எனது படம்
இந்தத் தளத்தின் பதிவுகளில் இடம்பெறும் கருத்துகளும் விமர்சனங்களும் வாசிப்பாளர்களைத் திருத்துவதையோ, அவர்தம் மனங்களை நோகடிப்பதையோ நோக்கமாகக் கொண்டவை அல்ல. இவை அவர்களைச் சிந்திக்கத் தூண்டுவனவாக அமைதல் வேண்டும் என்பது என் விருப்பம். நான் பதிவுகள் எழுதுவது என் நினைவாற்றலைத் தக்கவைப்பதற்காகவும், ஓய்வு நேரத்தைப் பயனுடையதாக ஆக்குவதற்காகவும் என்பதும் அறியத்தக்கது.

வெள்ளி, 7 மார்ச், 2025

எல்லாம் வல்ல கடவுள் குறித்துக் கொஞ்சம் ‘ஏடாகூட’க் கேள்விகள்!!!

டைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில் புரிபவர் கடவுள்  என்பார்கள்.

[எப்பங்க வருவார்?}

எல்லா உலகங்களையும்[மொத்த எண்ணிக்கை யாருக்கும் தெரியாது] முதல் தடவையாக எப்போது படைத்தார்?

பதில்: “தெரியாது.”[அவதாரங்கள், மகான்கள் உட்பட எவருக்கும்]

ஒரே தடவையில் ஒட்டு மொத்தமாகப் படைத்தாரா, அல்லது தொகுதி தொகுதியாகவா?

“தெரியாது.”

தான் படைத்த உலகங்களை, அழியாமல் தானே காப்பாற்றுகிறாராம். சரி. படைப்பதற்கு முன்னால் தனிப் பெரும் சக்தியாக இவர் மட்டுமே இருந்தார்; படைத்தார். இவர் படைத்த உலகங்களை யாரால் அழிக்க முடியும்? அப்புறம் எதற்கு ‘காத்தல்’ தொழில்?

“தெரியாது.”

உலகங்களைப் படைத்த கடவுள் ஒரு கட்டத்தில் அவைகளை அழித்து விடுகிறாராம். ஏனாம்?

பதில்: அதர்மம் தலை விரித்தாடும்போது அழிப்பு வேலையைச் செய்கிறார் என்பார்கள் ஆன்மிகர்கள்.

அன்பே உருவான, அறிவுக் கடலான, சாந்த சொரூபியான இந்தக் கடவுளின் படைப்பில் அதர்மம் நுழைந்தது எப்படி? அது உருவானது எப்படி?

எப்படியோ தோன்றித் தொலைத்துவிட்டது. அதன் அட்டூழியம் அதிகரித்தபோதுதான் கடவுள் விழித்துக் கொண்டார் என்றால் அதுவரை என்ன செய்து கொண்டிருந்தார்?

விழிப்புப் பெற்றவர், அதர்மத்தை மட்டும் அழித்துவிட்டு, ஆனந்தத் தாண்டவம் ஆட வேண்டியதுதானே? ஒட்டு மொத்த உலகங்களையும் ஏன் அழிக்கிறார்?

ஒரு முறை அழித்தால் போதும்தானே? உலகங்களோடு சேர்ந்து அதர்மமும் அழிந்துவிடும்தானே? மீண்டும் மீண்டும் படைத்தவற்றை அழிக்கும் அவசியம் ஏன் ஏற்பட்டது?

ஒரு முறை கடவுளால் அழிக்கப்பட்ட அதர்மம் எப்படியோ தப்பித்து, எங்கேயோ பதுங்கியிருந்திருக்கலாம். எங்கே?

கடவுளின் காலடியிலா?!

இப்படிக் கேள்விகளை நாம் அடுக்கிக் கொண்டே போகும் அவசியம் ஏன் நிகழ்ந்தது?

இன்றைக்கும் கடவுள், தர்மம், அதர்மம் என்று, ஊடகங்களில் ‘ஆன்மிகர்கள்’ எழுதும் கட்டுக் கதைகள் ஏராளம்; மேடைகளில் செய்யும் பிரச்சாரங்கள் அளவிறந்தவை. இம்மாதிரிக் கதைகளையும் பரப்புரைகளையும் நம் மக்கள் நம்பித் தம் சிந்திக்கும் அறிவைச் சீரழியவிடுதல் கூடாது என்பதற்காகத்தான்.

வாழ்க ‘பசி’பரமசிவம்![ஹி...ஹி...ஹி!!!]