வியாழன், 11 அக்டோபர், 2012

விகடன்[10.10.12] 'பெருமாள் முருகன்' சிறுகதைக்கு 50% மதிப்பெண்!

இது ஒரு ’சீரியஸ்’ பதிவு! நக்கல், நையாண்டிக்கு இங்கு இடமில்லை!

நாளைய பதிவு: குமுதத்தைக் ‘குப்பைக் கூடை’ ஆக்கிய எழுத்தாளர் ராஜேஷ்குமார்!

நோயைக் குணப்படுத்த சிகிச்சை தேவை. ஆயினும், சிகிச்சை தொடங்குவதற்கு முன்னால், நோயின் தன்மை பற்றியும் அதனால் பாதிக்கப்பட்ட உடம்பின் நிலை பற்றியும் அறிவதற்கு ஆழமான பரிசோதனை தேவை.

நுண்ணிய பரிசோதனையின்றி அளிக்கப்படும் சிகிச்சை பயனற்றுப் போகலாம்; எதிர் விளைவையும் உண்டு பண்ணலாம்.

மூட நம்பிக்கைகள், தீய பழக்க வழக்கங்கள், சாதிமதப் பிணக்குகள் போன்ற கொடிய நோய்களால் நலிவுற்ற சமுதாயத்தைத் திருத்துவதற்கு முன்னால், அந்நோய்கள் பற்றிய முறையான பரிசோதனைகள் தேவை.

இத்தகைய பரிசோதனைகளை நிகழ்த்துவதற்குச் சமுதாயத்தின் மேடு பள்ளங்களையும், அதன் நலிவுற்ற பகுதிகளையும் அறிந்திருப்பது இன்றியமையாத் தேவையாகும்.

இப்பரிசோதனைக்குச் சமுதாய நிலையை ’உள்ளது உள்ளபடியே’ படம் பிடித்துக் காட்டுகிற நாவல், சிறுகதை போன்ற நவீன இலக்கியங்கள் பெரிதும் உதவுகின்றன.

உள்ளது உள்ளபடியே  விவரித்துச் சொல்வதை ‘எதார்த்தவாதம்’ [realism] என்பார்கள்.

இதனை, ‘நடப்பியல்’, ’உள்ளதன் தன்மை’ என்றெல்லாமும் சொல்வதுண்டு.

’நடப்பியல்’ சார்ந்த படைப்புகள் தமிழில் அரிதாகவே வெளிவருகின்றன.

அத்தகைய அரிய படைப்புகளில் இவ்வார விகடன் இதழில் [10-10-2012] வெளியாகியிருக்கும் பெருமாள் முருகனின் ‘மண்டப ரகசியம்’ சிறுகதையும் ஒன்று.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, அரசியல்வாதிகள் கையாளுகிற அத்தனை தீய வழிகளும் ‘கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தல்’களில் கையாளப்படுகின்றன என்பதைப் பட்டவர்த்தனமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்தச் சிறுகதை.

பேரவைப் பதவிகளுக்குப் போட்டியிடும் மாணவ வேட்பாளர்கள், வாக்காள மாணவர்களுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்குவதுடன், தேர்தல் நடை பெற ஒரு வாரம்  இருக்கும் போதே, அவர்களைக் கடத்திச் சென்று, மண்டபங்களில் தங்க வைத்து, ’விருந்து’ கொடுத்துத் திருப்திப்படுத்துவது பல்லாண்டுக் கால ‘நடைமுறை’யாக உள்ளது.

இது ஒரு ‘தொற்று நோய்’.

இந்த நோயைக் கல்வி நிலையங்களில் பரவச் செய்தவர்கள் அரசியல்வாதிகள்.

குடிக்கச் ‘சரக்கு’, உண்பதற்கு வகை வகையாய் இறைச்சி விருந்து, கண்டு மகிழ்வதற்குப் ‘பலான’ வீடியோ படங்கள் என்று சுகபோகத்தில் திளைக்கச் செய்து வாக்காளனின் சிந்திக்கும் அறிவை மழுங்கடித்துக் காரியங்கள் சாதிக்கும் இந்தக் கலையை மணவர்களுக்குக் கற்றுத் தந்தவர்கள் இவர்களே.

மாணவர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள், அரசியல்வாதிகள் ஆட்சியாளர்கள் என அனைவராலும் நன்கு அறியப்பட்ட, வேரோடு களையப்பட வேண்டிய ‘அவலம்’ இது.

