செவ்வாய், 26 நவம்பர், 2024

உருமாறும் தண்ணீரும் கண்ணீரை வரவழைக்கும் கடவுள் ஆராய்ச்சியும்!!!

“கடவுள் எங்கே இருக்கிறார்?” -இது பொதுவாகக் கேட்கப்பட்ட/படும் கேள்வி.

இதற்கான ஒரு பதில்[இணையத் தேடலில் சில நாட்களுக்கு முன்பு வாசித்தது]:

1.கொஞ்சம் தண்ணீரை எடுத்து ஒரு கோப்பையில் ஊற்றுங்கள்.

முடிவு - தண்ணீர் கோப்பையின் வடிவத்தைப் பெறுகிறது.

2.அதே தண்ணீரைக்  குளிர்சாதனப் பெட்டியின் உறையும் தட்டில்[ஐஸ் ட்ரே] ஊற்றுங்கள்.

விளைவு - நீர் ஐஸ் கட்டிகளாக மாறுகிறது.

3.இப்போது ஐஸ் கட்டிகளை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொதிக்க வையுங்கள்.

விளைவு - நீர் நீராவியாக மாறுகிறது.

உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நீர் வெவ்வேறு வடிவங்களை எடுத்தது. 

இந்த உதாரணத்தின் மூலம், “கடவுள் எங்கே இருக்கிறார்?” என்னும் கேள்விக்கு, “கடவுள் நாம் காணும் பொருளிலெல்லாம் இரண்டறக் கலந்திருக்கிறார்” என்று பதிலளிக்கப்பட்டிருக்கிறது..

காணும் பொருள்களில் எல்லாம் அவர் கலந்திருப்பது இருக்கட்டும், கடவுள் என்றொருவர் இருப்பது[தண்ணீர் இருப்பது போல்] உண்மை என்பதை இதைப் போன்றதொரு பரிசோதனையின் மூலம் நிரூபித்தவர் உண்டா?

“இல்லை... இல்லை... இல்லவே இல்லை.

கடவுள் இருப்பதே உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர் எங்கும் இருக்கிறார்; எதிலும் இரண்டறக் கலந்திருக்கிறார்; அருள் வடிவானவர் அவர்; அனைத்தையும் இயக்குபவரும் அவரே என்பவை போல் ஆளாளுக்குக் கதையளப்பதால் அணுவளவும் பயனில்லை.

“அவர் தோன்றியது எப்படி? அனைத்தையும் படைத்து இயக்குகிற ஆற்றல் அவருக்கு மட்டும் வாய்த்தது எப்படி?” 

இப்படியெல்லாம் எத்தனைப் பேர் கேட்டாலும், எத்தனை யுகங்களுக்குக் கேட்டாலும் விடை கிடைக்காது.

விடை கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டால், கண்களில் கண்ணீர்தான் வழியும்! ஹி... ஹி... ஹி!!!