ஞாயிறு, 21 ஜூலை, 2013

கேள்வியும் நானே! பதிலும் நானே!! [விகடன் பாணி]

”எங்கடா கிளம்பிட்டே?”

“கோயிலுக்குப் போறேன்”

“எதுக்கு?”

“எல்லாரும் எதுக்குப் போவாங்களாம்?”

“பொழுது போக்க, சிற்பக் கலையை ரசிக்க, ஃபிகர்களை சைட் அடிக்க, கொள்ளையடிக்க, மனப்பூர்வமா சாமி கும்பிட...இப்படி எத்தனையோ காரணங்கள் இருக்கு. நீ எதுக்குப் போறே? எதிர்க் கேள்வி கேட்காம பதில் சொல்லு.”

“சாமி கும்பிடத்தான் போறேன்.”

“எதுக்கு சாமி கும்பிடணும்?”

“எல்லாரும்...சாரி, என் கஷ்டங்கள் நீங்க.”

“கடவுளைக் கும்பிட்டா கஷ்டங்கள் நீங்கும்னு யார் சொன்னது?”

“பெரியவங்க சொல்லியிருக்காங்க.”

“பெரியவங்கன்னா...?”

“ஞானிகள். ஆன்மிக வாதிகள்.”

“கஷ்டங்களைக் கொடுத்தது யார்னு அவங்ககிட்டே கேட்டிருக்கியா?”

“இல்ல.”

“நீயா யோசிச்சிருக்கியா?”

“இல்ல.”

“கடவுள்தான் கஷ்டங்களைக் கொடுத்தார்னு நான் சொல்றேன். ஒத்துக்கிறியா?”

“மாட்டேன்.”

“ஏன்?”

“கடவுள் கருணை வடிவானவர்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க.”

“கருணை வடிவானவர் கடவுள், சரி. நீ பிறக்குறதுக்கு முன்பே, ‘உன்னை மனுஷனா பிறப்பிக்கப் போறேன். இன்பங்களைவிடத் துன்பங்கள் நிறைய அனுபவிக்க வேண்டியிருக்கும்’னு உன்கிட்டே அவர் சொல்லியிருக்காரா?”

“ஹி...ஹி...பிறக்குறதுக்கு முன்பே எப்படிச் சொல்ல முடியும்?”

“முந்தைய பிறவிகள்ல  நீ மண்ணாவோ, மரமாவோ, எருமையாவோ, பன்றியாவோ இருந்திருப்பே. ஒவ்வொரு பிறவிக்கு இடையிலேயும் பேயாவோ, பிசாசாவோ ஆவியாவோ, ஆன்மாவாவோ அலைஞ்சிருப்பே. அப்பவே சொல்லலாமே?”

“அப்படியெதுவும் அவர் சொல்லி நான் கேட்டதா ஞாபகம் இல்ல.”

“சரி. நீ மனுஷனா பிறந்தப்புறமாவது, உன் கனவிலோ நனவிலோ ‘நான்தான் உன்னைப் படைச்சேன்’னு சொன்னாரா?”

“ஊஹூம்......இல்ல.”

“நிச்சயமா?”

“நிச்சயமா.”

“சத்தியமா?”

”சத்தியமா.”

“ஆக, மனுஷனா பிறக்குறதுதான் உன் விருப்பம் என்பதைச் தெரிஞ்சிட்டுக் கடவுள் உன்னைப் படைக்கல; உன் அனுமதியோடவும் அதைச் செய்யல; அவர் விருப்பத்துக்கு உன்னை இப்படிப் பிறப்பிச்சிருக்கார். இன்பங்களோட துன்பங்களையும் கொடுத்திருக்கார். இன்னிக்கிவரை, அவர் நினைச்சபடி நீ இன்ப துன்பங்களை அனுபவிச்சிருக்கே. இனியும் அவர் விரும்புகிறபடிதான் அனுபவிக்கணும். அவரைக் கும்பிடுவதாலோ, நெஞ்சுருகி, ஆடிப்பாடி அவர் புகழ் பாடுவதாலோ  நீ நினக்கிறபடியெல்லாம் எதுவும் நடந்துடாது. புரியுதா?”

