வியாழன், 18 மே, 2017

‘சிடு மூஞ்சி’களைச் சிரிக்க வைக்கும் அதிரடி புதிர்க்கதை!

‘கிளு கிளு’ தொடக்கம்! ‘திக் திக்’ திருப்பம்! ‘கல கல’ முடிவு! மொத்தத்தில் இது ஒரு முப்பரிமாணக் கதையாக்கும்!!

‘உடலுறவில் மனைவியை மகிழ்விப்பது எப்படி? என்ற பலான புத்தகத்தைப் பூங்காவின் கடைக்கோடியில், சிதிலமடைந்த ஒரு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து படிக்கத் தொடங்கியபோது[அப்போ நான் புது மாப்பிள்ளை!], “வணக்கம் ஐயா. நலமா? பார்த்து ரொம்ப நாளாச்சி” என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டேன்.
பார்வை சுழற்றிக் குரலுக்குரியவரைத் தேடினேன். தொலைவில் சில மனித உருவங்கள் தென்பட்டன. பேச்சுச் சத்தம் கேட்கும் அளவுக்கு என்னைச் சுற்றி ஆட்களின் நடமாட்டமே இல்லை. என் அந்தரங்க வாசிப்புக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் அங்கே ஒருவர் குரல் கொடுத்தது எப்படிச் சாத்தியமாயிற்று? யாருமில்லை[எட்டி விழுந்து திருட்டுத்தனமாய்ப் படிக்க] என்று உறுதிப்படுத்தித்தானே அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தேன்!

“பார்த்து ரொம்ப நாளாச்சி...பார்த்து...சார்த்து...கோர்த்து...போர்த்து... வார்த்து...” 

எதுகை மோனைச் சொல்லடுக்கு எனக்குள் குழப்பம் விளைவித்தது. புத்தகத்தைக் கைப்பையில் திணித்துக்கொண்டு எழுந்து நின்று செவிப்புலனைக் கூர்மையாக்கினேன்.

“அவனா? அவன் பெரிய எத்தன் ஐயா. எத்தன்...வத்தன்...கொத்தன்...வத்தல்...தொத்தல்...மொத்தல்...”

சில வினாடி இடைவெளிக்குப் பிறகு மர்மக் குரல் தொடர்ந்து ஒலித்தது. “க் ச் ட் த் ப் ற்...க ச ட த ப ற...ய ர ல வ ழ ள...ல ள ழ ...ஒன்னு ரெண்டு மூனு... அஞ்சு பத்து... அம்பது நூறு...ஆறு...”

“ஆருடா அவன்...? நான் பேசுறதைக் கவனிக்காம ஒளிச்சி வெச்சிப் படிக்கிறியே என்ன புஸ்தகமடா அது?”.....

“கதையா, இல்ல, போர்னோகிராஃபி புத்தகமா?”

“மறைக்காதே. மரியாதையா என்கிட்ட குடுத்துடு. கொண்டாந்து குடுடா.”

“நீயா வர்றியா நான் வரட்டுமா?”

என் அடிமனதில்  பயம் கவ்வியது; நாடிநரம்புகளிலெல்லாம் அது ஊடுருவியது. கால்கை உதறலைக் கட்டுப்படுத்திக்கொண்டு எழுந்து நின்று, வரிசை கட்டியிருந்த குரோட்டன்ஸ் செடிகளுக்கு அப்பால் பார்வையைச் செலுத்தினேன்.

செடிகளின் மறைவில் அறுபது வயதைக் கடந்த ஒரு ஜிப்பா உடுத்த மொழுமொழு மண்டை மனிதர் நின்றுகொண்டிருந்தார்.

எனக்குள் நிம்மதி பரவியது. 

‘ஐயோ பாவம். அந்த வழுக்கை பைத்தியம் போலிருக்கு.”’  -மனதுக்குள் அனுதாபத் தீர்மானம் போட்டுவிட்டு, வேறு தனியிடம் தேட முடிவெடுத்துப் பெஞ்சிலிருந்து தரையில் குதித்தேன்.

நான் குதித்த சத்தம் பைத்தியத்திற்குக் கேட்டிருக்க வேண்டும். “மிஸ்டர்...” என்று உரத்த குரலில் விளித்தது; ஒரே தாவலில் என்னை நெருங்கிவிட்டது. “வத்திப்பெட்டி இருந்தால் கொடுங்களேன்” என்றது.

