எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

திங்கள், 25 நவம்பர், 2024

ஐயப்பனுக்கு ஆங்கிலம் அத்துபடி!!!

//'ஐ யம் சாரி ஐயப்பா... நான் உள்ளே வந்தால் என்னப்பா...' என்ற கானா பாட்டைப் பாடிய இசைவாணி மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. ஐயப்பன் மற்றும் கடவுள் நம்பிக்கையை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது//[தினமலர்].

உலகங்களைப் படைத்து[கடவுள் ஒருவரே என்னும் கொள்கையின்படி], அனைத்து உயிர்களையும் படைத்து, அவற்றில் குறிப்பிடத்தக்க மனித இனத்தை உருவாக்கி, ஆயிரக்கணக்கான மொழிகளை மனிதர்களுக்கு வழங்கியருளியவரும் ஐயப்பனே[அனைத்து மொழிகளையும் அறிந்தவர் அவர் மட்டுமே].

உலக மொழிகளில் ஆங்கிலமும் ஒன்று.

எனவே, ஐயப்பனை முன்னிலைப்படுத்தித் தமிழில் கானாப் பாடல் பாடும்போது, “ஐ யாம் சாரி ஐயப்பா” என்று ஆங்கிலத்தில் தொடங்கியிருப்பதைக் குற்றம் சொல்பவர்கள் சிறுமதியாளர்கள்.

‘என்னப்பா’ என்னும் சொல்லாட்சியும், கடவுள்களை நினைவுகூரும்போதெல்லாம் பக்தர்கள் பயன்படுத்துகிற ஒன்றுதான்.

எடுத்துக்காட்டு.....

“கடவுளே நான் என்னப்பா[‘என்னய்யா என்பதும் வழக்கில் உள்ளது] பாவம் பண்ணினேன்.”

“அடக் கடவுளே” -துயரத்தின் எல்லையைக் கடக்கும்போது அவரை இப்படி அவமரியாதைக்கு உள்ளாக்குவதும் உண்டு.

ஆகவே.....

கானாப் பாடல் பாடிய இசைவாணியை இழித்துரைப்பவர்கள் இழிகுணத்தவர்கள் என்பது அறியத்தக்கது!


“ஐயப்பா நீ பொய்யப்பா? என்று கடவுள் மறுப்பாளர்கள் ஐயனை மட்டம்தட்டியபோதும் அவர் கோபித்துக்கொண்டது இல்லை!!

வாழ்க இசைவாணி! என் அப்பன் ஐயப்பனும் வாழ்க!!

* * * * *

https://www.dinamalar.com/news/tamil-nadu-news/ghanaian-singer-kusumbu-controversy-over-dragging-ayyappan-into-a-frenzy-/3789194