“புரியுது.”

“புள்ள குட்டிகள் இருந்தா, அதுகளை நல்லாப் படிக்க வை. போ...போடா.”

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

குறிப்பு:

நான் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதால், அடுத்துப் பதிவிடுவதில் சற்றே தாமதம் ஏற்படும்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@











புதன், 17 ஜூலை, 2013

காதலைப் ’புனிதம்’ என்றவன் முட்டாள்! அதை நம்புகிறவன் அடிமுட்டாள்!!

 “அருவருப்பான தோற்றம் கொண்ட ஆணோ பெண்ணோ காதலிக்கப்பட்டதாக வரலாறு உண்டா?”... கொஞ்சம் யோசித்த பின்னர் பதிவைப் படியுங்கள்.

 அன்பு, பாசம், நேசம், கோபம், தாபம், காதல், காமம் போன்றவை அன்றாடம் நம்மை ஆளுகிற உணர்ச்சிகளைக் குறிக்கும் சொற்கள்.

இந்தப் பதிவுக்குத் தொடர்புடைய அன்பு, கருணை, காமம், காதல் ஆகிய பதங்களுக்கான பொருள் வேறுபாட்டையும், அந்த உணர்ச்சிகள் நம்முள் ஏற்படுத்தும் விளைவுகளையும்  முதலில் தெரிந்து கொள்வோம்.

அன்பு: ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் பற்றுதல். இந்த உணர்ச்சிக்கு ஆட்படுவதால் ஏற்படும் விளைவு, ஒருவர் நலனில் இன்னொருவர் அக்கறை கொள்ளுதல்; உதவுதல்.

கருணை: சொந்தமோ பந்தமோ இல்லாதவர் மீதும் செலுத்துகிற அன்பு. இதன் விளைவு, பிரதி பலன் கருதாமல் உதவுதல்.

காமம்: கவர்ச்சி காரணமாக ஆண் பெண் உடல் உறுப்புகளில் உருவாகும் கிளர்ச்சி. விளைவு, புணர்ச்சிக்குத் தூண்டுதல்; இன விருத்தி செய்தல்.

காதல்: அன்பு, காமம் என்னும் பொருள்களும் இச்சொல்லுக்கு உண்டு. பிற்காலத்தில், குறிப்பாக, 20ஆம் நூற்றாண்டில் ஆண் பெண் உறவைக் குறிக்க மட்டுமே பயன்படுகிறது.

அன்பு, கருணை ஆகியவற்றின் பயன் பிறருக்கு உதவுதல். காமத்தின் பயன் புணர்ச்சி என்பது போல, காதல் கொள்வதன் பயன் என்ன என்னும் கேள்விக்கு எளிதாகப் பதில் தர இயலவில்லை.

அதன் பயன்தான் என்ன?

பக்கம் பக்கமாக உணர்ச்சியைக் கொட்டிக் கடிதங்கள் எழுதிக் குதூகலித்த காலம் மலையேறிவிட்டது.

கைபேசிகளில், இவளது அழகை அவன் வர்ணித்தும், அவனது ஆண்மையை இவள் வியந்தும் பேசிப் பேசிப் பேசி இன்ப உலகில் சஞ்சரிக்கிறார்கள். இது, காதலிப்பதால் விளையும் முதல் பயன்.

அடுத்து, பட்டும் படாமலும் ஒட்டியும் உரசியும் மனம் போன போக்கில் கை கோத்துத் திரிவது; மறைவிடம் வாய்த்தால் முத்தங்களைப் பரிமாறிக்கொள்வது.

அடுத்து?

இருவருக்கும் ‘தில்’ இருந்தா லாட்ஜில் ரூம் போட்டு, பஞ்சணையைப் பகிர்ந்துகொண்டு, சொர்க்கபுரியை எட்டிப் பார்த்துவிட்டு வருவது. அதுக்குத் தைரியம் இல்லேன்னா, பெற்றெடுத்தவர்களுக்கு மனு போட்டுவிட்டு முதலிரவுக்காகக் காத்திருப்பது.

இரு தரப்பிலும் அனுமதி மறுக்கப்பட்டா, ஓடிப்போவது. அதுக்கேற்ற சூழ்நிலையும் பொருளாதார வசதியும் இல்லேன்னா, கட்டிப்பிடிச்சுட்டு விஷம் தின்னு செத்துப் போவது.

ஆக, இவர்கள் காதலிப்பதன் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். அது?

செக்ஸ்.....அதாவது , ‘காமம்’.

“இல்லை...இல்லை. இப்படிச் சொல்வது அபத்தம். காதல் என்பது புனிதமானதொரு உணர்ச்சி. அது, வெறும் கவர்ச்சியில் உதிப்பதல்ல; இரு அன்பு நெஞ்சங்களின் கலப்பில் முகிழ்ப்பது” என்று வியாக்கியானம் தருவதோடு, ‘அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே’ [குறுந்தொகை] என்னும் சங்கப் புலவனின் பாடல் வரிகளையும் மேற்கோள் காட்டுவார்கள்.

இந்த மேற்கோள் இங்கு தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது களவுப் புணர்ச்சியின் போது, தலைவியைப் புணர்ந்து மகிழ்ந்த தலைவன், அவன் தன்னைக் கைவிட்டுவிடுவானோ என்னும் அவளின் அச்சத்தைப் போக்குவதற்காக, ‘நம் உடல்கள் மட்டும் இப்போது இணையவில்ல; நம் உள்ளங்களும் இணைந்திருக்கின்றன. நான் உன்னைக் கைவிட மாட்டேன்” என்று சொல்வதாக எழுதப்பட்ட பாடல் இது. இங்கு காதலின் மகத்துவம் பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை.

காதல், தோல்வியில் முடிகிற போது காதலர்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்களே, நீ சொல்வது போலக் காதலிப்பதன் நோக்கம் காமம்தான் என்றால் இது சாத்தியமா என்று நீங்கள் கேட்கக்கூடும்.

சாத்தியம்தான். இம்மாதிரி தற்கொலைகளுக்குக் காரணம் காதலர்களைப் பீடித்திருக்கும் ஒருவிதமான மன நோய்.

இந்நோய்க்கு வித்திட்டவர்கள், காதல் கவிதைகள் எழுதிப் புகழ் பெற விரும்புகிற, பிழைப்பு நடத்துகிற கவிஞர்களும் கதாசிரியர்களும் சினிமாக்காரர்களும்தான்.

“காதல் போயின் சாதல்” என்று பாரதி பாடியிருக்கிறானே என்றால், வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்கள் சொன்னவையெல்லாமே இன்று நம்மவர்க்கு உடன்பாடானவை அல்ல என்பதே என் பதில்.

மனிதன் விலங்காக இருந்தவரை, சூழ்நிலை வாய்க்கும் போதெல்லாம் உடலுறவு கொண்டு காம இன்பத்தைத் துய்க்க முடிந்தது. ஆறறிவு வாய்த்து, அது வளர்ச்சி பெற்ற நிலையில், பொருளாதாரம், குடும்பச் சூழல் போன்ற காரணங்களால் அது சாத்தியம் இல்லாமல் போனது. நடைமுறையில் துய்க்க முடியாத இன்பத்தைக் காதல் என்னும் பெயரில் கற்பனையில் துய்க்க ஆரம்பித்தான். இவனின் இந்த பலவீனத்தை நம் கவிஞர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்; காதல் கவிதைகளை எழுதிக் குவித்தார்கள்.

இனி யாரும் காதல் கவிதைகள் படைக்கக் கூடாது என்று ஒரு தடைச் சட்டம் பிறப்பிக்கப் படுமேயானால், இன்றுள்ள கவிஞர்களில் பலர் தற்கொலை செய்து கொள்வார்கள்!

உண்மையில், சிறப்பித்துப் பாடப்பட வேண்டியது காமம்தான்.

ஆறாவது அறிவின் வளர்ச்சி காரணமாக, மனிதன் தனக்குத் தானே விதித்துக் கொண்ட கட்டுப்பாடுகளும் தடைகளும் போட்டிகளும், இவற்றால் விளையும் துன்பங்களும் காமத்தின் மீதான வெறுப்புணர்வையும், அது பற்றி நாலு பேர் முன்னிலையில் வெளிப்படையாகப் பேசுவதற்கான தயக்கத்தையும் உண்டுபண்ணிவிட்டனவே தவிர, இப்போதும் மக்களால் மதிக்கப்பட வேண்டியது காமம்தான்.

