புதன், 13 நவம்பர், 2024

எதிரிகளை[ஊழல்வாதிகள்]த் தலைகீழாய்த் தொங்கவிடும் அமித்ஷா! அவர் எப்போது...?

//ஜார்க்கண்ட் மாநிலம் பாக்மாராவில் பிரசாரம் செய்த அமித்ஷா, மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், நிலக்கரி கடத்தல் நிறுத்தப்படும் என்றார்; ஊழல் செய்த அரசியல் தலைவர்களை எல்லாம் தலைகீழாகத் தொங்கவிடுவோம் என ஆவேசமாகத் தெரிவித்தார்// =செய்தி.

பேசியிருப்பவர் பிரதம மோடியின் வலது இடதுக் கரங்களாக இருப்பவரும், அமைச்சரவையில் 2ஆம் இடம் வகிப்பவரும் ஆன உள்துறை அமைச்சர் அமித்ஷா.

ஆம், அமித்ஷா என்னும் அமைச்சரேதான்.

ஊழல் பேர்வழிகளைக் கண்டறிந்து, அவர்களின் ஊழலை அம்பலப்படுத்தித் தண்டனை பெற்றுத் தருவதற்கான[அமலாகத்துறை, காவல்துறை, நீதிமன்றம் போன்றவற்றின் உதவியுடன்] முழு அதிகாரம் பெற்றிருக்கும் இவர், தன்னிச்சையாக ஊழல்வாதிகளைத் தலைகீழாகத் தொங்கவிடுவோம் என்று பேசியிருக்கிறார்.

எங்கே தொங்கவிடுவார்?

மரக்கிளைகளிலா, தூக்குமரத்திலா, மக்கள் காணும் வகையில் பொது இடங்களிலா?

அம்மணமாகவா, உடுத்திய ஆடையுடனா?

ஏராள அதிகாரங்கள் படைத்த அமைச்சர் என்பதால் மனம்போன போக்கில் இப்படிப் பேசியிருக்கிறார்.

இவரின் பதவிக்காலம் முடிந்து நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில்[உத்தரகாண்ட் ஒரு சுண்டைக்காய் மாநிலம்] இவரின் அரசியல் எதிரிகள் ஆட்சியைக் கைப்பற்றினால்.....

“ஊழல் பெருச்சாளி அமித்ஷாவைப் பொது இடத்தில், மக்கள் கண்டு கண்டு ரசிக்கும் வகையில், அம்மணமாகத் தொங்கவிடுவோம்” என்று எவரோ ஓர் எதிராளி பேசினால் அது தவறாகுமா?

இவர் அமித்ஷாவா, அடாவடி ஷாவா?!

செவ்வாய், 12 நவம்பர், 2024

ஆங்கிலத்தில்[நாடாளுமன்றத்தில்] கேள்வி கேட்டால் அடி உதை!?!?!


மேற்கண்ட ஊடகச் செய்தியின்படி, ஆங்கிலத்திலோ பிற இந்திய மொழிகளிலோ கேள்விகள் கேட்டால் இந்தியில் மட்டுமே பதிலளிப்பதில் ‘இந்தி’ய அமைச்சர்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இது பெரிதும் வரவேற்கத்தக்கது; இந்தியர்கள் அனைவரும் மகிழ்ந்து பாராட்டுவதற்கு உரியது.

இந்தி அலுவல் மொழி அல்ல எனினும், இந்தியாவில் பெரும்பான்மையோரால் பேசப்படுகிறது என்று சொல்லப்படுவதும், அறிவியல் துறையில் உலகம் கண்டிராத பெரும் வளர்ச்சி கண்டிருப்பதுமான இந்தியை இந்தியக் குடிமக்கள் அனைவரும் கற்றிருப்பது மிகவும் அவசியம்.

நடாளுமன்ற உறுப்பினர்களைப் பொருத்தவரை இந்தியைப் பிழையறப் பேசுவதும் எழுதுவதும் மிக மிக மிக அவசியம்.

குறிப்பாக, நாடாளுமன்றக் கூட்டங்களில் அவர்கள் பங்கு பெறும்போது மறந்தும் ஆங்கிலத்தில்[பிற மொழிகளிலும்] பேசுவது மன்னிக்கக் கூடாதது மட்டுமல்ல, தண்டனைக்குரிய குற்றமும் ஆகும்.

எனவே, ‘இந்தி’யர் அல்லாதவர் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பும்போது ‘இந்தி’ய அமைச்சர்கள் இந்தியில் மட்டுமே பதில் அளிப்பதைக் குறைகூறும் கேரள நாட்டுக்காரரின் செயல் கண்டிக்கத்தக்கது.

இப்போது இந்தியில் மட்டுமே பதிலளிக்கும் ஒன்றிய அமைச்சர்கள், வருங்காலத்தில் ஆங்கிலத்திலோ இந்தி அல்லாத மொழிகளிலோ கேள்வி கேட்பவர்களை அசிங்கமான வார்த்தைகளால் சாடுவதோடு, கையில் கிடைக்கும் ஆயுதங்களால்[மைக் போன்றவை] தாக்குதல் நடத்தவும்கூடும்.

இவ்வாறான தாக்குதல்களே, இந்தி தெரிந்தவன்தான் உண்மையான இந்தியன் என்பதை உணரச் செய்யும்.

ஒருவேளை.....

‘இந்தி’யர் அல்லாதவர்கள்[தன்மானம், சூடு, சொரணை எல்லாம் இருந்தால்] ஒருங்கிணைந்து இந்தியாவை இரண்டாக[இந்தியர்-அல்லாதவர்] உடைக்கும் நோக்கத்துடன் போராடினால், வலிமை வாய்ந்த நம் ராணுவத்தை ஏவி, அவர்களை அடக்கி ஒடுக்கிவிடலாம் என்பதை ‘இந்தி’ய அமைச்சர்களுக்கு நினைவூட்டுகிறோம்.

வாழ்க இந்தி! வளர்க ‘இந்தி’யரின் ஆதிக்கம்!!

ஞாயிறு, 10 நவம்பர், 2024

தில்லைத் ‘தில்லுமுல்லு’த் தீட்சிதன்கள்!!!

சிதம்பரம் கோயிலின் கனகசபை[நடராசர் சிலை இடம்பெற்றிருக்கும் ‘சிற்றம்பலம்’ எனப்படும் மேடை] மீது ஏறி நின்று நடராசரைத் தரிசனம் செய்யவிடாமல் பக்தர்களுக்குத் தீட்சிதன்கள் இடையூறு செய்துவரும் நிலையில், அது தொடர்பான வழக்கில் அவன்களைக் கண்டிக்கும் வகையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த ஆணை ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

ஆணையின் இறுதிப் பகுதியில்.....

‘ஆறு காலப் பூஜைக்கான நேரங்கள் தவிர்த்து, மற்ற நேரங்களில் பக்தர்களை அனுமதிப்பது குறித்தான விவரங்களை 14.11.2024க்குள் தீட்சிதன்கள் தரப்பு தாக்கல் செய்திடல் வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

நீதிபதிகளின் ஆணைக்கிணங்க தீட்சிதன்கள் சார்பில் விவர அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் அதில்.....

//வேதாகமங்களில் சொல்லப்பட்ட வழிமுறைகளின்படி, இனி ஆறுகாலப் பூஜைகளில் ஒவ்வொரு பூஜைக்கான நேரமும் அதிகரிக்கப்படுகிறது. இக்காரணத்தால், காலையில் கோயில் திறக்கப்பட்டதிலிருந்து இரவில் மூடப்படும்வரை ஆறுகாலப் பூஜைகள் இடைவெளியின்றித் தொடர்ந்து நடைபெறும். எனவே, பக்தர்கள் கனகசபை மீது ஏறி நின்று நடராசரை வழிபடுவது சாத்தியமே இல்லை//

இப்படியானதொரு பதிலைத் தீட்சிதன்கள் முன்வைத்தால், “வேதமாவது ஆகமமாவது, எங்கள் உத்தரவுக்கான பதிலை உடனடியாகச் சமர்ப்பிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் ஆணையிடுவார்களா?