கடந்த வாரம் என் நண்பருக்கு இதே பூங்காவில் ஏற்பட்ட அனுபவம் நினைவுக்கு வந்து என்னை மிரள வைத்தது. ஓசிப் பீடி கேட்டுவந்த ஓர் ஆளிடம்[பைத்தியம்], இவர் “இல்லை” என்று சொல்ல, “உள்ளே ஒளிச்சி வெச்சிருக்கே” என்று நயமாய்ச் சிரித்துக் கண்மூடித் திறப்பதற்குள் அவருடைய வேட்டியை உருவிவிட்டதாம் அது!

“தீப்பெட்டி இருந்தால் கொடுங்களேன்.” -கோரிக்கையைப் புதுப்பித்தது பைத்தியம்..

சந்தேகமில்லை. இந்தக் கிழவன்தான் அந்தப் பைத்தியம்!

நான் ஓடிவிட நினைத்து,  இரண்டு அடிகள் எடுத்து வைத்தேன்.

“மிஸ்டர், சத்தியமா இந்தப் பூங்காவில் உலவுற பைத்தியம் நான் அல்ல. நான் தனிமையில் பிதற்றினதைப் கேட்டா அப்படித்தான் நினைக்கத் தோணும். நான் பள்ளிக்கூட வாத்தியார். புதுசா பல்செட் போட்டிருக்கேன். பேசிப் பிழைக்கிறதுதானே என் தொழில். சரியாப் பேச வருதான்னு தனியான இடம் தேடிவந்து சோதிச்சிப் பார்த்திட்டிருந்தேன். நீங்க இங்கே வந்ததைக் கவனிக்கல. சந்தேகம் இருந்தா பார்த்துக்கோங்க” என்று வாய் திறந்து புதிய பல்செட்டைக் கழற்றிக் காட்டினார் வழுக்கை மனிதர்.

“ஹி...ஹி...ஹி...” அசடு வழியச் சிரித்துவிட்டு புத்தகப் பையுடன் மீண்டும் தனியிடம் தேடி நகர்ந்தேன்.
***********************************************************************************************************************
கதைகள்கிற பேருல எதை எதையோ எழுதினேன். பிரபலம் ஆக முடியல. போட்டிக்கு ஆளே இல்லைங்கிறதால இனி சிரிப்புக் கதைகள் எழுதுறதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்.

இன்னிக்கி, ‘சுபமுகூர்த்த தினம்’ ஆச்சே. அதிகாலையிலேயே எழுந்து எழுத ஆரம்பிச்சேன். சற்று முன்னர்வரை, ஏழெட்டு தடவை எழுதியும்[ஒரே கதையைத்தான்!] திருப்தி இல்ல. படித்தபோதெல்லாம் சிரிப்புக்குப் பதிலா அழுகைதான் வந்தது. எப்பவோ எழுதின [தளத்தில்] ‘தேவலாம்’ கதையை மீண்டும் படிச்சி மனசைத் தேத்திகிட்டேன்.

அதை இங்கே பதிவு செய்திருக்கிறேன். நீங்கள் படித்துச் சிரிக்கலாம்; பின்னூட்டத்தில் சீண்டிவிட்டு வேடிக்கையும் பார்க்கலாம்!




6 கருத்துகள்:

  1. படிக்கும்போது எனக்கு தோன்றியது கல்யாணம் ஆகாமல் இறந்துபோன "ஆவி"யோ என்று நினைத்து விட்டேன் நண்பரே....

    உங்களிடமிருந்து அப்படியெல்லாம் வருவதற்கு சாத்தியமில்லையே.... ஹி.. ஹி.. ஹி..

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. கில்லர்ஜியைத் தவிர யாருக்கும் கதை பிடிக்கலையோன்னு கவலைப்பட்டேன். நன்றியோ நன்றி தனபாலன்.

      நீக்கு
  3. பேசிப் பழக வந்தவரிடமே,உடலுறவில் மனைவியை மகிழ்விப்பது எப்படின்னு கேட்டு இருந்திருக்கலாமே :)
    அடுத்த கதையை சீக்கிரம் போடுங்க :)

    பதிலளிநீக்கு
  4. எனக்குத் தோணலியே!!

    நன்றி பகவான்ஜி.

    பதிலளிநீக்கு