வெள்ளி, 16 நவம்பர், 2012

ஒரு கதாசிரியனின் கதை

இது, ’சிரிப்புக் கதை’ அல்ல; ஓர் எழுத்தாளனின் ’கண்ணீர்க் கதை’!

“சே, என்ன மனிதர்கள் இவர்கள்! எழுத்தாளர் சீதேவிதாசனைத் தெரியுமான்னு கேட்டா, ஸ்ரீதேவி ரசிகர் மன்றத்தில் விசாரிக்கச் சொல்கிறார்களே! எழுத்தாளனை மதிக்காத இந்தச் சமுதாயம் உருப்படுமா?”

மனித குலத்தைச் சபித்தவாறு, ‘அய்யாசாமி நகரில்’ தெருத்தெருவாக அலைந்துகொண்டிருந்த அந்த மனிதருக்கு வயது எழுபதுக்குக் குறையாது.

பெரியவருக்கு ஒடிசலான உடம்பு. வேட்டி ஜிப்பாவில் மேலே தலை மட்டும் தெரிந்தது. அடி மண்டையில் கொஞ்சம் முடி அடிக்கோடிட்டிருந்தது. தோளில் தொங்கும் ஜோல்னா பையின் சுமையால் முதுகுத் தண்டு கொஞ்சம் வளைந்து காணப்பட்டது.

வீடு வீடாய்ப் படிகளை எண்ணினார். அழைப்பு மணியில்தான் எத்தனை வகை என்பதை அனுபவத்தில் கண்டு ஆச்சரியப்ப்ட்டார். கதவு திறந்து, ”என்ன?” என்று கேட்டவர்களிடமெல்லாம், “எழுத்தாளர் சீதேவிதாசனைத் தெரியுமா?” என்று கேட்டார்.

“சுவர் சுவரா விளம்பரம் எழுதுற ஒருத்தர் தெருக்கோடியில் இருக்கார். கேட்டுப் பாருங்க” என்றார் ஒரு வீட்டுக்காரர்.

“பருவ சுகம், பாமா நீ வாம்மா, இளமை ராகம்ங்கிற மாதிரி, ‘ஒரு மாதிரி’ புத்தகங்கள் எழுதிக் குவிச்சாரே, அவரா?” என்று பல்லிளித்தார் இன்னொருவர்.

“அம்மா...தாயி...சீதேவி...” என்று அவர் மிச்சமிருந்த வார்த்தைகளைக் கக்குவதற்குள்ளாகவே, “இன்னும் சமையல் ஆகல. போய்ட்டு அப்புறமா வாப்பா” என்றாள் ஒரு குடும்பத் தலைவி.

விரக்தியின் விளிம்பைத் தொட்டுவிட்ட பெரியவர், அய்யாசாமி நகர் வாசிகள் சிலரிடம், “சீதேவிதாசன் எவ்வளவு பெரிய எழுத்தாளர். அவரைத் தெரியலீன்னு சொல்றீங்க. ஆச்சரியமா இருக்கு” என்றார்.

“இந்த மாதிரி கேள்வி கேட்டுத் திரியற உம்மைப் பார்த்தாத்தான் ஆச்சரியமா இருக்கு. நீர் என்ன சீதேவிதாசனின் தம்பி மூதேவிதாசனா?” என்று அவர்கள் திருப்பிக் கேட்ட போது, பெரியவர் மனம் உடைந்து போனார்.

எழுத்தாளரின் பெயர் சொன்னவுடனே, அய்யாசாமி நகரமே திரண்டு வந்து தமக்கு வழி காட்டும் என்று எதிர்பார்த்தார். நடக்கவில்லை.

“என்ன ஐயா, சீதேவிதாசனைத் தெரியுமான்னு கேட்டீங்களே, அவரைத் தெரியாதவங்க இருக்கீங்களான்னு கேட்டிருக்கணும்.”

“இயல்பான கதை; மனதைச் சுண்டியிழுக்கிற வர்ணனை: ஆளைக் கட்டிப் போடுற அட்டகாசமான நடை. சீதேவிதாசன் ஒரு பிறவி எழுத்தாளருங்க.”

“எங்க நகருக்கு அவர் குடி வந்தது நாங்க செஞ்ச புண்ணியம்.”

இப்படியெல்லாம், இன்னும் எப்படியெல்லாமோ நகர மக்கள், எழுத்தாளருக்குப் புகழ் மாலை சூட்டுவார்கள் என்று எதிர்பார்த்தார் அவர்.

அவர்களோ, எழுத்தாளருக்கு ஒரு எருக்கமாலைகூடப் போடவில்லை.

பெரியவர் துவண்டுவிடவில்லை. “அய்யாசாமி நகர், துப்புக்கெட்டான் தெரு, கழுத்தறுத்தான் சந்து, கதவு எண் 18. இதுதானே எழுச்சி எழுத்தாளர் சீதேவிதாசன் வீடு?” என்று வீடு வீடாகச் சந்தேகம் கேட்டார். கடைசிவரை அவர் சந்தேகம் தீர்க்கப்படவில்லை என்றாலும், ஒரு வீடுகூட அவர் மிச்சம் வைக்கவில்லை.

ஒரு வழியாக, மனதைத் தேற்றிக்கொண்டு, சீதேவிதாசனின் வீடு நோக்கி நடந்தார், பெரியவர்.

அவர் அங்கு செல்வது இது முதல் தடவையல்ல. கடந்த ஏழெட்டு மாதங்களில், எத்தனை தடவை அங்கு சென்றிருக்கிறார் என்பதை எண்ணிச் சொல்வது அவசியமில்லை.

“என்ன செய்ய, இந்த ஏழை எழுத்தாளனை எவனுமே கண்டுக்க மாட்டேங்குறான். வீடு தேடி வருகிற நண்பர்கள் வேறு, ‘என்னய்யா பெரிய எழுத்தாளன் நீ? நீ இங்கே குடி வந்து ஏழெட்டு மாசம் ஆச்சு. உன்னைப் பத்தி இந்த நகர்ல ஒருத்தருக்குமே தெரியல.’ என்று குத்திக் காட்டுகிறார்கள். அதனாலதான், இப்படியொரு ஓரங்க நாடகம் போட வேண்டியதாப் போச்சு” என்று தம் மனசாட்சியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டே நடந்தார் எழுத்தாளர் சீதேவிதாசன்!

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ








7 கருத்துகள்:

  1. நன்றி தனபாலன்.

    மிக்க நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  2. எழுத்தாளன் படும் பாட்டை அழகாகச் சித்தரித்து உள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  3. எழுத்தாளன் படும் பாட்டை அழகாகச் சித்தரித்து உள்ளீர்கள்

    பதிலளிநீக்கு