ஆணையிட்டாலும், நாட்டின் உச்சநிலை அதிகாரம் படைத்தவர்களின் ஆதரவைப் பெற்றிருக்கும் தீட்சிதன்களை அந்த ஆணை கட்டுப்படுத்துமா?

ஊஊஊஹூஹூஹூம்!!!

ஆறுகாலப் பூஜைகள்:

1. உஷத்[?!] காலம் – காலை 6:00 மணி[இனி, காலை 6.00 >8.00]

2. கால சந்தி[?!] – காலை 8:00 மணி[இனி, காலை 8.00>பகல் 12.00]

3. உச்சிக்காலம் – பகல் 12:00 மணி[இனி பகல் 12.00>மாலை 6.00 மணி]

4. சாய ரட்சை[?!] – மாலை 6:00 மணி[இனி மாலை 6.00>இரவு 8.00]

5. இராக்காலம் – இரவு 8:00 மணி[இனி இரவு 8.00>இரவு 10.00 மணி]

6. அர்த்த ஜாமம் – இரவு 10:00 மணி[இனி இரவு 10.00>இரவு 12.00 மணி]

***நடராசர் கோயில் தீட்சிதன்களுக்கே சொந்தம் என்னும்போது, பூஜைக்கான புதிய கால அளவின்படி தீட்சிதன்கள் பூஜை செய்வதை எவரும் கண்காணித்தல் இயலாது!

சனி, 9 நவம்பர், 2024

மோடியின் சபதமும்[காஷ்மீர் ‘தனித் தகுதி’ தொடர்பானது] தீராத நம் மனக்கவலையும்!!!

 


370ஆவது சட்டப்பிரிவு[சிறப்பு அந்தஸ்து] மீண்டும் அமல்படுத்துவது சரியா, அல்லவா என்பது பற்றிக் கருத்துரைப்பது இப்பதிவின் நோக்கம் அல்ல; அது குறித்துப் பிரதமர் மோடி எடுத்துள்ள சபதத்தின் பின்விளைவுகள் குறித்து ஆராய்வது, அல்லது நம் கவலையைப் பதிவு செய்வது மட்டுமே.

தனி உரிமை கோரி காஷ்மீர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இப்படியொரு சபதத்தை நம் பிரதமர் உலகறியச் செய்திருக்கிறார்.

சபதம் மேற்கொண்டதில் தவறே இல்லை. 

“நான் பிரதமர் பதவியில் இருக்கும்வரை...” என்று சொல்லியிருந்தால் அது முழுக்க முழுக்க நடைமுறை சாத்தியமானதாக இருந்திருக்கும்; அவரோ, “நான் உயிரோடு இருக்கும்வரை...” என்று குறிப்பிட்டிருக்கிறாரே அங்குதான் இடறியிருக்கிறார்.

74 வயதினரான மோடி 100 வயதுவரை[“அவர் நீடூழி வாழ்க” என்று வாழ்த்துவோம்] வாழ்வது 100% உறுதி என்றால், அதுவரை, அதாவது, மேலும் 26 ஆண்டுக் காலம் அவரே இந்த நாட்டின் பிரதமராக நீடிப்பது இயலுமா?

இயலும் என்றால்.....

வயது 100 முடிந்து[மேலும் பல்லாண்டுகள் வாழ்க] பிரதமராகவே மரணிக்கும்வரை 370 சட்டப் பிரிவு மீண்டும் அமலாக்கப்படாது என்று உறுதியாக நம்பலாம்.

ஆனால்.....

அவர் உயிர் வாழும்போதே பதவி இழக்க நேரிட்டுப் பிறிதொரு கட்சி நாட்டை ஆள நேர்ந்து, 370 சட்டப் பிரிவு அமலாக்கப்பட்டால் அதைத் தடுக்க மோடி போராட்டம் நடத்துவார்[?]. அது பிசுபிசுத்துப்போனால், சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ள நேரலாம்.

அப்போதைய ஆளும் கட்சி அதை அலட்சியப்படுத்தினால் மோடியின் நிலை?

அனுமானம் செய்யவே மனம் அஞ்சுகிறது.

எனவே, நம் பிரதமரிடம் நாம் மனப்பூர்வமாய் வேண்டிக்கொள்வது.....

இனியும் ஒரு முறை சபதம் மேற்கொள்ளுங்கள். அது, “நான் பிரதமர் பதவியில் இருக்கும்வரை.....” என்று திருத்தப்பட்ட சபதமாக இருந்திடட்டும்!

வெள்ளி, 8 நவம்பர், 2024

இந்த இஸ்லாம் பெண்ணின் துணிச்சல் வரவேற்கத்தக்கதா, வருந்தத்தக்கதா?

ண்டைக் காலங்களில் ஆடை உடுத்துவதில் கடும் கட்டுப்பாடுகளுக்கு உள்ளானார்கள் பெண்கள்[மத வேறுபாடின்றி].

ஆடவரைக் காட்டிலும் தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் இயல்பாகவே அதிக நாட்டம் கொண்ட பெண்கள் ஆடை விசயத்தில் கட்டுப்படுத்தப்பட்டது மிகப் பெரும் அநீதியாகும்.

காலப்போக்கில், ஆடவர்கள் மனம் திருந்திவந்த நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பெரும்பாலான பெண்கள் தாங்கள் விரும்பியவாறு ஆடை உடுத்தும் உரிமையைப் பெற்றார்கள்.

அந்த உரிமையைச் சிறிய அளவிலேனும் வழங்காத ஒரு நாடு ஈரான்[பிற இஸ்லாம் நாடுகள் வழங்கிய சுதந்திரத்தில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன].

கட்டுப்பாட்டை மீறும் பெண்கள் கடும் தண்டனைக்குள்ளானார்கள்.

கடந்த 2022ஆம் ஆண்டில் மாஷா அமினி என்ற பெண், ஹிஜாப் அணியும் முறையைச் சரியாகப் பின்பற்றவில்லை என்பதால் கடுமையாகத் தாக்கிக் கொல்லப்பட்டார்.

இந்த அடக்குமுறைக்கு ஈரான் பெண்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். ஆங்காங்கே போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்றன. ஈரான் அரசு அடக்குமுறையைத் தளர்த்தவில்லை.

ஒரே கடவுள் கொள்கையைப் பின்பற்றும் இஸ்லாமியர்களிடம், இந்துமதத்துடன் ஒப்பிடும்போது மூடநம்பிக்கைகளும் குறைவு. எனினும்.....

ஆபாசம் என்பது முழுக்க முழுக்க உடுத்தும் ஆடை சார்ந்தது அல்ல; அது உடுத்தும் விதத்திலும், உற்றுநோக்குவோரின் அசிங்கப் பார்வையிலும் உள்ளது என்பதை இஸ்லாம் மதவாதிகள்[வெறியர்கள்?] புரிந்துகொள்ளாதது பேரதிசயம் ஆகும்.

ஓரளவுக்கேனும் ஆடை விசயத்தில் தங்களின் பெண்களுக்குச் சுதந்திரம் அளித்து அதன் விளைவுகள் குறித்து ஆராய்ந்தார்களா என்றால், இல்லை.

பெண்களை அடக்கி அடக்கி முடக்கி முடக்கி வைத்து, அதனால் அவர்கள் படும் துன்பங்களை ரசித்து இன்பம் காண்கிறார்களோ என்னும் சந்தேகம் எழுகிறது.

இவர்களின் கொடுஞ்செயல்களால் கடும் கோபத்திற்குள்ளான ஈரான் பெண்களுக்கிடையே, முறையாக ஹிஜாப் உடுத்தாததால் இழிவுபடுத்தப்பட்டுத் தாக்குதலுக்கும் உள்ளான ஒரு பெண்[மாணவி] அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஹிஜாப் உள்ளிட்ட ஆடைகள் அனைத்தையும் கழற்றிவிட்டு உள்ளாடையுடன் பல்கலைக்கழக வளாகத்தில் அனைவரும் பார்க்கும்படி நடமாடினார் என்பது உலக அளவில் பெரும் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது[https://twitter.com/i/status/1852804642549252363 -கிளிக்[video].

இந்நிகழ்வை அங்கிருந்த மாணவர்கள் சிலர் வீடியோ எடுத்துப் பிறருடன் பகிர்ந்ததால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. அந்த மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்[https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/the-hijab-issue-a-student-who-walked-into-the-college-without-wearing-a-dress-124110300033_1.html].


கைது செய்யப்பட்ட மாணவி, ஏற்கனவே ஹிஜாப் சரியாக உடுத்தாததால் ஒரு பெண்[மாஷா அமினி]கொல்லப்பட்டது போல் கொல்லப்படுவாரா, உலகெங்கும் உள்ள இரக்கக் குணம் கொண்ட இஸ்லாமியர்கள் கிளர்ந்தெழுந்து அவளைக் காப்பாற்றுவார்களா?


முடிவை அறிய, உலகில் உள்ள நல்ல உள்ளம் கொண்ட அத்தனைப்பேரும் காத்திருக்கிறார்கள்!

வியாழன், 7 நவம்பர், 2024

இனமானம் காக்கும் மாவீரன் ஹேமந்த் சோரன் வாழ்க! வெல்க!!

 ஜார்கண்ட் இந்தியாவின் ஒரு மாநிலம் என்பதை ஏற்றுக்கொண்டிருக்கும் ஹேமந்த் சோரன், “ஜார்கண்ட் மாநிலம் இங்குள்ள பழங்குடியினருக்குத்தான் சொந்தம். இதை அவர்கள்தான் ஆட்சி செய்வார்கள்” என்கிறார்.

இவ்வாறு அவர் உரிமை முழக்கம் செய்யக் காரணம் என்ன? 

இந்தியா என்பது பல மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட பல இன மக்களின் விருப்பத்தின் பேரில், அவர்கள் வாழும் மாநிலங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, ‘இந்தியா’ என்னும் நாடு[ஆங்கிலேயரால் அடித்தளம் இடப்பட்டது] உருவாக்கப்பட்டது. அனைத்திந்திய மக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி ஆட்சி செய்ய அனுமதிக்கப்பட்டது.

இந்து வெறியை வளர்த்து ஆட்சியைக் கைப்பற்றிய இந்து வெறிப் ‘பாஜக’வினர், மாநிலங்களுக்கான அதிகாரங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிப்பதோடு, இந்தியை மட்டுமே[+சமஸ்கிருதம்] வளர்த்தும் திணித்தும் பிற மொழிகளை அழித்து, மாநிலத்தவரின் இன உணர்வுகளை மழுங்கடித்து, இந்து வெறியர்களான தங்களின் ஆட்சியே இந்த நாட்டில் நீடிப்பதற்கான காரியங்களை வெகு துரிதமாகச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

இவர்களின் இந்த அடாத செயலைத் தட்டிக் கேட்டுத் தடுத்து நிறுத்த முயலும் இனப் பற்றாளர்களைப் பொய் வழக்குகள் போட்டு அடக்கி ஒடுக்குகிறார்கள்.

இதைக் கருத்தில்கொண்டுதான் ஜார்கண்ட் மாநிலம் பழங்குடியினருக்கே சொந்தம்; அவர்களே அங்கு ஆட்சி செய்வார்கள் என்று உலகறிய உரிமைக் குரல் எழுப்பியிருக்கிறார் ஹேமந்த் சோரன்.

ஹேமந்த் சோரனைப் பின்பற்றி,   ‘இந்தி’யர் அல்லாத பிற இன மக்கள் வாழும்[பெரும்பான்மையாக] மாநிலங்களை ஆளும் தலைவர்களும், “நாங்கள் இந்து வெறியர்களின் அடிமைகள் அல்ல; எங்கள் மாநிலத்தை எங்கள் இன மக்களே ஆளுவார்கள்” என்று முழக்கமிடுதல் வேண்டும். “அடக்கு முறைகளைக் கையாண்டால் பொங்கியெழுந்து போராடுவோம்” என்று எச்சரிக்கை செய்வதும் மிக அவசியம்.
                             *   *   *   *   *
***“ஜார்கண்ட் மாநிலம் பழங்குடியினருக்குச் சொந்தமானது, அதை அவர்கள்தான் ஆளுவார்கள்” -https://www.dinakaran.com/jharkhand_hemant/

புதன், 6 நவம்பர், 2024

நீங்கள் மனிதரா மிருகமா?!