நினைத்த போது நினைத்த இடத்தில் எவருடைய அல்லது எதனுடைய குறுக்கீடும் இல்லாமல் ஆசைப்பட்டபடியெல்லாம் அதைத் துய்க்க நேர்ந்தால் அதுவே மகத்தான இன்பம்! பேரின்பம்!!

”அடேய்! பண்ணாடைப் பயலே...காமாந்தகா...களிமண் மண்டையா, இதெல்லாம் அற்ப சுகமடா; சிற்றின்பமடா. நிறையப் புண்ணியங்கள் சேர்த்து, இறைவனின் திருவடியை அடைந்து பெறுகிற இன்பம்தான்  பேரின்பம். தெரிஞ்சிக்கோ” என்று இதைப் படித்துக் கொண்டிருப்பவர்களில் யாரோ ஒருத்தர் ஓங்கிய குரலில் அலறுவதை ‘அசரீரியாய்’ என்னால் இப்போது கேட்க முடிகிறது!

என்ன செய்ய? நானும் எவ்வளவோ முயற்சி பண்றேன். கடவுள், பாவம், புண்ணியம் சொர்க்கம், நரகம், பேரின்பம் பத்தியெல்லாம் எனக்கு ஒரு மண்ணும் புரியலீங்க. நீங்க எத்தனை திட்டினாலும் நான் திருந்த மாட்டேங்க..

அது கிடக்கட்டுங்க. நான் காமம் உயர்வானதுன்னு சொல்லிட்டிருந்தேன் இல்லியா?

ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிட்டு, உரிய முறையில் காம சுகத்தைப் பகிர்ந்துகிட்டா கணவன் மனைவிக்கிடையே அன்பு பெருகும்; இல்லத்தில் ஆனந்தம் தவழும்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க.

இதையும், மேலே சொன்ன அவ்வளவையும் மனதில் இருத்தி, மணமாகாத இளைஞர்களுக்கு நான் சொல்ல விரும்புவது..........

“தயவு செய்து காதல் செய்ய வேண்டாம்.”

=====================================================================================







திங்கள், 15 ஜூலை, 2013

வாருங்கள்...விதியோடு கொஞ்ச[சி]ம் விளையாடுவோம்!

ன்ன நேரத்தில், இன்ன இடத்தில், இது இதெல்லாம், இப்படி இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்டது விதி.

15.07.2013 பிற்பகல் மணி 04.03க்கு இந்தப் பதிவு எழுதி முடிக்கப்படணும்கிறது இந்த ஒரு நிகழ்வுக்கான விதி.

இதை நான்தான் எழுதணும்கிறது காமக்கிழத்தனாகிய எனக்கென வகுக்கப்பட்ட விதி.

இதை இப்போ நீங்க படிச்சிட்டிருக்கீங்க இல்லியா, இது உங்களுக்கான  [தலை]விதி.

எதிர்பாராம மின்சாரம் ’கட்’ ஆகுது [ups இல்லீன்னு வெச்சிக்கோங்க]. ”அடச் சே...”ன்னு எரிச்சலோட மேசை மேல ஓங்கித் தட்டுறீங்க. அங்கே உட்கார்ந்திருந்த ஒரு ‘ஈ’ நசுங்கிச் செத்துப் போகுது. இது ஈயோட விதி.

“டாக்டர் எஞ்சினீர்னு யார்யாரோ என்னைப் பெண் கேட்டு வந்தாங்க. ஆளு ஹீரோ  மாதிரி இருக்கார்னு இந்த ஆளை ஆசைப்பட்டுக் கட்டிகிட்டேன். இப்போ கல்யாணம் காட்சின்னு போனா கட்டிக்க ஒரு பட்டுப் புடவைகூட இல்ல. ஒரு வேளைச் சாப்பாட்டுக்கே சிங்கியடிக்கிறோம். எல்லாம் விதி...என் தலை விதி.” இது என் எதிர்த்த வீட்டு அன்னபூரணி. இப்படித் தன் விதியைச் சொல்லிப் புலம்புற அன்னபூரணிகள் எல்லா ஊர்களிலும் இருக்காங்க.

