‘உயர் நீதிமன்ற நீதிபதி மீதான விமர்சன நூலுக்கு அதே உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தடை விதித்ததோடு, அதைப் பறிமுதல் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு ஆணை பிறப்பித்திருக்கிறார்’ என்பது மேற்கண்ட காணொலிச் செய்தி.
எந்தவொரு நூலாயினும் அது தனிமனிதரையோ, ஒரு குழுவையோ, சமுதாயத்தையோ ஆபாசமாகவும் மிகக் கீழ்த்தரமாகவும் விமர்சிக்கும் உள்ளடக்கத்தைக் கொண்டிருக்குமாயின், அதற்குத் தடை விதித்தல் ஏற்புடையதே.
ஆனாலும், மேற்கண்ட வகையிலான நூல்தான் அது என்பது அது விற்பனைக்கு வநத பின்னரே தெரியவரும்.
காரணம், வெளிவருவதற்கு முன்னரான அந்த நூலின் உள்ளடக்கத்தில்[நூல் அச்சாகும்போதே அதை வாசிக்கும் வாய்ப்புப் பெற்றவர் மூலம் பிறரால் அறியப்பட்டிருக்கலாம்] அது வெளியாவதற்குச் சில நாட்கள் முன்புகூட மாற்றங்கள் செய்யப்படலாம்.
ஆக, ஒரு நூல் தடை விதிப்பதற்கு உரியதுதானா என்பதை முடிவு செய்வது அது வெளியான பின்னரே சாத்தியம் ஆகும்.
தடை செய்யப்பட்ட நூலில், மேற்கண்ட நீதிபதி[சாமிநாதன்] ‘ஆர்.எஸ்.எஸ்.’ இயக்கத்துடன் தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறார் என்பது காணொலியில் இடம்பெற்றுள்ள செய்தி.
‘ஆர்.எஸ்,எஸ்,’ மக்களிடையே ஆபாசப் பழக்கவழக்கங்களைப் பரப்புகிற/திணிக்கிற இயக்கம் அல்ல; ஒரு பயங்கரவாத அமைப்பும் அல்ல. நீதிபதியை அந்த இயக்கத்தவருடன் தொடர்புபடுத்துவது பெரியதொரு குற்றமும் அல்ல[அரசு அனுமதியுடன் செயல்படுகிற இயக்கம் அது].
அந்த அமைப்புடன் நீதிபதியைத் தொடர்புபடுத்தி நூல் எழுதப்பட்டதில் தவறே இல்லை.
சிறிய சிறிய தவறுகள் இருப்பினும், நூலாசிரியர் அல்லது பதிப்பகத்தார் மீது வழக்குத் தொடுக்கலாமே தவிர, நூலைப் பறிமுதல் செய்யும் செயல் ஏற்கத்தக்கதல்ல.
மேலும்,
ஒரு நீதிபதியை விமர்சித்து நூல் எழுதக் கூடாது என்றால், அவர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா?
அவர் தவறேதும் செய்வதில்லையா?
தவறுகள் செய்வதால்தானே அவருடைய தீர்ப்பை எதிர்த்து ‘மேல்முறையீடு’ செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
ஆகவே, சட்டவிதிகளை அத்துபடியாய்[100%] அறிந்திருக்கிற நீதிபதி எவரும் இல்லை. அவர் கடவுளின் மறு பிரதியும் அல்லர்.
கடவுள் மீது குற்றம் சாட்டுவதற்கு அஞ்சிய காலம் மாறி, அவர் மீதே அடுக்கடுக்கான குற்றங்கள் சுமத்தி நியாயம் கேட்கும் நிலை இன்று உருவாகியுள்ளது.
இந்நிலையில்.....
நீதிபதிகளைப் பற்றிப் பேசாதே, எழுதாதே என்று அந்த நீதிபதிகளே உத்தரவு பிறப்பிப்பது இருபதாம் நூற்றாண்டின் அவலம்.
இந்த இந்திய நாட்டில் மக்களாட்சி நடைபெறுவதாகச் சொல்கிறார்கள். அதாவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே ஆட்சி நடத்துகிறார்கள்.
எந்தவொரு துறையிலும் ‘சர்வாதிகாரம்’ இடம்பெறவில்லை என்று சொல்லலாம்.
ஆனால்.....
நீதித்துறையில் மட்டும் அது அவ்வப்போது தலைகாட்டுவது நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது!
