கும்; வந்தி வரும்; உணவு உண்ண இயலாது.

*நோய் தாக்கியவர்களுக்கு ‘விழுங்கு தசை’கள்[தொண்டையில்] இறுக்கமடைவதால், சுவாசம் நிற்கிற உணர்வு ஏற்படும். உயிர்போகுமோ என்னும் அச்சத்தில் நோய் பாதித்தவர்கள் தண்ணீர் குடிக்கமாட்டார்கள்[இதற்கு ‘ஹைட்ரோபோபியா’ என்று பெயர்].

நோய் வரும் வழி:

வெறிநாயின் உமிழ்நீரில் ரேபிஸ்(Rabies) வைரஸ்கள் இருக்கும். அது மனிதரைக் கடிக்கும்போது, காயத்தின் வழியாக இந்தக் கிருமிகள் உடலுக்குள் புகுந்துவிடும். 

சிகிச்சை:

முன்பெல்லாம் தொப்புளைச் சுற்றி 14 ஊசிகள் போடுவார்கள். இப்போதெல்லாம் நவீனத் தடுப்பூசிகள் வந்துவிட்டன. ஐந்தே ஊசிகளில்[தவணைகளில்] ரேபிஸ்(Rabies) நோய் தாக்காமல் தடுத்துவிடுகிறார்கள்.

                             *   *   *   *   *

***மேற்கண்ட குறிப்புகள் மருத்துவ இதழொன்றில் இடம்பெற்றவை.