இந்நாள்வரை, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், தம் தாய்மொழியில் பேச விரும்பினால், மொழியாக்கம் செய்யும் பணியாளர், உறுப்பினர் சொல்லவிருக்கும் கருத்துகளை முன்னதாகக் கேட்டறிவார். உறுப்பினர் பேசத் தொடங்கியவுடன் அதை அவர் உடனுக்குடன் ஆங்கிலத்தில்[இந்தியிலும்] மொழியாக்கம் செய்வார்.
இந்த நடைமுறைதான் இன்றிருக்கும் நாடாளுமன்ற அவையில் பின்பற்றப்பட்டது: படுகிறது.
புதிய தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள [பேச்சு]மொழியாக்கக் கருவி, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அவை கூடும்போது பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
உறுப்பினர் ஒருவர் தன் தாய்மொழியில் பேச விரும்பினால், அவருடைய இருக்கைக்கு முன்னால் இடம்பெற்றிருக்கும் கணினியின் ‘தொடு திரை’யில் உள்ள மொழிகளில் தன் மொழியைத் தொட்டுப்[எ- டு: தமிழ்] பேசத் தொடங்குவார்.
பிற மொழிக்காரர்கள் தமக்கான மொழிப் பெயரைத் தொடுதிரையில் தொடுவதன் மூலம் தத்தம் தாய்மொழியில் அவருடைய பேச்சைக் கேட்கலாம்.
இந்த வசதி அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளுக்கும் செய்யப்பட்டுள்ளது.
இந்த வசதியைத் தொடங்கி வைப்பவர் என்ற முறையில் பிரதமர் மோடி அவர்களைப் பாராட்டலாம்.
உரைநடை முறையிலான மொழியாக்க வசதி ஏற்கனவே உலகெங்கும் பரவலாக உள்ளது.
ஒருவர் ஒரு மொழியில் பேசுவதை இன்னொரு மொழிக்காரர் மொழியாக்கம் செய்து கேட்பதற்கான கைபேசி[ஃபோன்] ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு 'Translaty pro' என்று பெயர்[https://m.dinamalar.com/detail.php?id=2294437]
இந்த வசதி உலகெங்கும் விரைவில் பரவலாக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
இதன் மூலம் குறிப்பிட்ட சில மொழிகளின் ஆதிக்கமும், அதனால் உருவாகும் பிரச்சினைகளும் குறைந்திட வாய்ப்புள்ளது.
என்னதான் மொழியாக்கக் கருவிகளின் பயன்பாடு அதிகரித்தாலும், அச்சு வடிவிலான, மொழியாக்கம் செய்யப்படாத பிற மொழி நூல்களை வாசிப்பதற்கும், கருவி கைவசம் இல்லாதபோது பிற மொழியாளருடன் கருத்துகளைப் பகிர்வதற்கும் பிறமொழிகளைக் கற்பது அவசியமே என்பது கருத்தில் கொள்ளத்தக்கதாகும்.
* * * * *
உதவி: மாலைமலர்[01.07.2023] தலையங்கம்.