கீழ்வரும் காணொலியை முழுவதும் பாருங்கள்.

பார்க்க முடிந்தவர்கள் எதையும் தாங்கும் மன வலிமை வாய்க்கப் பெற்றவர்கள்.

பார்த்து முடித்த பிறகு, தேடுபொறியில் ‘வேட்டையாடும் விலங்குகள்’, 'hunting animals and killing'  என்பன போன்ற தலைப்புகளை உள்ளிட்டால், இது போன்ற ஏராளமான குலைநடுங்கச் செய்யும் கொடூரக் காணொலி நிகழ்வுகளை[பக்கவாட்டில் வரிசைகட்டுபவை உட்பட]க் காணலாம்[பொறாமை, சூதுவாது, வஞ்சகம், ஆதிக்க வெறி என்று ஏராளமான தீய குணங்களின் இருப்பிடமான மனிதர் வாழ்வில் இடம்பெறும் பயங்கர நிகழ்வுகள் கற்பனைக்கு எட்டாதவை].

அவற்றைக் கண்டு  கல்நெஞ்சக்காரர்களும் கதிகலங்குவார்கள்; மனம் பதறுவார்கள். காணுகிற அத்தனைப் பேரின் நிலையும் இதுதான்.

விளைவு.....

அவர்கள், கருணை வடிவானவன் என்று கதைக்கப்படும் கடவுள் மீதான நம்பிக்கையை முற்றிலுமாக இழப்பார்கள்[உயிர்கள் சித்ரவதைக்கு உள்ளாகக் காரணம் அவை செய்த பாவங்கள் என்பவர்கள் படு அயோக்கியர்கள். பாவம் செய்யத் தூண்டுபவர் யார் என்பதற்கு அவர்களிடம் பதில் இல்லை].

நம்பிக்கை இழக்காமல், ஆகச் சிறந்த பக்தராகக் கோயில் கோயிலாக ஒருவர்  அலைவாரேயானால்.....

அவர் மனித உருவில் நடமாடும் மனசாட்சியே இல்லாத மிருகம் ஆவார்.

நான் மிருகம்[கடவுள் மறுப்பாளன் என்பதெல்லாம் வெளி வேடம்!]

நீங்கள் மனிதரா மிருகமா?!

“பசுத் தொழுவத்தில் படுத்து ‘அதை’ச் செய்தால்...” -‘பாஜக’ அமைச்சர்!

கீழ்வரும் நகல் பதிவு  ‘தினத்தந்தி’ நாளிதழின் ‘கேள்வி-பதில்’ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உலக அளவில் எங்குத் தேடினாலும் ‘பாஜக’வினரைப் போன்ற முட்டாள்ளைக் கண்டுபிடிப்பது சாத்தியமே இல்லை என்பதற்கு இதுவும் ஓர் ஆதாரம்.


நல்லவேளை, “தினமும் பசுத் தொழுவத்தில் ஆணும் பெண்ணுமாய்ப் படுத்து அந்தரங்கச் சுகம் அனுபவித்தால், புற்றுநோய் மட்டுமல்ல வேறு எந்தவொரு நோயும் குணமாகிவிடும்”[ஹி... ஹி... ஹி!!!] என்று உளறிவைக்கவில்லை!

‘பாஜக’காரர்கள் பசுவைப் புனிதமானதாக்கி[கோமாதா] நம்மைப் படுத்தும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. 

மக்கள் நினைத்தால் அனைத்துத் தேர்தல்களிலும் பாடம் கற்பித்து இவர்களைத் திருத்தலாம்.

செய்வார்களா? 

செவ்வாய், 5 நவம்பர், 2024

குறைந்தபட்ச அரசியல் சாசன அறிவு இல்லாதவரா பிரதமர் மோடி?!?!

 


வங்காள தேச ஊடுருவல்காரர்களால் ஜார்கண்ட் மாநிலத்தின் பூர்வீகக் குடிமக்களான பழங்குடியினர் எண்ணிக்கை சரிவதாக[ஊடுருவல்காரர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது] மனம் நொந்து பேசியிருக்கிறார் நம் பெருமதிப்பிற்குரிய பிரதமர் மோடிஜி அவர்கள்.

மோடி தரும் இந்தத் தகவல் மிகச் சரியனதாகவே இருக்கலாம். மாற்றுக் கட்சிக்காரர்கள்கூட இதை ஏற்பார்கள் எனலாம்.

ஆனால்,

அந்த ஊடுருவலுக்கு உடந்தையாக இருப்பவர்கள் முக்திமோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் என்கிறாரே அங்கேதான் சறுக்கியிருக்கிறார் உலகப் புகழ் பிரதமர்.

ஒரு நாட்டின் எல்லையைப் பாதுகாப்பது முழுக்க முழுக்க ஒன்றிய அரசின்[இந்தியா] பொறுப்பாகும்.

அதாவது, ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகியவற்றை இயக்கும் அதிகாரம் நம் பிரதமராம் மோடி கையில் உள்ளது[பாதுகாப்பு அமைச்சர் இவரின் உடன்பாடு இல்லாமல் எதுவும் செய்ய இயலாது].

ஆகவே, ஜார்கண்ட் மாநிலத்திற்குள் வங்காள தேசத்தினர் ஊடுருவாமல் தடுப்பது ஒன்றிய அரசின் தலைவரான மோடிக்குரிய கடமை ஆகும்.

நாட்டின் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தத் தவறிய மோடி, முக்தி மோர்ச்சா முதலான அரசியல் கட்சிகள் மீது குற்றம் சாட்டியிருப்பது நகைப்பிற்குரியது.

அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள ஒன்றிய அரசுக்கான அதிகாரங்களை முழுமையாக அறிந்துகொள்வது நம் பிரதமருக்கு மட்டுமல்ல, இந்த நாட்டிற்கும் நல்லது.

வாழ்க மோடி! வளர்க இந்தியா!!
                             
                                                *   *   *   *   *
பரிந்துரை:
புறக்கணிக்கப்பட்ட சரஸ்வதி, துர்க்கா ஆகிய பெண் சாமிகளுக்காக மோடி வெகுவாகக் கவலைப்படுகிறார். அவர் கவலையில் நாமும் பங்குகொள்வோம்! ஹி... ஹி... ஹி!!!

சனி, 2 நவம்பர், 2024

வடக்கன்களின் அடங்காத மொழிவெறி ஆட்டம்!!!

கீழ்க்காணும் விளம்பரம் இடம்பெற்றிருப்பது நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில்[நேற்று சுற்றுலா சென்றபோது பதிவு செய்யப்பட்டது].

ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் சாலைப் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டதற்கான விளம்பரம் இது.

இந்த விளம்பரத்திற்கு, ‘பிரதமரின் கிராமச் சாலைப் பராமரிப்புத் திட்டம்’ என்றே தலைப்புக் கொடுத்திருக்கலாம். அதைத் தவிர்த்து.....

‘பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா என்று பெயரிட்டிருக்கிறான்கள் இந்தி[சமஸ்கிருதம்?] வெறியன்கள். 

அரசியல் சாசனப்படி தேசிய மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ ஆக்கப்படாத இந்தியை அலுவல் மொழி என்று சொல்லிக்கொண்டு நாட்டின் பட்டிதொட்டிகளிலெல்லாம்  பரப்பிக்கொண்டிருக்கிறான்கள்.

இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லாததே இவன்களின் அட்டூழியம் தொடர்வதற்கான காரணம் ஆகும்.

இம்மாதிரியான அடாவடித்தனங்கள் தொடர்ந்தால் தமிழ் முதலான திராவிட இனத்து மொழிகள் முற்றிலுமாய் அழிந்தொழியும் என்பது நிச்சயம்.

இந்தி அல்லாத பிற மொழியினர் தங்களின் மொழி காத்திட அதி தீவிரமாகச் செயல்பட வேண்டிய தருணம் இது.

செயல்படுவார்களா?!