“சென்னைக்குக் கார் எடுத்துட்டுக் கிளம்பினான். ரெண்டு தோசை போடுறேன் சாப்பிட்டுப் போடான்னு சொன்னேன். ஆம்பூர் போயி பிரியாணி சாப்பிடுறேனுட்டுப் போனான். பின்னால போன கார்க்காரன் இடிச்சதுல அந்த நிமிசமே எமலோகம் போய்ச் சேர்ந்துட்டான். தோசை சாப்பிட்டுட்டுப் பத்து நிமிஷம் கழிச்சிப் போயிருந்தா இந்த விபத்து நடந்திருக்குமா? விதி யாரை விட்டுவெச்சுது?” இப்படிப் புலம்பினது என் சிநேகிதனுக்குச் சினேகிதனோட அம்மா செல்லம்மா. இப்படி ஒரு செல்லம்மாவை உங்களுக்கும் தெரிஞ்சிருக்கலாம். மேலும் பல பேரைக் கேள்விப்பட்டும் இருக்கலாம்.

இப்படி, விதியை நினைக்காத, அதைப் பத்திப் பேசாத மனுசங்க இந்த உலகத்தில் இல்ல; இல்லவே இல்லை.

இப்போ, உங்க பகுத்தறிவு மூளையில், மனுசங்களுக்கு மட்டும்தான் விதியா, மத்த உயிர்களுக்கு இல்லையான்னு ஒரு கேள்வி தலை தூக்கியிருக்கும்.

அடர்ந்த காட்டுக்குள்ள ஒரு மான். வயிராற புல் மேஞ்சுது. தாகம் எடுத்ததால ஒரு நீர் நிலையத் தேடிப் போகுது. அந்தப் பக்கத்தில் சிங்கம், சிறுத்தை, ஓநாய் போன்ற கொடிய மிருகங்களின் நடமாட்டம் இருப்பது அதுக்குத் தெரியும். ரொம்ப எச்சரிக்கையா நாலா புறமும் பார்த்துட்டே நீர்நிலையை அடைந்து, தண்ணீரில் வாயை வெச்சி உறிஞ்ச ஆரம்பிக்குது. தாகம் எல்லை மீறிப் போனதால தண்ணிக்குள்ள முதலை இருப்பதை மறந்துடிச்சி. தண்ணியில் வாயை வெச்ச அடுத்த நொடியே உள்ளேயிருந்து ’சரேல்’னு மேலெழும்பிய ஒரு முதலை மானின் தலையைக் கவ்விப் பிடிச்சி உள்ளே இழுத்துட்டுது. அன்னிக்கி தினத்தில் ஒரு முதலைக்கு இரையாகணும்கிறது அந்த மானுக்கு நிர்ணயிக்கப்பட்ட விதி. சுவையா மான் கறி சாப்பிட்ணும்கிறது முதலையோட விதி. இப்படி எல்லா உயிரையும் விதி ஆட்டிப்படைக்குது.

ஜடப் பொருள்களையும் அது விட்டு வைக்காது.

பூமி தன்னைத்தானே சுத்திட்டிருக்கு. சூரியனின் ஈர்ப்புச் சக்தியால அது சூரியனையும்  சுத்திச் சுத்தி வருது. என்னிக்கோ ஒரு நாள்,  சூரியனைச் சுத்துறதை நிறுத்திட்டு, தன்னைத்தானே சுத்துறதும் தடைபட்டுக் கீழே கீழே கீழே சரிஞ்சி துக்கிளியூண்டு புள்ளியா மாறி மறைஞ்சும் போச்சுன்னா, அதுக்கும் விதிதாங்க காரணம். யுக யுகாந்தரங்களுக்கு அப்புறம், சூரியனே வெடிச்சிச் சிதறி, வெட்ட வெளியில் சிறு சிறு தீப் பந்துகளா சுத்தி வர ஆரம்பிச்சா  அதுவும் விதியினுடைய சித்து விளையாட்டுதான். ஆக, பிரபஞ்சத்திலுள்ள எந்தவொரு பொருளும் விதியின் கிடுக்கிப் பிடியிலிருந்து தப்பவே முடியாது.

