Feb 7, 2013

சிறுகதைக்குச் ’சவக்குழி’ தோண்டும் விகடனின் ‘நட்சத்திர’ எழுத்தாளர்கள்!!!

நட்சத்திர எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் “மின்மினி”க் குழறுபடிக் கதை!!!

விகடனில், அண்மைக் காலங்களில் சிறுகதை எழுதிய ‘நட்சத்திர எழுத்தாளர்’ எனப்படுபவர்களில் மிகப் பெரும்பாலோருக்கு, ’கதை படிக்கும் வாசகர்களில் பலரும் சிறுகதை பற்றி நன்கு அறிந்தவர்கள்; தரமான படைப்புகளை எதிர்பார்ப்பவர்கள்’ என்னும் குறைந்தபட்ச அறிவுகூட இருப்பதாகத் தெரியவில்லை!

கரு இல்லாமலே கதை எழுதுகிறார்கள்! ஒன்றுக்கும் மேற்பட்ட கருக்களை மையப்படுத்தி, ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாமல் எதையெல்லாமோ வர்ணித்து...விவரித்து, வாசகரை மயங்க வைக்கிறார்கள். [இது பற்றியெல்லாம் என் பதிவுகளில் எழுதியிருக்கிறேன்]

மனம் போன போக்கில் தமக்குத் தெரிந்ததையெல்லாம் எழுதிப் பக்கத்தை நிரப்பிவிட்டு, குழு சேர்த்து, கருத்தரங்குகள் நடத்தித் தம்மை மிகச் சிறந்ததொரு படைப்பிலக்கியவாதி எனப் பறைசாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் பெறுகிறார்கள்.

எழுத்தாளர் ராஜேஷ்குமார், இம்மாதிரி முயற்சிகளில் ஈடுபடுகிறாரோ இல்லையோ, சமுதாயப் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதாக நினைத்து இவர் எழுதும் கதைகளில் கணிசமானவை தரமற்றவை என்றே சொல்லத் தோன்றுகிறது

இந்த வார ஆனந்த விகடனில் [06.02.13] வெளியாகியுள்ள ‘பதினோராவது பொருத்தம்’ என்னும் சிறுகதையும் இதை உறுதிப்படுத்துகிறது.

கதைக்குச் செல்வோம்.

கதைத் தலைப்பு:     பதினோராவது பொருத்தம்

’வர்ஷா’ ன்னு, எம்.ஏ.சோஷியாலஜி படித்த ஒரு 23 வதுப் பெண்ணை நிருபர்கள் பேட்டி காண்பதாகக் கதை ஆரம்பமாகிறது.

எடுத்த எடுப்பில், வர்ஷாவை, 23 வயதான சித்தன்ன வாசல் ஓவியம் என்கிறார் எழுத்தாளர்.

[ஏனுங்க எழுத்தாளரே, இப்படியொரு அட்டகாசமான அழகுப்பெண் கதைத் தலைவியா இருந்தாத்தான் வாசகன் மேலே படிப்பான்னு நம்புறீங்களா?!]

ஆறு மாத காலமா ’மயிலிறகு’ என்னும் அமைப்பை நடத்திச் சமுக சேவை செய்ததுக்காக, அந்தப் பொண்ணுக்கு, ‘மகிள ரத்னா’ங்கிற பெயரில் விருது வழங்கப்பட்டதாகவும், அதன் பின்னணியில்தான் நிருபர்கள் பேட்டி காண்பதாகவும் கதையைத் தொடங்கியிருக்கிறார் ராஜேஷ்குமார்.

வெறும் ஆறு மாசத்தில் இது எப்படிச் சாத்தியமானது என்பது ஆசிரியருக்கு மட்டுமே விடை தெரிந்த புதிர்!


வாழ்க்கையில் வெறுப்படைந்து, தற்கொலையோட விளிம்புக்குப் போன எத்தனையோ பேருக்கு கவுன்சலிங் கொடுத்து வசந்த காலத்தைக் காட்டியதாக வர்ஷா சொல்றா நிருபர்களிடம்.

ஆறே ஆறு மாசத்தில், ‘எத்தனையோ பேரைக் கண்டுபிடிச்சி, மனமாற்றம் செய்வது நடை முறை சாத்தியமே இல்லையே? என்ன நம்பிக்கையில் இப்படியெல்லாம் எழுதுகிறார் கதாசிரியர்? தமிழ் வாசகனுக்குச் சிந்திக்கும் அறிவே கிடையாதுன்னு நம்புகிறாரா?


மன நிலை பாதிக்கப்பட்டவங்களுக்குக் கவுன்சலிங் கொடுக்க எம்.ஏ. சமூகவியல் படிப்பு போதாது; இதுக்கெல்லாம் உளவியல் படிப்பு படிச்சிருக்கணும். இதெல்லாம் அவருக்கு எப்படித் தெரியாம போச்சு?

சித்தன்ன வாசல் ஓவியம் என்பதால, இதெல்லாம் முடியும்னு நம்பிவிட்டாரோ!?

அப்புறம்.....

‘ஆறாடி உயரம். அமெரிக்கச் சிவப்பு. சீராக ட்ரிம் செய்த தாடி...மீசை. தலை கொள்ளாத சுருள் முடி. உதட்டில் புன்னகை’.....இப்படியான தோற்றம் கொண்ட பேரழகனான ஓர் இளைஞனும் கதையில் நுழைக்கப்படுகிறான்.[அழகில்லேன்னா நம்ம பிரபலங்களின்  கதைகளில் ஒரு பாத்திரமா இடம் பெறவே முடியாதோ?]