வெள்ளி, 1 நவம்பர், 2024

இந்தியா ஒரே நாடு! ‘ஒரேஏஏஏ ஒரு’ தேர்தல் போதும் மோடிஜி!!

“ஒரே நாடு ஒரே தேர்தல்’ஐ விரைவில் நடத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது” -மோடி[ஊடகச் செய்தி.

“இப்படியும் ஒரு பிரதமரா!” என்று வியந்து ஒட்டுமொத்த உலகமும் அண்ணாந்து பார்க்கும் நரேந்திர மோடி அவர்களுக்கு நம் பணிவான விண்ணப்பம்:

ஒரே நாடு ஒரே தேர்தல்’ முழக்கம் இனி வேண்டாம். 'ஒரேஏஏஏ ஒரு தேர்தல்'[இதன் பிறகு இந்தியாவில் தேர்தலே நடத்தக்கூடாது] மட்டும் நடத்துங்க மோடிஜி!! 

காரணங்கள்:

*உலக வரலாற்றில், கற்பனையான புராணக் கதைமாந்தர்க்கு உயிரூட்டிப் பக்தி வளர்த்து அதற்கு உரம் சேர்த்த பிரதமர் உங்களைப் போல் வேறு எவருமில்லை. 

*அத்தனை உலக நாடுகளுக்கும் உலா சென்றுவந்து, அவற்றுடனான ஒட்டுறவை மேம்படுத்திய உங்களை எத்தனைப் பாராட்டினாலும் அதற்கான தகுதி படைத்தவர் தாங்கள்.

*உலக நாடுகளின் தலைவர்களில், நாளும் வேளைக்கொரு ஆடை(விலைமதிப்பற்றவை) உடுத்து உலகச் சாதனை நிகழ்த்தியவர் தாங்கள் மட்டுமே.

*கோடானுகோடி செலவு செய்து இந்தியையும் சமஸ்கிருதத்தையும் வளரக்கத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தாலும், பிற இந்திய மொழிகளையும்(குறிப்பாகத் தமிழ்) உயிருக்குயிராய் நேசிப்பது போல் 'பீலா' விடுவதில் உங்களுக்கு இணை நீங்களே. 

*உலக அளவில் 110 கோடிப்பேர்[ஐ.நா.அறிக்கை] வறுமையில் வாடும் நிலையில், அவர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இருக்க[இந்தியாவில் அதிகம்], உங்களின் ஆட்சியில் இந்தியா பிரமிக்கத்தக்க வளர்ச்சி கண்டுள்ளது என்று கூச்சநாச்சமே இல்லாமல், பீத்திக்கொள்ளும் உங்களின் துணிச்சல் வியக்கத்தக்கது.

இப்படி, இன்னும் பல அசாத்தியத் திறமைகளின் இருப்பிடமான தாங்களே தங்களின் ஆயுட்காலம்வரை இந்தியாவை ஆண்டு இதற்கு மேலும் மேலும் பெருமை சேர்த்திடல் வேண்டும் என்பதால்.....

இந்தியாவில் ‘ஒரேஏஏஏ ஒரு’ தேர்தலை மட்டும் நடத்தி, பிற கட்சிகளின் தயவு இல்லாமல் ஆட்சியைக் கைப்பற்றி[அதற்கான உத்திகளையும் உபாயங்களையும் அத்துபடியாய்த் தெரிந்துகொண்டிருப்பவர் நீங்கள்] அதன் பிறகு இங்குத் தேர்தலே நடைபெறாத நிலையைத் தாங்கள் உருவாக்கிட வேண்டும்[நடந்தாலும் தங்கள் கட்சியே வெற்றி பெறுதல் வேண்டும்]; தாங்களே ஆயுட்காலப் பிரதமராக இருந்து இந்தியாவை உலகின் நம்பர் 1 வளர்ந்த நாடாக மேம்படுத்த வேண்டும்.

வாழ்த்துகள் ஆயுட்காலப் பிரதமர் ஆகவிருக்கும் இந்தியப் பிரதமர் அவர்களே!

https://tamil.samayam.com/latest-news/india-news/pm-narendra-modi-says-we-are-now-working-on-one-nation-one-election-scheme/articleshow/114818583.cms