எனது படம்
தமிழர்கள் தமிழ்ப் பற்றாளர்களாக இருந்தால் மட்டும் போதாது; இந்தி ஆதிக்கத்தைத் தகர்க்க, தமிழ் வெறியர்களாக ஆவது[பிற மொழியாளரும்தான்] மிக அவசியம். இந்தி வெறியர்களின் கொட்டத்தை அடக்கக் கடுமையான போராட்டங்கள் தேவைப்படலாம்.

செவ்வாய், 30 டிசம்பர், 2025

‘சொர்க்க வாசல்’ தரிசனம்... சொர்க்கலோகத்தில் இடம் பிடித்த ‘பசி’பரமசிவம்!!!

 

//மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியிருக்கிறார். அந்த அளவுக்குப் புனிதத்தன்மை வாய்ந்த மாதம் இந்த மார்கழி மாதம். மார்கழி மாதம் வளர்பிறை நாளில் வரும் ஏகாதசியை நாம் வைகுண்ட ஏகாதசியாகக் கொண்டாடுகிறோம்.

மகா விஷ்ணுவை வேண்டி வழிபடும் விரதங்களில் முதன்மையானதாக இருப்பது 'ஏகாதசி விரதம்'. இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பது அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும் என்கின்றன புராணங்கள். இப்போது, அல்லது எப்போது இறந்தாலும் நாம் சொர்க்கத்திற்குச் செல்வோம் என்பது 100% உறுதி என்றார்கள் நம் முன்னோர்கள்//*


இரண்டு நாட்கள் முன்பு என் மனைவி, “நீங்கள் நாத்திகவாதி என்பதால், இறந்த பிறகு நரகத்திற்குத்தான் போவீர்கள். நான் என் ஆயுள் முடிந்து சொர்க்கம் சேர்வது[சொர்க்கவாசல் தரிசனம் செய்திருப்பதால்] உறுதி. அங்கே நீங்கள் இல்லாமல் நான் தனித்திருப்பது சிரமமானது என்பதால், நாளைய வைகுண்ட ஏகாதசி நாளில் பெருமாள் கோயிலுக்குப் போய், சொர்க்கவாசல் தரிசனம் செய்துவிடுங்கள்" என்று கண்டிப்பாகக் கூறியதால்.....


நள்ளிரவிலேயே உறக்கம் கலைந்து, அப்போதே பெருமாள் கோயிலுக்குப் போனேன்.


கிலோமீட்டர் கணக்கில் காத்திருந்த பக்தக்கோடிகளில் ஒருவனாக நின்று, கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கோயிலை அடைந்து, சொர்க்கவாசலில் எழுந்தருளிய பெருமாளின் திருவடிகளை[வைகுண்ட வாசனின் ஒரிஜினல் பாதக் கமலங்கள்] கண் குளிரவும் மேனி சிலிர்க்கவும் பார்த்துப் பார்த்தும் பரவசப்பட்டேன்.


வீடு திரும்பியபோது, ஆரத்தி எடுத்து வரவேற்ற இல்லக்கிழத்தி, “உங்களுக்குச் சொர்க்கத்தில் ஓர் இடம் உறுதி செய்யப்பட்டுவிட்டது” என்றார் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய.


“சாகும்வரை ஆண்டு தவறாமல், சொர்க்கவாசலில் பெருமாள் பாதம் தரிசிக்கணுமா? தவறினால், ஆண்டாண்டுதோறும் கோடி கோடி கோடிக் கணக்கில் சொர்க்கம் செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், எனக்கு ஒதுக்கப்பட்ட இடம் கூட்ட நெரிசலில் பறிபோகுமா?” என்றேன் நான்.


முறைத்த என் துணைவியார், “நீங்க இன்னும் திருந்தவில்லை”  என்றார் கோபம் தொனிக்கும் குரலில்!


                                             *   *   *   *   *

*https://tamil.nativeplanet.com/travel-guide/the-reason-why-we-are-celebrating-vaikunta-ekadesi-sorga-vassal-history-003745.html