திங்கள், 25 நவம்பர், 2024

ஸ்டாலின் ஆணவப் பேச்சும் அன்புமணியின் அடங்காத கடுங்கோபமும்!!!

“ஸ்டாலின் அதானியைச் சந்தித்தது ஏன்?” என்று வன்னியர் குலக் காவல் தெய்வம் ராமதாஸ் கேட்டாராம். “ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை” என்று ஸ்டாலின் ஆணவமாக[ஆணவமா?!]ப் பதில் சொன்னாராம்.

பொங்கியெழுந்தார் ராமதாஸின் தவப்புதல்வன் அன்புமணி. “சமூகச் சீர்திருத்தவாதியாம் ராமதாசை அசிங்கப்படுத்திய ஸ்டாலின் மன்னிப்புக் கேட்க வேண்டும். தவறினால், உணர்ச்சிவசப்பட்டிருக்கும் ‘பாமக’ தொண்டர்களைக் கட்டுப்படுத்த இயலாது” என்று சீறியிருக்கிறார்[‘news தமிழ்’ செய்தி. 25.11.2024 பிற்பகல் 2.45].

அன்புமணியை ஆதரிப்பதோ கண்டிப்பதோ நம் நோக்கமல்ல.

‘தொண்டர்களின் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது’ என்று சொல்லியிருக்கிறாரே, உணர்ச்சியைக் கட்டுப்படுத்த இயலாத நிலையில் தொண்டர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் அவர் சொல்லியிருத்தல் வேண்டும்.

“ஸ்டாலினை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்புங்கள்; ஊரூருக்குப் போராட்டம் நடத்துங்கள். ஸ்டாலின் போகுமிடமெல்லாம் வாகனத்தை வழிமறித்து அடித்து நொறுக்குங்கள்[கட்டுப்படுத்த இயலாத உணர்ச்சிக்கு உள்ளானவர்கள் செய்யும் செயல் அடித்து நொறுக்குவதுதான்]” -அன்புமணி இப்படிச் சொல்ல நினைத்திருப்பாரோ? சொல்லவில்லை. சொல்லியிருந்தால்.....

அவர் கைது செய்யப்பட்டுக் கம்பி எண்ண வேண்டியிருக்கும் என்பதால் தொண்டர்களைத் தூண்டிவிடுவதோடு நிறுத்திக்கொண்டார்.

தொண்டர்கள் தடியடிபடலாம்; சிறைக்குச் சென்று வதைபடலாம். அவையெல்லாம் ‘பாமக’வின் வளர்ச்சிக்காக அவர்கள் செய்யும் தியாகம்.

தொண்டர்களின் தியாகத்தில்தானே கட்சிகள் வளர்ச்சி அடைகின்றன! தலைவர்கள் ஆதாயம் பெறுகிறார்கள்!!

பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்களைக் கொண்டது ‘பாமக’. அன்புமணி அதன் தலைவர்[அறிக்கைவிடுவது மட்டுமே ராமதாஸின் பணி].

அவர் வாழ்க! வளர்க!!