”என்னப்பா காமக்கிழத்தா, விதி விதின்னு நீ பாட்டுக்குக் கதை அளந்துட்டே போற? ஐந்தறிவு ஜீவன்களும் ஜடப்பொருள்களும் ஒரு பக்கம் இருக்கட்டும். மனுசங்க தங்களுடைய ஆறாவது அறிவைக்கொண்டுதான் சிந்திக்கிறாங்க; செயல்படுறாங்க. அவங்களை எப்படி விதி கட்டுப்படுத்தும்?”னு நீங்க கேட்க நினைக்கிறீங்கதானே?

அதே கேள்வியைத்தான், கடவுள், ஆன்மா, மறுபிறப்பு, பாவம், புண்ணியம்னு ஏதேதோ பேசுற ஆன்மிகவாதிகள்கிட்டே  நானும் கேட்க நினைக்கிறேங்க.”

“என்னப்பா இது, விதிக்கு விளக்கம் தந்து, உதாரணம் எல்லாம் தந்த நீ இப்போ கட்சி மாறிப் பேசி குழப்புறே?”-இது நீங்க.

நான் கட்சியெல்லாம் மாறலீங்க. மேலே நீங்க படிச்சதெல்லாம் ஆன்மிகவாதிகள் சொல்லிட்டுப் போன வியாக்கியாணங்களை அடிப்படையா வெச்சி நான் சொன்னதுங்க. எனக்கு இந்த விதி சதி மேலெல்லாம் நம்பிக்கை கிடையாது. மனுசனுக்கு ஆறறிவு இருக்கு. சுயமா சிந்தித்துச் செயல்பட முடியுது. மூளையின் செயல் திறனைப் பொருத்து அவனுக்கு இன்ப துன்பங்கள் நேருதுன்னு நம்புறவன் நான்..

ஒரே ஒரு உதாரணம் மட்டும். [பாதி படிச்சதோட நீங்க ஓடிடக் கூடாதில்ல?]

மழை பெய்து தரையெல்லாம் ஈரமா இருக்கு காத்தும் வேகமா வீசுது. அந்தக் கட்டம் போட்ட சட்டைக்காரர் அவசர வேலையா போய்ட்டிருக்கார். ஒரு சாலையைக் கடக்க நேரும்போது, எதிரே ஒரு கார் வருது. ஈரத் தரை வழுக்குங்கிறது அவருக்குத் தெரியும். ரொம்ப எச்சரிக்கையாத்தான் நடையை எட்டிப் போடுறார். ஆனாலும், ஈரத் தரையில் கால் சறுக்க, குப்புற விழறார்.கார் அவரை மோதித் தள்ளி அரைச்சிட்டுப் போயிடுது.

கட்டஞ்சட்டைக்காரர், அறிவுபூர்வமா செயல்பட்டும் அவர் சறுக்கி விழுந்ததுக்குக் காரணம் திடீர்னு வேகமா வீசிய காத்து. அது அவரை ‘விசுக்’னு பாதையில் தள்ளி விட்டுடிச்சி.”

ஒரு மனிதன் அறிவுபூர்வமா செயல்பட்டும்கூட, எதிர்பாராத சம்பவங்களால் உயிரிழக்கிறான்கிறதுக்கு இந்தச் சம்பவத்தை உதாரணம் காட்டினேன். இந்தச் சம்பவத்தைத் தற்செயலானதுன்னு ஆன்மிகவாதிகள் ஒத்துக்க மாட்டாங்க.

“திடீர்னு அதி வேகத்தில் காத்து வீசிச்சே, அது எப்படி? அதுதான் விதியின் செயல். கட்டஞ்சட்டைக்காரரைக் கொல்வதற்கு இங்கே அதி வேகக் காற்றைப் பயன்படுத்தியது விதி”ன்னு வாதிப்பாங்க.

