ஞாயிறு, 4 ஜூன், 2017

அதென்ன ‘ஆவி - உடல்’ பயணம்?!

‘எதிர்பாராத தன் வாழ்க்கை அனுபவம் குறித்து ஒரு பத்திரிகைக்குப் பேட்டி அளித்திருந்தார் சூப்பர் ஸ்டார்’[‘பதஞ்சலி யோகமும் மறுபிறவி மர்மங்களும்’, பதிப்பு: 2010; வெளியீடு: ‘குறிஞ்சி’, வில்லிவாக்கம், சென்னை - 600 049]. அதன் தொகுப்பு .....
#நான் கஷ்டப்பட்ட காலத்தில் ஒரு நாள், தற்கொலை எண்ணத்துடன் ஓர் இடத்தில் உட்கார்ந்திருந்தேன்.

அருகே ஒரு மலை இருந்தது. அதன் அடிவாரத்தில், கையால் வரையப்பட்ட சாமியாரின் படத்திற்கு யாரோ பூஜை செய்திருந்ததைப் பார்த்தேன்.

என்ன ஆச்சரியம்! அந்தப் படத்தைப் பார்த்ததும் என் தற்கொலை எண்ணம் அடியோடு மறைந்துவிட்டது. வீட்டிற்குச் சென்று படுத்துத் தூங்கிவிட்டேன்.

தூக்கத்தில் ஒரு விசித்திரமான கனவு வந்தது. அந்தக் கனவு.....

ஒரு நதி ஓடிக்கொண்டிருந்தது. அதன் அக்கரையில் ஒரு துறவி நின்றுகொண்டிருந்தார். தன்னருகில் வருமாறு அவர் என்னை அழைத்தார். நானும் ஓடினேன். குறுக்கே ஆறு ஓடுகிறதே! நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, அந்த ஆற்றின் நீரின் மேலேயே கால் பதித்து ஓடி அவர் முன் நின்றேன்.

“என் பின்னால் வா” என்று சொல்லி அவர் நடந்தார். நான் அவரைப் பின்தொடர்ந்தேன். நாங்கள் நடந்துகொண்டிருந்தபோது எனக்கு விழிப்பு வந்துவிட்டது. 

இப்போது நீங்கள் “அந்தத் துறவி யார்?” என்றுதானே கேட்கிறீர்கள்?

சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். நான் காலையில் படத்தில் பார்த்த அதே துறவிதான்! அவரைப் பற்றி விசாரித்தபோது அவர்தான் மகான் ராகவேந்திரர் என்று அறிந்து மெய் சிலிர்த்தேன்.

ராகவேந்திர சுவாமிகள் உயிருடன் சமாதியான பிருந்தாவனத்திற்கு[மந்திராலயம்] 1978ஆம் ஆண்டு நான் சென்றேன். அங்கு சென்றதும் என் ஒட்டுமொத்த உடம்பும் சிலிர்த்தது#

உலகப் புகழ் பெற்ற ஆவியுலக ஆராய்ச்சி நிபுணர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரனை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவர் ரஜினியின் இந்த அனுபவம் குறித்து அராய்ச்சி செய்து ஓர் அரிய உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறாராம். அது குறித்து அவர் சொல்வதாவது.....

சூப்பர் ஸ்டார் நினைப்பது போல அவருக்கு ஏற்பட்ட அனுபவம் ஒரு கனவல்ல; அது அவரின் ‘ஆவி - உடல்’[???] பயணம்’ ஆகும். தன்னுடைய ஆவி உடலில் பயணித்து ராகவேந்திரரைத் தரிசனம் செய்திருக்கிறார் ரஜினி.

ஆவியானது, உடலைவிட்டுப் பிரிந்து  வெளியேறி, பல்வேறு இடங்களில் உலவிவிட்டு, மீண்டும் உடம்புக்குள் புகுந்துகொள்ளும் அனுபவம் உலகம் முழுதும் பல லட்சக்கணக்கானவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்கிறார் விக்கிரவாண்டியார்.

‘என்ன பாவம் செய்தேனோ, அந்த லட்சக்கணக்கானவர்களில் ஒருவனாக இருக்கும் பாக்கியம் எனக்கில்லையே’ என்று நான் வருத்தப்பட்டதுண்டு. அந்த வருத்தம் நேற்றிரவு நீங்கியது.

இரவு முழுக்க, சூரியன் முதலான ஏழு கிரகங்களுக்கும் ஒரு ‘விசிட்’ அடித்துவிட்டு, நரகம் சென்று[சொர்க்கப்பயணம் வேறொரு நாளில்!] அங்கு துன்பத்தில் உழலும் பாவிகளைப் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டுத் திரும்பினேன்.

வாழ்க சூப்பர் ஸ்டார்! வளர்க விக்கிரவாண்டியார் புகழ்!!
***********************************************************************************************************************

4 comments :

  1. நேற்று நானும் ஒரு கனவு கண்டேன் மோடி தனது பதவியை வேறு ஒருவருக்கு தாரை வார்க்கிறார்
    அரியணையில் இருப்பவரை கண்டதும் சந்தோஷத்தில் கத்தி விட்டேன் கனவு கலைந்து விட்டது காரணம் அரியணையில் இருந்தது நான்தான் ஹி.. ஹி.. ஹி..
    இது நடக்குமா ?
    ReplyDelete
    Replies
    1. //அரியணையில் இருப்பவரை கண்டதும் சந்தோஷத்தில் கத்தி விட்டேன்//

      இந்த வரியைப் படித்தது நானும் சந்தோசத்தில் கத்திவிட்டேன்! அடுத்த வரியைப் படிக்காமலே இருந்திருக்கலாம்!
      Delete
  2. கனவு தானே...? நம் இஷ்டம் போல காணலாம்...!
    ReplyDelete
    Replies
    1. கன்றாவிக் கனவுகள் நனவாகாமல் இருந்தால் சரி!

      நன்றி தனபாலன்.
      Delete



2 கருத்துகள்:

  1. மனித மூளை எப்படி வேண்டுமானாலும் கற்பனை செய்யும் :)

    பதிலளிநீக்கு
  2. சூப்பர் ஸ்டார் கண்ட கனவு சூப்பர்தானே!!

    நன்றி பகவான்ஜி.

    பதிலளிநீக்கு