ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்திருக்கிறது உச்சநீதிமன்றம். எனவே, கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் இந்த வீரவிளையாட்டு[?] இடம்பெறவில்லை.
‘ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டு; தமிழர்களின் குருதியில் கலந்துவிட்ட கலாச்சாரம்’ என்று காரணங்கள் பல சொல்லித் தடை விதித்தது தவறு என்று பலரும் சொல்கிறார்கள்.
கலைஞர் கருணாநிதியென்ன, விசயகாந்த் என்ன, இராமதாசு என்ன, வைகோ என்ன அனைத்துக் கட்சித் தலைவர்களும் தடையை நீக்க வேண்டும் என்று வரிந்துகட்டிக்கொண்டு அறிக்கை விடுகிறார்கள்: போராட்டங்களையும் அறிவித்திருக்கிறார்கள். ‘அம்மா’வும் கடிதம் எழுதியிருக்கிறார்.
நடுவணமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், “ஜல்லிக்கட்டு நடக்கும்" என்று நம்பிக்கை விதையை விதைத்திருக்கிறார்.
ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கக் காரணம், ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக விலங்குகள் நலவாரியம் தொடர்ந்த வழக்கு.
வாரியம் சொல்வதில் உண்மை இல்லையா? நிகழ்ச்சியில் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லையா? என்பன போன்ற கேள்விகள் நம் மனதில் எழுகின்றன அல்லவா?
அவை அர்த்தமற்ற[!] கேள்விகள்.
காளையின் திமிலை வளைத்துப் பிடித்து முழு பலத்துடன் இறுக்குவதும், கொம்புகளை அழுந்தப் பற்றி அதன் கழுத்தை முறிப்பதுபோல் பக்கவாட்டில் திருகுவதும், வாலை இழுப்பதும் துன்புறுத்தல்கள் அல்ல; அல்லவே அல்ல. இது வெறும் விளையாட்டு...வீர விளையாட்டு.
பதிலுக்குக் காளையும் விளையாடுகிறது. ஆனந்தப் பரவசத்துடன், துள்ளிக் குதித்து, எகிறிப் பாய்ந்து வீரர்களை மூர்க்கமாய் முட்டித் தள்ளுவதுபோல் பாசாங்கு செய்கிறது. சில நேரங்களில், எசகுபிசகாக அதன் கொம்புகள் குத்திச் சில வீரரகள் காயம்பட்டு உயிரிழக்கிறார்கள்.
ஒவ்வொரு ஜல்லிக்கட்டின்போது உயிரிழப்புகள் நேரத்தான் செய்கின்றன. குறைந்தது மூன்றுநான்கு பேர்.
இதற்காகவெல்லாம் நாம் வருத்தப்படத் தேவையில்லை. ஏனென்றால், இந்த உயிரிழப்புகள்தான் நம் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் கட்டிக்காக்கின்றன. இது தெரிந்துதான், நம் தலைவர்கள் எல்லாம் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கவேண்டும் என்கிறார்கள்.
ஜல்லிக்கட்டுக்குப் பேர்போன அலங்காநல்லூர்க்காரர்கள், ‘காலங்காலமா ஜல்லிக்கட்டு நடத்திட்டு வர்றோம். கடந்த ஆண்டு அது தடைபட்டது. எல்லா ஊருக்கும் பெய்த மழை எங்கள் ஊரில் பொய்த்துவிட்டது. காரணம் சாமி குத்தம்’ என்கிறார்களாம். இது பத்திரிகை[தின மலர், 27.12.15]ச் செய்தி.
கடந்த ஆண்டுக்கு முந்தை ஆண்டுகளில் எல்லாம் தவறாமல் மழை பெய்ததா என்று நாம் கேட்கக் கூடாது. அப்படிக் கேட்பதும்கூட குத்தம்தான்...சாமி குத்தம்.
எந்தவொரு குத்தத்துக்கு ஆளானாலும் சாமி குத்தத்துக்கு நாம் ஆளாகக் கூடாது. மழைமாரி பொய்த்துப் போக, தமிழினமே பூண்டோடு அழிந்துவிடக்கூடும். ஆகவே......
போராடுவோம். தடைகளைத் தகர்ப்போம். . நம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விழாவைக் கொண்டாடுவோம். உயிரிழப்புகள் ஒரு பொருட்டல்ல.
ஆம், உயிரிழப்புகள் நமக்கு ஒரு பொருட்டல்ல!
+============================================================================================
இன்று பல நாட்களின் பின் தமிழ்மணம் வேலை செய்தது.உங்கள் மூடர் உலகம் என்ற நல்ல பதிவை கண்டேன். அதில் இடது பக்கத்தில் இந்த ஜல்லிகட்டு மரண கட்டு என்ற பதிவு இருந்தது. 2015 வந்த இந்த பதிவை இப்போது தான் கண்டேன். தமிழர் என்றால் மாட்டை துரத்தி வீரம் காட்டும் லுசுத்தனமான ஜல்லிகட்டுவை, தமிழர்களின் வீர விளையாட்டு என்று ஆதரிக்க வேண்டும் என்ற எழுதபடாத சட்டம் இருக்கும் நிலையில், தமிழ் கம்யூனிஸ்டுகள் என்று சொல்லி கொள்பவர்களும் மாட்டை துரத்தி விளையாட வேண்டும் என்று புர்ச்சி செய்யும் மிகவும் அவலமான நிலைமையில், நீங்க பகுத்தறிவோடு இப்படி நல்ல பதிவு எழுதியதற்கு பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குநமது பண்பாடுகள்,கலாச்சாரங்களை கட்டி காக்கிறோம் என்று அகற்றபட வேண்டிய குப்பைகளை எல்லாம் கட்டிகாப்பாற்ற கூடாது :)