தேடல்!

நடுவணரசில் இந்தி & இந்துமத வெறியர்களின் ஆதிக்கம் நீடிக்கும்வரை இந்தியும், இறந்த மொழி சமஸ்கிருதமும் போற்றப்படுவதும் நீடிக்கும்!

Jul 14, 2015

தேவதைகள் வேண்டாம்! ‘தேவலாம்கள்’ போதும்!!

பெண்ணொருத்தி அழகாக இருந்துவிட்டால், அவள் போடும் ‘குறட்டை’யையும் ‘குசு’வையும் கூடக் கவிதை’ ஆக்குவார்கள் நம் கவிஞர்கள்!  [சகோதரிகள் மன்னிக்க] விதிவிலக்கானவர்கள் சிலரே!!”

காமக்கிழத்தனாகிய நான் மொழிந்த மேற்கண்ட ‘பொன்மொழி’[!!!]யுடன் இந்த மீள்பதிவை வெளியிடக் காரணம், இளம் காதல் கவிஞர்கள்[பெண் கவிஞர்கள் விதிவிலக்கு], பெரும் எண்ணிக்கையில் இதைப் படித்துத் திருந்த வேண்டும் என்பதுதான்!

நீங்கள் ’காதல் கவிதை’ படைக்கும் கவிஞரா?

“ஆம்” என்றால், மெத்த மகிழ்ச்சி. உங்கள் வரவைத்தான் நான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்.

கவிஞரே,

சுற்றி வளைக்காமல் பிரச்சினையை முன் வைக்கிறேன்.
மாம்பழக் கன்னங்களும், மது ஊறிப் பளபளக்கும் உதடுகளும்,  கோங்கமலர்க் கொங்கைகளும் கொண்ட கவர்ச்சிப் பெண்களைப் பார்க்கும்போதுதான்[பெரும்பாலும்] உங்களுக்குக் கவிதையே பிறக்கிறது என்று நான் சொன்னால், அதை நீங்கள் ஏற்பீர்களா, மறுப்பீர்களா?

உங்களால் மறுக்க முடியாது. ஏனென்றால், இதற்கு ஏராள உதாரணங்களை என்னால் தர முடியும். ஆபாசம் கலவாத சில காதல் கவிதைகள் மட்டும் இங்கே.........

‘என் இதயத்தின் நீரெல்லாம் 
ஓட மறுத்து
ஒரு நிமிடம் உறைந்து
உன் அழகை ரசிக்குதடி
உன்னை முத்தமிடத் துடிக்குதடி’   

இது சத்தியசீலன் ராஜேந்திரன் என்ற கவிஞர் யாத்தது!  [‘கிறுக்கல்கள்’]

இதில் காதலும் இல்லை, கத்தரிக்காயும் இல்லை; கவர்ச்சிப் பெண்ணின் ‘முத்தங்கள்’ தரும் ‘கிறுகிறுப்பு’ மட்டுமே.

‘நீ உன் பாதம் கழுவிய
நீரைக் கொடுக்கிறாயா?…
அழகின் கடவுளுக்கு
அபிஷேகம் செய்ய வேண்டும்’
[மன்னிக்கவும்....இது என் மனதில் ஒட்டிக்கொண்டிருந்த கவிதை. கவிஞர் பெயர் மறந்துவிட்டது]

இங்கே, கடவுளுக்கு நேர்ந்த கதியைப் பார்த்தீர்களா?

ஓர் அழகியின் பாதம் கழுவிய நீர் கடவுளுக்கு அபிஷேகம் செய்யும் அளவுக்குப் புனிதம் ஆகிவிட்டதைக் கவனித்தீர்களா?

அழகியின் சிறுநீரைப் புனிதமாக்கியும் இவர்கள் கவிதை பாடியிருப்பார்கள்! தெரிந்தால் சொல்லுங்கள்.

‘பூக்கள் கூட 
உன்னைப்போல் வெண்மை இல்லையே.
உன்னைப் போல் பெண்ணைப்
பூமி பார்த்ததில்லையே!    [‘தமிழ், காதல் கவிதைகள் உலகம்’]

இந்தக் கவிஞருடைய ‘இவளை’ப் பார்க்கணும்னா தேவருலகம் போகவேண்டும்! போனால் திரும்பி வருவோமா?

மேற்கண்ட கவிதைகளை வழங்கியவர்கள் பிரபலம் ஆகத் துடிக்கும் கவிஞர்கள்.

மிக மிக மிகப் பிரபலம் ஆன ஒரு [சிறந்த]கவிஞரின் கவிதை கீழே...........

‘அன்பே !
அந்த நதிக்கரையில்
உன் கைக்குட்டை ஒன்றைக்
கண்டெடுத்தேன் !
அது கைக்குட்டையா?
இல்லை,
காதல் தேவதை
தன் ஒரு சிறகை
உதிர்த்து விட்டுப்
போய் விட்டதா’

யாரென்று தெரிகிறதா?

கவிப்பேரரசு வைரமுத்து! 

கவனித்தீர்களா, இவருடைய கவிதைத் தலைவியும் ஒரு தேவதைதான்!

கவிஞரே, [வைரமுத்து அல்ல; பதிவைப் படித்துக் கொண்டிருக்கும் கவிஞர்] இப்போது நீங்கள், “பிரபலம் என்ன, அல்லாதவர் என்ன, எல்லாக் கவிஞர்களுமே அழகான பெண்களை நினைச்சித்தான் கவிதைகள் படைக்கிறாங்க. அதுக்கென்ன இப்போ?”ன்னு முணுமுணுத்திட்டிருக்கீங்கதானே?