அவனோட அப்பா. அழகழகான பொண்ணுகளையெல்லாம் அவனுக்குக் காட்டுறார்.  “எனக்கு இன்னும் அழகான பொண்ணு வேணும்”னு அவன் அடம் பிடிக்கிறான்.

நம்ம வர்ஷா கிட்டே அவனைக் கவுன்சலிங் பண்ணிச் சம்மதிக்க வைக்கும்படி வேண்டுகிறார் அவனோட அப்பா. அவர் இவள் அப்பாவுக்குக் குடும்ப நண்பர். ’விகாஷ்’கிற அந்தப் பயனும் இவளுக்குச் சின்ன வயசிலிருந்து பழக்கம்தான்.

அவனுக்கு இவள் கவுன்சிலிங் தர்றாளாம்!

எப்படி?

“நீ உன் கல்யாண விஷயத்தில் ஏன் இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறே?”

“நீ பத்து அழகான பெண்களைப் பார்த்தே. ஆறு பேர் ரொம்ப அழகு. யாரையும் கட்டிக்க மாட்டேனுட்டே. உன் அப்பா மனசு எவ்வளவு கஷ்டப்படும் தெரியுமா?”

“விகாஷ், உன் மெண்டாலிட்டி ஏன் இப்படி இருக்குன்னு தெரியல.”

“ஜோதிட ரீதியா பத்துப் பொருத்தமும் இருக்கு.”

“பேசாம அமெரிக்காவிலேயே ஒருத்தியைக் கட்டிக்கோ.”

இப்படியாகக் கேள்விகள் கேட்டுக் கேட்டு விகாஷுக்கு வர்ஷா கவுன்சலிங் தந்தாளாம்!

இதுக்குப் பேர்தான் கவுன்சலிங்கா?

ராஜேஷ்குமார் இனியேனும் சிந்திப்பாரா?

இப்படியெல்லாம் பித்துக்குளித்தனமா கண்டதை எழுதி, வாசகரின் வெறுப்பைச் சம்பாதிக்கலாமா அவர்?

அழகான பொண்ணுகளையெல்லாம் ஒதுக்கித் தள்ளிய விகாஷ், தன் சித்தி மகனோட கல்லீரல் அறுவைக்குத் தன் கல்லீரலிலிருந்து தானம் செய்த ’பூஜா’ங்கிற பெண்ணை மணக்க முடிவு செய்கிறான்.

“இரண்டாண்டுக்கு முன்பு, அமெரிக்காவில் என் நண்பனுக்குச் சிறுகுடல் தானம் பண்ணினேன் நான். அதனால, உறுப்பு தானம் பண்ணின பூஜாவுக்கும் எனக்கும் பதினோராவது பொருத்தம் இருக்கு” அப்படீன்னு அதுக்கான காரணமும் சொல்கிறான்.

அவன் முடிவு சரியே. நல்ல கொள்கை முடிவுதான்.

நமக்கு எழுகிற சந்தேகம்...........

இப்படியொரு உயர்ந்த கொள்கை தனக்கு இருப்பதைத் தன் தந்தையிடமோ, பிறரிடமோ சொல்ல விடாமல் எது தடுத்தது?

”இன்னும் அழகான பொண்ணு வேணும் ...வேணும்”னு அவன் ஏன் பொய் சொல்லித் திரியணும்?

இப்படியெல்லாம் ‘ட்விஸ்ட்’ இருந்தாத்தான் கதையில் விறுவிறுப்பு இருக்கும்னா, இப்படி நீட்டி முழக்கி ஒரு கதை சொல்வது தேவையே இல்லையே.

அப்பா தேர்வு செய்யுற பொண்ணுகளையெல்லாம் விகாஷ் வேண்டாம்னு ஒதுக்குறான். சலித்துப் போன அவர், “உன் மனசில் என்னதான் நினைச்சிட்டிருக்கே?”ன்னு கேட்கிறார்.

”ஊனமுற்ற பெண்ணுக்கோ, ஏழைப் பெண்ணுக்கோ வாழ்வு கொடுப்பது மாதிரி, உறுப்பு தானம் செய்த பெண்ணைத்தான் மணப்பேன்”னு அவன் சொல்கிற மாதிரி கதையை முடிச்சிருந்தா அருமையான ஒரு ஒரு பக்கக் கதை உருவாகியிருக்குமே?

ஒரு பெரிய நட்சத்திர எழுத்தாளர் ஒரு பக்கக் கதையெல்லாம் எழுதக்கூடாதோ?

கூடாது. அதலாலதான், தலையைச் சுத்தி மூக்கைத் தொட்டிருக்கிறார் கதாசிரியர்.

’ஒரு பிரபல எழுத்தாளர் என்றால், நம் வாசகர்கள் இப்படியெல்லாம் தோண்டித் துருவிக் குறைகளைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட மாட்டார்கள். இதழ் விற்பனை கூடுமே தவிர குறைய வாய்ப்பில்லை’ என்ற நம்பிக்கை நம் பத்திரிகையாளர்களுக்கு எப்போதும் உண்டு.

இம்மாதிரிக் கதைகளை அவர்கள் தொடர்ந்து வெளியிட இது ஒரு முக்கிய காரணம்.

இன்னும் காரணங்கள் இருக்கின்றன. அவற்றைச் சொல்வதால் பயன் என்ன?

பத்திரிகை ஆசிரியர்களோ, நட்சத்திர எழுத்தாளர்களோ செவி மடுக்கவா போகிறார்கள்?!

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000