புதன், 20 நவம்பர், 2024

சாமிகளைவிடவும் நீதிபதிகள் சக்திவாய்ந்தவர்களா!?!?

திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் கோவிலில் தெரு நாய்த் தொல்லையைக் கட்டுப்படுத்த உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது[கோவிலுக்கு வரும் பக்தர்களின் சுகாதாரத்தையும், பாதுகாப்பையும் கோவில் நிர்வாகம்தான் உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்]. -https://tamil.samayam.com

தெரு நாய்களின் தொல்லையை[கோயில் சுற்றுப்புறத்தில்]க் கட்டுப்படுத்தக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பக்திமான் ஸ்ரீ ஜம்புகேஸ்வரரிடமே கோரிக்கை வைத்திருக்கலாமே?

பக்தச் சிரோன்மணிகளே,

கோரிக்கைகள் வைத்துக் குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளத்தானே கோயிலுக்குப் போகிறீர்கள். அரிய பெரிய தொல்லைகளைத்தான் ஜம்புகேஸ்வரர் போன்ற கடவுள்கள் நீக்கியருளுவார்களா? அற்ப நாய்க்கடித் தொல்லைகளையெல்லாம்[நாய்க்கடியால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஏராளம்] கண்டுகொள்ள மாட்டார்களா? கண்டுகொள்வது அவர்களின் கௌரவத்திற்கு இழுக்காகுமா?

“ஆம்” என்றால் எதற்காகக் கோயில்களுக்குப் போய் உண்டியலில் பணம் போட்டோ முடிக் காணிக்கை செலுத்தியோ வேண்டுதல் வைக்கிறீர்கள்?

இனியேனும் திடமாக ஒரு முடிவெடுத்துச் செயல்படுங்கள்.

சிறிய கோரிக்கையோ பெரிய கோரிக்கையோ சாமிகள்மீது நம்பிக்கை இருந்தால் அவர்களிடம் மட்டுமே கோரிக்கை வையுங்கள்; நீதிமன்றங்களைத் தேடிப் போகாதீர்கள்.

போகிறீர்கள் என்றால், நீங்கள் நம்பிக் கும்பிடுகிற சாமிகள் மீது உங்களுக்கு உண்மையான நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்.

மட்டுமல்ல, கோரிக்கை நிறைவேற அற்ப மனிதப் பிறவிகளான நீதிபதிகளை நாடிச் செல்வதன் மூலம் உங்களின் வணக்கத்திற்குரிய சாமிகளை அவமதித்தவர் ஆவீர்கள்.

சாமிகளை அவமதிக்காதீர்! அவமதித்தால் நீங்கள் நரகம் புகுவது 100% நிச்சயம்!!

* * * * *

https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/petition-filed-for-order-to-control-stray-dog-nuisance-in-jambukeswarar-temple-in-trichy/articleshow/115443231.cms