கொஞ்சம் பொறுங்கள், இன்னொரு கேள்வியையும் கேட்டுவிடுகிறேன்......

நீங்களெல்லாம் காதல் கவிதைகள் எழுதுவது யாருக்காக? அதாவது, யாரையெல்லாம் மனதில் இருத்திக் கவிதை படைக்கிறீர்கள்?

“இளைஞர்களுக்காகவும் இளம் பெண்களுக்காகவும்” என்று நீங்கள் சொன்னால், அது மிகச் சரியான பதில்.

அடுத்து ஒரு கேள்வி..........

உங்களின் படைப்புகள் அவர்களைப் பாதிக்கிறதா?

“ஆம்” என்றுதான் நிச்சயம் பதில் தருவீர்கள்.

எதார்த்த வாழ்வுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத உங்கள் கவிதைகளைப் படித்துவிட்டு, மிதமிஞ்சிய காதல் போதையில் மூழ்கி நம் இளைஞர்கள் கெட்டுச் சீரழிந்து போகிறார்கள் என்பது நாடறிந்த உண்மை. இது நீங்கள் அறியாததல்ல.

இளம் பெண்கள்?

உங்கள் கவிதைகளைப் படிக்கிற ஒரு பெண், நீங்கள் கண்முன் நிறுத்துகிற தேவதைகள் போல் பேரழகியாக இருந்தால், உள்ளம் மகிழ்வாள்; உச்சி குளிர்வாள். ஆனால்.....

நம் பெண்களில் எத்தனை சதவீதம் பேர் பேரழகிகள், அல்லது, அழகிகள்?

இது  பற்றி நீங்கள் ஒரு முறையேனும் யோசித்திருக்கிறீர்களா?

இல்லைதானே?

உலகில், ஜெர்மன்காரிகள்தான் பேரழகிகளாம். உலக நாடுகளில் நம்பர் 1 அழகிகள் உலவும் நாடு ஜெர்மனிதான் என்கிறது புள்ளிவிவரம்.[www.shareranks.com]

நம் நாட்டுப் பெண்களின் தரவரிசை என்ன என்று கேட்கிறீர்கள்தானே?

சொல்கிறேன். இல்லையெனில் மேலே படிக்க மாட்டீர்கள்!

நம் பெண்களின் rank:  9     தேவலாம்தானே?

இடைப்பட்டவற்றையும் அறிந்துகொள்ளுங்கள்..

2. பிரேஸில், 3. ஸ்வீடன், 4. அமெரிக்கா, 5. ஜப்பான், 6. போலந்து, 7. ரஸியா, 8. ஃபிலிபைன்ஸ்.

இந்தியாவுக்குப் பின்னால்தான் ஃபிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகள் வரிசைகட்டுகின்றன!

Hot...Hottest...பிரேஸில்தானாம்.

இவை ஒருபுறம் இருக்கட்டும். மீண்டும் தலைப்புக்கு வருவோம்.....

மானாவாரியாக அழகிகள் நடமாடுகிற இந்த ஜெர்மன் நாட்டுப் பெண்களில், 2% பெண்கள் மட்டும்தான் தங்களை அழகிகள் என்று ஒத்துக்கொள்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம். மற்ற 98% பெண்கள், விளம்பரங்களில் இடம்பெறும் அழகுப் பெண்களோடு தங்களை ஒப்பிட்டு, “நாங்கெல்லாம் ரொம்ப விகாரமா [ugly] இருக்கோம்”னு சொல்லி ரொம்பவே மனசு நொந்துபோய் இருப்பதாகச் சொல்லப்படுகிறது!

இந்த நாடு மட்டுமல்ல, அழகிகள் கொட்டிக் கிடக்கிறதா சொல்லப்படுகிற அடுத்த ஒன்பது நாடுகளைச் சேர்ந்த பெண்களும் இதே கதியில்தான் புலம்பித் திரிகிறார்கள். [ஆதாரம்: www.prnewswire.com]

ஆக, உலக அளவில், 98% பெண்கள் தாங்கள் அழகிகள் அல்ல என்று சொல்கிறார்கள். [www.dove.us/compain-for-real-beauty.aspx]

காதல் கவிஞர்களின் கண்கொண்டு ஆராய்ந்து கணக்கெடுத்தால், நம் நாட்டுப் பெண்களில் லட்சத்தில் ஒருவர் தேறுவதே கடினம்தான்.

எனவே, கவிஞரே, மீண்டும் உம்மிடமும் உம்மை ஒத்த காதல் கவிஞர்களிடமும் நான் சொல்ல விரும்புவது........

லட்சத்தில் ஒரு பெண்ணுக்காகவே நீங்கள் காதல் கவிதை எழுதுகிறீர்கள்.
ஏனைய 99999/100000 பெண்கள், உங்களுடைய கவிதைகளைப் படித்துவிட்டு,  ‘நாம் அழகியாக இல்லையே’ என்று ஏங்குகிறார்கள்; மனம் வாடுகிறார்கள்; வருந்துகிறார்கள்.

கவிஞரே...கவிஞர்களே!

இனியேனும்..........

நம் பெண்களை, மண்ணில் நடமாடுபவர்களாகவே நினைத்துக் கவிதை புனையுங்கள். அவர்களை ஒரு போதும் ‘தேவதைகள்’ ஆக்காதீர்கள்.
##########################################################################################################