தொடரும் இந்த அவலத்துக்குக் கதை வடிவம் தந்திருக்கிறார் நட்சத்திர எழுத்தாளர் பெருமாள் முருகன்.

கதைச் சுருக்கம்.....

புதிதாகக் கல்லூரியில் சேர்ந்த குமரேசன், ‘ராகிங்’ செய்வதற்குப் பதிலாக, ‘மூத்த மாணவர்கள்’ தந்த ‘அன்பான’ வரவேற்பால் அசந்து போகிறான்.

அவர்கள் வழங்கிய பரிசுப் பொருள்களைத் தன் வீட்டாரிடம் காட்ட எல்லோரும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.

தானும் தன் வாக்காள நண்பர்களும் ஒரு வார காலத்துக்கு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, உபசரிக்கப் பட இருப்பதை அறிந்து ஆனந்தம் அடைகிறான்.

பெரிய டம்ளரில் டீ. குடிக்கப் பானங்கள். கமகமக்கும் ‘கறி’யுடன் சாப்பாடு. படம் பார்க்கத் தொலைக்காட்சிப் பெட்டி. நண்பர்களுடனான ஆட்டம் பாட்டம். இப்படி ஒரு வாரம் இன்பத்தில் திளைக்கப் போவதை நினைத்து, இதுவல்லவா வாழ்க்கை என்று குதூகலிக்கிறான்.

’மாவட்டச் செயலாளர்’ வருகை புரிந்து, ’சரக்கு’ முதலான எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றுவதாகச் சொல்லிப் போகிறார்.

சரக்கு உறைப்பாக இருக்கிறது. குமரேசன் இரண்டு மூன்று ரவுண்டு போகிறான். வேண்டும் மட்டும் கறி உணவு சாப்பிடுகிறான். கிறக்கம் மீறி சுருண்டு படுக்கிறான்.

காலையில் விழித்தெழுந்த போது, நாற்றம் குடலைப் பிடுங்குகிறது. பெரிய அளவில் குவிந்திருந்த வாந்தியை இவனைச் சுத்தம் செய்யச் சொல்கிறார்கள் இவன் நண்பர்கள். இந்த நிலை எல்லா நாளும் தொடர்கிறது.

இறுதி நாளில், “நீ வாந்தியே எடுக்கல. மத்தவங்க எடுத்ததை உன்னைச் சுத்தம் செய்ய வெச்சிட்டாங்க” என்று உண்மையைப் போட்டு உடைக்கிறான் இவனின் நண்பன் செல்வம்.

சினந்து மூச்சிறைக்கிறான் குமரேசன். இது கதை.

”இதோ, மாணவர்களைச் சீரழித்து வரும் ஒழுக்கக் கேட்டைப் பலர் அறியப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறேன். இவர்களைத் திருத்துவது உங்கள் கடமை” என்று சொல்வது போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்தச் சிறுகதை.

ஆம். கல்லூரி மானவர்களைச் ‘சிக்’கெனப் பற்றிக் கொண்டுவிட்ட இந்தச் சீரழிவைக் காட்சிப்படுத்துவதோடு கதாசிரியர் ’திருப்தி’ அடைந்துவிட்டதாகத் தெரிகிறது.

இந்த அவலத்தைத் துடைத்துப் போடுவதற்கான வழி முறை எதையும் அவர் குறிப்பிடவில்லை. [அதைச் செய்யும்படி அவரை நாம் கட்டாயப் படுத்த முடியாது என்பது அறியற்பாலது].

தனி மனிதரிடமும், பொது மக்களிடமும் உள்ள குற்றம் குறைகளையும் அவர்களுக்குள்ள பிரச்சினைகளையும் தன் படைப்புகள் மூலம் எடுத்துரைப்பது நல்ல பணிதான். அதைச் செய்யும் படைப்பாளரும் பாராட்டுக்குரியவர்தான்.

அவரைக் காட்டிலும், சிக்கல்களுக்கும் பிரச்சினைகளுக்கும் ‘தீர்வு’ சொல்கிற படைப்பாளர் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர்.

இதைக் கருத்தில் கொண்டுதான், பெருமாள் முருகனின் இக்கதைக்கு 50% மதிப்பெண் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

அவருக்கு நம் பாராட்டுகள். விகடனையும் போற்றுகிறோம்.

இனி, ‘தீர்வு’ தரும் பல படைப்புகளையும் படைத்திட, பெருமாள் முருகனை வேண்டுகிறோம்..

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000








3 கருத்துகள்: