புதன், 27 நவம்பர், 2024

இவன்களால்[இந்து பரிஷத் & இ.முன்னணியினர்] இந்துமதம் அழியும், வெகு விரைவில்!!!

 ‘புனிதம்’ என்பதே பக்தி வேடம் புனைந்தவர்கள் கட்டிவிட்ட கதை.

பொது இடங்களாகட்டும், கோயில்களாகட்டும் அசுத்தம் நீக்கித் தூய்மை பரமரிக்கப்படுதல் மிக அவசியம்.

மனித மனமும் இதற்கு விதிவிலக்கல்ல. 

மனத் தூய்மை இல்லாதவர்கள் கறுப்பு, காவி என்று ஆடை உடுத்துவதால் பயன் ஏதும் இல்லை. 

கறுப்பும் காவியுமாக ஆடை உடுத்துவதால் கொஞ்சமேனும் மனம் தூய்மை பெறும் என்றால் அது வரவேற்கத்தக்கதே.

எம்மதத்தவராயினும், எவ்வினத்தவராயினும் மனத்தில் களங்கம் படியாமல் தன்னை வழிபட வருபவர்களை அய்யப்பன்[இருந்தால்] வரவேற்கவே செய்வான்.

இதில் மாறுபட்ட கருத்துகளுக்கு இடமே இல்லை.

மலை உச்சியில் வாசம் செய்பவன் ஐயப்பன். மேலே சென்று சிரமமின்றி அவனைத் தரிசிப்பதற்காகவே கல்லால் ஆன படிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் விரதம் இருக்கும் பக்தர்கள் மட்டுமே ஏறிச் செல்லலாம் என்பதற்கு என்ன அடிப்படை உள்ளது?

பக்தி இல்லாதவர்கள் மிதித்து ஏறினால் படிகள் மாசுபட்டுவிடுமா?

படிக்கற்களில் ‘புனிதம்’ புகுந்தது எப்படி?[படியேறிச் சென்ற பக்தர்கள் முதுகு காட்டி இறங்கக் கூடாதாம். தந்திரிகளும், மேல்சாந்திகளும், அரசப் பிரதிநிதிகளும் இறங்கலாமாம். அவர்கள் என்ன ஐயப்பசாமியின் செல்லப்பிள்ளைகளா?!]

புகுத்தியவர்கள் யார்? யாரெல்லாம்?

மனிதர்களுக்குள்ளேயே ஏற்றத்தாழ்வுகளைக் கற்பித்து ஆதாயம் தேட முனைந்தவர்களின் கைங்கரியம் இது.

படியேறுவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் உடைத்தெறியப்பட்டிருத்தல் வேண்டும்.

நல்ல மனமுள்ள சபரிமலைக் கோயில் நிர்வாகிகள் எப்போதோ இதைச் செய்திருப்பார்கள். அதற்கு முட்டுக்கட்டை போடும் கும்பல்கள்தான் ஆர்.எஸ்.எஸ்., இந்து பரிஸத்., இந்துமுன்னணி.

இவர்களை அடையாளம் கண்டு இவர்கள் செய்யும் அடாவடித்தனங்களைப் பக்தர்கள் தடுத்து நிறுத்தாவிட்டால், அய்யப்பசாமி மட்டுமல்ல, இன்னும் பல இந்துமதக் கடவுள்களையும் வழிபடுவோர் எண்ணிக்கை வெகு வேகமாகச் சரியும்; ஒரு காலக்கட்டத்தில் இந்துமதமே முற்றிலுமாய் அழிந்துபோகும் என்பது உறுதி!

                                           *   *   *   *   *

!!!!! ‘கடவுள் எங்கும் இருக்கிறார்; எதிலும் இருக்கிறார்’ என்கிறார்கள். ஐயப்பனும் ஒரு கடவுளே. இந்தக் கடவுளைக் கண்டு வழிபட எத்தனைக் கட்டுப்பாடுகள்!

கட்டுப்பாடுகளை விதிப்பவர்கள் மனிதர்கள்! அதைக் கண்டும் காணாமலும் இருப்பவர்கள்தான் கடவுள்கள்!!