எனது படம்
இந்தத் தளத்தின் பதிவுகளில் இடம்பெறும் கருத்துகளும் விமர்சனங்களும் வாசிப்பாளர்களைத் திருத்துவதையோ, அவர்தம் மனங்களை நோகடிப்பதையோ நோக்கமாகக் கொண்டவை அல்ல. இவை அவர்களைச் சிந்திக்கத் தூண்டுவனவாக அமைதல் வேண்டும் என்பது என் விருப்பம். நான் பதிவுகள் எழுதுவது என் நினைவாற்றலைத் தக்கவைப்பதற்காகவும், ஓய்வு நேரத்தைப் பயனுடையதாக ஆக்குவதற்காகவும் என்பதும் அறியத்தக்கது.

வியாழன், 11 டிசம்பர், 2025

பாரதியின் ‘பகற்கனவு’ பலிக்குமா? எப்போது?

“தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதி.

கோடிக்கணக்கில் மனிதர்கள் வாழும் உலகில் ஒரே ஒருவனுக்கு உணவில்லை என்பதற்காக, ஒட்டுமொத்த உலகையும் அழிப்பதென்பது அறிவுடைமை ஆகுமா?

அறிவுடைமை ஆகாது என்பது பாரதிக்கும் தெரிந்திருக்கும்.

பட்டினிச் சாவின் கொடூரத்தை முழுமையாக அனுமானித்ததன் விளைவாகவே இப்படிப் பொங்கியிருக்கிறார்.

ஒரு தனி மனிதன் முதுமை காரணமாகவோ, தீராத நோய்களின் தாக்குதல் காரணமாகவோ மரணிப்பதை எவராலும் தடுக்க இயலாது. ஆனால், பட்டினியால் சாவதைத் தடுப்பது சாத்தியம்.

மனித இனம் அதைத் தன் தலையாய கடமையாகக் கருதிச் செயல்படுதல் வேண்டும்.  செயல்படத் தவறினால், அது இருந்துகொண்டிருப்பதைக் காட்டிலும் அழிவதே மேல் என்பது பாரதியின் எண்ணம். எனவேதான்.....

“ஜகத்தினை அழித்திடுவோம்” என்று கொந்தளித்துக் குமுறியிருக்கிறார்.

அந்தப் பாரதி இன்று இல்லை.

ஆனாலும், அவர் விட்டுச்சென்ற அக்கினி வார்த்தைகள் உயிர்ப்புடன் இருப்பதால், காலப்போக்கில் புரட்சி மனம் படைத்தப் புதியப் புதியப் பாரதிகள் தோன்றுவார்கள்; “பட்டினிச் சாவு இல்லாத புதியதோர் உலகம் செய்வோம்” என்று விண்ணதிர முழக்கமிடுவார்கள்.

இது மக்கள் அனைவரின் மனங்களிலும் எதிரொலிக்கும்.

ஆதிக்க வெறி, மத வெறி, பக்தி வெறி, இன வெறி என்று மனித இனத்தைச் சீரழிக்கும் வெறித்தனங்கள் அழிந்தொழிய, மனித நேயமும், உயர் பண்புகளும், நற்குணங்களும் செழித்து வளரும்.

இதன் விளைவாக, உண்ண உணவில்லை என்று எவரும் வருந்தும் அவலம் இல்லாமல்போகும். ‘பட்டினிச் சாவு’ என்பது மனித இனம் அறிந்திராத  ஒன்றாக ஆகும்.

மனிதாபிமானக் கவிஞன் பாரதியின் நினைவு மக்கள் மனங்களில் என்றென்றும் நிலைத்திருப்பதாக!
                                   *   *   *   *   *
***சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882[பிறந்த நாள்] – 11 செப்டம்பர் 1921[விக்கிப்பீடியா].