மொட்டைமாடியில் சப்பணமிட்டு அமர்ந்து மூச்சுப் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கியபோது அந்தத் தட்டாம்பூச்சி கண்ணில் பட்டது.
முன்னும் பின்னும் பக்கவாட்டிலுமாகப் பறந்துகொண்டிருந்த அது, ஒரு கட்டத்தில் சுழன்று சுழன்று கீழ் நோக்கிச் சரிந்து தரையில் விழுந்தது.
ஒரே இடத்தில் சிறிதும் அசைவின்றிக் கிடந்ததால் கை விரலால் அதைத் தொட்டுப்பார்த்தேன்.
சலனம் சிறிதுமில்லை; இறந்துபோயிருந்தது.
‘விகாரம்’ ஏதுமின்றி முன்பிருந்த தோற்றத்துடனேயே அது இருந்தது. மரணிப்பதற்குத் தேவைப்பட்ட நேரம் மிகவும் சொற்பம். எனவே, மரண வேதனைக்கு உள்ளாகித் துடி துடித்துச் சாகும் அவலமும் அதற்கு நேர்ந்திருக்க வாய்ப்பில்லை.
மனிதர்களின் நிலை இதற்கு நேர்மாறானது.
வயது அதிகரிக்க அதிகரிக்க அவர்களின் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள் மிக மிக அதிகம். இவரா அவர் என்று கேட்டுப் பிரமிக்கும் அளவுக்கு அது நிகழ்ந்துள்ளது.
மேலும்.....
தட்டானுக்கு வாய்த்தது போல வலியில்லாத[சில வினாடி நேரம் மிகச் சிறிய அளவில் இருந்திருக்கலாம்] மரணமும் அவர்களுக்கு வாய்ப்பதில்லை; மரணிப்பதற்கு முன்பும்[வாழும் காலம்] அதைத் தழுவும் நேரத்திலும் அனுபவிக்கும் வலியின் அளவு விவரிக்க இயலாதது. வயது ஆக ஆக அவர்களின் உருவம் அழகும் கவர்ச்சியும் இழந்து காணச் சகிக்காததாக மாறுகிறது.
மனிதர்களுக்கு ஆறறிவு வாய்த்து, அதனால் அவர்கள் இன்பங்களைக் காட்டிலும் அதிகத் துன்பங்கள் அனுபவிப்பதைக் கருத்தில் கொண்டால், மனித வாழ்வைவிடவும் தட்டாம்பூச்சி போன்ற பூச்சி&உயிரினங்களின்[வலியற்ற இயற்கை மரணமும், அதிக மாறுதல்களுக்கு உள்ளாகாத தோற்றமும் பறவை, விலங்கு, நீர்வாழ்வன போன்ற உயிரினங்களுக்கும் வாய்க்கிறது; இரைக்காகவோ பிற காரணங்களுக்காகவோ தம்மினும் வலியயனவற்றால் தாக்கப்படுபவை விதிவிலக்கு] வாழ்வே விரும்பத்தக்கது எனலாம்[வாழும் கால அளவு ஒரு பொருட்டல்ல. எத்தனை எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அதற்கு ஒரு முடிவு உண்டு].
இந்நிலையில்.....
உயிரினங்களைப் படைத்ததாகச் சொல்லப்படும் கடவுள் மனித இனத்துக்கு மட்டும் ஆறறிவைக் கொடுத்தது, அந்த இனத்தைப் பெருமைப்படுத்தவா சிறுமைக்கு உள்ளாக்கவா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது!