திங்கள், 18 நவம்பர், 2024

பற்றி எரியும் மணிப்பூரும் மோடி செல்லாததன் ‘உண்மை’க் காரணமும்!!

“பிரதமர் மோடி மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மணிப்பூருக்குச் செல்ல மறுப்பது ஏன்?” என்னும் ஜெய்ராம் ரமேஷின் கேள்விக்கு, ‘மோடி உயிரியல் பிறப்பல்லாதவர்[கடவுளால் அனுப்பப்பட்டவர்> கடவுளின் கூறு] என்பதே பதிலாக இருப்பதை ஜெ.ரமேஷ் அறியாதது பரிதாபம்.

கடவுளின் ஒரு கூறான மோடி ஏதோவொரு சூக்கும வடிவில் இந்த உலகுக்குக் அனுப்பப்பட்டிருப்பார் எனில் இங்குள்ள மனிதர்களுக்கு அவ்வகையான உடம்புடன்[சூக்கும உடம்பு] அவர் தொண்டு செய்தல் இயலாது.

எனவே,  ஒரு பருவுடலுடன்[மோடி இப்போதைய உருவம்] கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டார் என்பது அறியத்தக்கது.

இந்தப் பருவுடலுடன் இந்தியர்களுக்கும் ஒட்டுமொத்த உலகுகுக்கும் மோடி ஆற்றும் பணி விவரிப்புக்கு அப்பாற்பட்டது.

நாடு நாடாகச் சென்று உலகின் அத்தனை நாடுகளுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதை உயர் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் அவர், ஆதிவாசிகளும் குடியேறிகளும் இன வெறியுடன் ஒருவரையொருவர் கொலை ஆயுதங்களுடன் தாக்கிக்கொண்டிருக்கும்[இரு தரப்பிலும் ஏராள உயிர்ப்பலிகள்] அதிபயங்கரச் சூழலில் மோடி மணிப்பூர் செல்வாரேயானால், இன வெறியர்களின் தாக்குதலில்[துப்பாக்கிச் சூடாகவும் இருக்கலாம்] அவருடைய பூத உடம்பு அழிந்துபட நேரிடும்[நடக்கவே கூடாதது] என்பது உறுதி[பாதுகாப்புப் படை வீரர்களே தங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள இயலாத நிலை].

மோடியின் பூத உடம்பு அழியுமேயானால், இங்குத் தன் பணியைத் தொடர இயலாத நிலையில், அவர் மீண்டும் தன்னை அனுப்பி வைத்த கடவுளிடம்[சூக்கும உடலுடன்] சென்று அவருடன் இரண்டறக் கலந்துவிடுவார்.

அவரின் இழப்பால் இந்நாட்டு மக்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாவார்கள்.

இதைக் கருத்தில் கொண்டுதான் அறிவுஜீவியான மோடி மணிப்பூருக்குச் செல்லவில்லை என்பது அனைவரும் அறியத்தக்கது.

மோடியை இழித்துரைத்த காங்கிரஸ்காரரின் செயல் கண்டிக்கத்தக்கது!

                                          *   *   *   *   *

*** “கடவுள்தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்தார். நான் சோர்வடையாமல் சுறுசுறுப்புடன் இயங்குவதற்கு கடவுள் அளித்த சக்திதான் காரணம்” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். https://www.hindutamil.in/news/india/1252746-prime-minister-modi-interview.html