ஞாயிறு, 1 அக்டோபர், 2023

அர்ச்சகர்கள் செய்யும் அபச்சாரம்! தேவை அர்ச்சகிகள்!!

அறிவுஜீவி - ஆன்மிகன் உரையாடல்:

*“கல்லிலும் உலோகங்களிலும் வடிக்கப்பட்ட சிலைகளைக் கடவுள் என்று நம்பிக் கும்பிடுகிறீர்களே, இது மூடத்தனம் அல்லவா?”

*“அல்ல. சிலைக்குள் கடவுள்கள் உறைகிறார்கள். சிலைகளை வழிபடுவதும், கடவுள்களை வழிபடுவதும் ஒன்றுதான்.

*“அப்படியானால், சிலையைத் தொட்டால் கடவுளையே தொட்டதாகத்தானே அர்த்தம்?”

*“ஆமா.”

*“பரமேஸ்வரி, புவனேஷ்வரி, பூதேவி, ஸ்ரீதேவின்னு பல பெண்பால் சாமி சிலைகளும்  இருக்கில்லையா, அதுகளுக்குள்ளும் சம்பந்தப்பட்ட சாமிகள்[பெண் தெய்வங்கள்] உறைவது உண்மைதானே?”

*“100% உண்மை.

*“சாமி சிலைகளை நீராட்டி, தொட்டு ஆடை அலங்காரம் பண்ணுபவர்கள் அர்ச்சகர்கள், அதாவது ஆண்பால் அர்ச்சகர்கள். ஆமாம்தானே?”

*“ஆமா.”

*“ஆண்களாகிய அர்ச்சகர்கள் ஆண் சாமிகளை[சிலைகள்]த் தொடுவதும், தொட்டு அலங்கரிப்பதும் தவறில்லை. ஆனால், அவர்கள் பெண் சாமிகளைத் தொட்டுக் குளிப்பாட்டுவதும், ஆடை உடுத்து அணிகலன்களால் அழகுபடுத்துவதும் தவறல்லவா? இதைத் தெய்வக் குற்றம் என்றும் சொல்லலாம்தானே?”

[மீனாட்சி திருக்கல்யாணம். அர்ச்சகர் மீனாட்சிக்குத் தாலி கட்டுகிறார்!]
*“அது வந்து.....”

*“அதென்ன, வந்து போயி? மனித உருவில் உள்ள பெண்களை ஒட்டுறவு இல்லாத அதே இனத்து ஆண்கள் தொடுவது குற்றம் என்னும்போது, போற்றி வழிபடப்படும் பெண் தெய்வங்களை[பிரதிஷ்டையால் சிலைகள் கடவுள்கள் ஆகின்றனவாம்] அற்ப மானிட வர்க்கத்தைச் சேர்ந்த அர்ச்சகர்கள் தொடுவது எத்தனை பெரிய குற்றம்! அபச்சாரம்!! அக்கிரமம்!!! இந்த அக்கிரமம் இனியும் தொடர வேண்டுமா?

*“.....”

*“கூடவே கூடாது. வேத ஆகமங்களையெல்லாம் அத்துபடியாய்க் கற்றுத் தேர்ந்து உரிய பயிற்சி பெற்ற பெண் அர்ச்சகர்கள் இருக்கிறார்கள். இப்போதைக்கு அவர்கள் மட்டுமே அனைத்துக் கோயில்களிலும் உள்ள பெண் தெய்வச் சிலைகளைத் தொட்டு அழகுபடுத்த அனுமதிக்கப்பட வேண்டும். தேவைக்கேற்ப மேலும் பல பெண்களுக்குப் பயிற்சியளிப்பதும் அர்ச்சகர்களாக அவர்களை நியமிப்பதும் அவசரத் தேவை ஆகும்.

உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசாங்கத்தின் கடமை.

                              *   *   *   *   *

மிக மிக மிக முக்கியக் குறிப்பு:

பூஜை மட்டும் செய்ய அனுமதிக்கப்பட்டவர்கள், வேத ஆகமங்களின் பெயரால்,  அவர்கள் விரும்பியவாறெல்லாம் வழிபாட்டு நெறிமுறைகளை வகுத்துப் பிற்போக்குச் சக்திகளின் துணையுடன் கோயில் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

மக்களின் அழுத்தமான கடவுள் நம்பிக்கையைத் தங்களின் மேம்பாட்டுக்காக அவர்கள் பயன்படுத்துவது நீடிக்கிறது.

இது விசயத்தில் நம் மக்களைக் கொஞ்சமேனும் சிந்திக்கத் தூண்டுவதற்கே மேற்கண்ட பதிவு.

                                  *   *   *   *   *

மேம்போக்கான வாசிப்பில், ‘பெண் தெய்வங்களைப் பெண்களே அழகுபடுத்துதல் வேண்டும்’ என்னும் கருத்து நடைமுறை சாத்தியமற்றதாகத் தோன்றலாம். ஆழ்ந்து சிந்தித்தால் இதில் உள்ளடங்கியுள்ள நியாயம்’ புலப்படும்.