’காற்றின் வேகத்தை அனுமானித்து, தன் வேகத்தைக் கட்டுப்படுத்தி அவர் உயிர் பிழைத்திருந்தால்......’இப்படி நாம் மடக்கினா, அதுக்கும் ரொம்ப சாமர்த்தியமா பதில் சொல்லிடுவாங்க.

அந்தப் பதில், “அவர் அன்னிக்கி சாகக் கூடாதுங்கிறது விதி. ’இதை இப்படிச் செய். அதை அப்படிச் செய்’ என்று மனித அறிவை நெறிப்படுத்துவதே விதிதான். சுருக்கமா சொன்னா, ஐந்தறிவு, ஆறாவது அறிவு, பகுத்தறிவு, பகுக்காத அறிவு எல்லாமே விதிக்குக் கட்டுப்பட்டவைதான்” என்பதாக இருக்கும்.

இவங்க வாதத்தைச் சரின்னு ஏத்துகிட்டா,  கை அசைக்கிறது, கண் சிமிட்டுறது, ஒன்னுக்கு ரெண்டுக்குப் போறது, பொறாமைப் படுறது, பொய் பேசுறது, புணர்ச்சி பண்றது ...இப்படி எல்லார்த்துக்குமே விதிதான் காரணம்னு சொல்லவேண்டி வரும்.

பிறக்கிற குழந்தைக்குத் தலையில் எத்தனை மயிர் இருக்கணும். வளர்ந்த ஒரு மரத்தில் ஒரு மைக்ரோ வினாடியில் எத்தனை இலை உதிரணும். உலகத்திலுள்ள  ஒவ்வொரு உயிரும் பெய்யுற மூத்திரம் என்ன என்ன எடையில் இருக்கணும் என்பதெல்லாம்கூட விதியின் மூலம் நிர்ணயிக்கப் படணும். இல்லையா?

இதெல்லாம் சாத்தியமா? அப்புறம் என்னங்க விதி? வெண்டைக்காய் விதி.

”எல்லாம் விதிப்படிதான் நடக்கும்னா, மனுசனுக்கு அறிவுன்னு ஒன்னு எதுக்கு?”

இப்படி ஒரு கேள்வியை முன் வைத்தால்?

“மனிதன் செய்கிற பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப, அவன் பல பிறவிகள் எடுத்து இன்ப துன்பங்களை  அனுபவிக்கணும்கிறது விதி. பிறவித் துன்பத்திலிருந்து விடுபட விதியை எதிர்த்துப் போராடி ஜெயிக்கணும். அதுக்குக் கடவுளின் கருணை தேவை. கடவுளை உணர ஆறறிவு தேவை.” என்பது அவர்கள் பதிலாக இருக்கலாம்.

“என்னதான் பகுத்தறிவுடன் செயல்பட்டாலும், விதிப்படிதான் எல்லாம் நடக்கும்னு சொல்றீங்க. விதியே நம்முடைய அத்தனை செயல்களுக்கும் காரணம்னா, நாம் செய்யுற பாவ புண்ணியங்களுக்கும் விதிதானே பொறுப்பு? அப்புறம் எதனால் மனுசனுக்குப் பிறவித் துன்பம்? ஏன் இப்படி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி மக்களைக் குழப்புறீங்க?”

இப்படிச் சவுக்கடி கொடுத்தால்.........

“இதெல்லாம் மகான்கள் சொல்லிப் போனது. அவங்களைத் தூஷனை பண்ணினா பாவம் வந்து சேரும்” என்று பயமுறுத்துவார்கள்; கேள்வி கேட்போருக்கு எதிராக மக்களைத் தூண்டுவார்கள்.

பிரபஞ்சம் ஏன்? அதன் தோற்றம் ஏன்? பிறவி ஏன்? இன்ப துன்பங்கள் ஏன்? இவை அனைத்திற்கும் மூலாமானவர் என்று சொல்லப்படும் கடவுள் ஏன்? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு, பதில் கிடைக்காமல், எப்படியோ பிறந்து தொலைச்சிட்டோம். உயிர் இருக்கும்வரை வாழ்ந்து முடிப்போம் என்ற நடைமுறை சாத்தியமான கொள்கையோடு வாழ்ந்த சிந்திக்கத் தெரிந்த மனிதர்களையும்கூட.....

 விதி, பாவம் புண்ணியம் மோட்சம் என்று எதையெதையோ சொல்லிச் சொல்லி, கடவுள் துதி பாடச் செய்துவிட்டார்கள் ஆன்மிகவாதிகள்.

இவர்கள் சொல்வது போல், விதி என்று ஒன்று இருக்கிறதா? அதை எதிர்த்துப் போராடி வெற்றி காணக் கடவுள் நம்பிக்கையும் வழிபாடும் தேவையா?

இந்தக் கேள்விக்கான நம் மக்களின் பதில் என்னவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். உங்கள் பதில் என்ன?

இதோ என் பதில்.....

”படைப்பு பற்றிய புதிர்களை விடுவித்தவர் எவருமில்லை. எவ்வாறோ பிறந்துவிட்டோம். உயிருள்ளவரை  நமக்குள்ள பகுத்தறிவின் துணையுடன் துன்பங்களை எதிர்த்துப் போராடி இன்ப வாழ்வு வாழ முயற்சி செய்வோம். விதி பற்றிய அச்சம், பிறவிகள் பற்றிய கவலை போன்றவை நம் வாழ்வைத் துன்பமயமாக்கும்.”

******************************************************************************************************************

முக்கிய குறிப்பு:

ஒவ்வொரு பதிவிலும், ‘நான் இப்படி. நீங்க எப்படி?’ன்னு கேள்வி கேட்குறே. பின்னூட்டப் பெட்டி இருந்தாத்தானே எங்க கருத்தைச் எழுத முடியும்னு நீங்க சொல்வதை என்னால் உணர முடியுது.

கடவுள் நம்பிக்கையைச் சாடி எழுதினா, நம்ம சகோக்களில் சிலர் ரொம்பவே உணர்ச்சிவசப்படுறாங்க. அகராதிகளில் இடம் பெறாத வார்த்தைகளால் அர்ச்சனை பண்றாங்க. என் ட்ரவுசரைக் கிழிச்சிப் போட்டு அம்மணமாக்கணும்னு துடிக்கிறாங்க. அதனால.....

மன்னிச்சுடுங்க.

*****************************************************************************************************************















செவ்வாய், 9 ஜூலை, 2013

வேண்டாம் ஜாதி ஒழிப்பு!

வணக்கம். தங்கள் வருகைக்கு நன்றி.

இந்தத் தலைப்பு, தங்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கும் என்பதை நான் அறிவேன்.

அரசுகளும் அறிஞர்களும் பல்வேறு சமூக அமைப்புகளும் சாதிகளை ஒழிப்பதற்குப் பல வழிகளிலும் பாடுபட்டு வரும் நிலையில், இப்படிச் சொல்வது கண்டிக்கத்தக்கது; காட்டுமிராண்டித்தனமானது; தண்டனைக்குரியது என்று நீங்கள் சொல்ல நினைப்பதை என்னால் உணர முடிகிறது.

”ஜாதிகளை ஒழிக்க முடியாது” என்று சொல்பவர்கள்கூட, “ஜாதிகளை ஒழிக்க வேண்டாம்” என்பதை ஏற்க மாட்டார்கள்.

நான் சொல்வது ஏற்கத்தக்கதா இல்லையா என்பதை, இப்பதிவைப் படித்து முடித்த பிறகு நீங்கள் முடிவு செய்யலாம்.

’ஜாதிகள் ஒழிக்கப்படவேண்டும்’ என்பது மக்கள் நலம் நாடுவோரின் நீண்ட கால விருப்பம்.

’ஒழிக்க வேண்டும்’ என்பதற்கான காரணங்களை அறிந்தால், ’ஒழிக்க வேண்டாம்’ என்பதற்கான காரணங்களைப் புரிந்துகொள்வது எளிதாக அமையும்.

’வேண்டும்’ என வாதிடுவோர் முன் வைக்கும் முதன்மைக் காரணம்..........

அவ்வப்போது நடைபெறும் ஜாதிக் கலவரங்கள் காரணமாக அளவற்ற பொருட்சேதங்களும் உயிர்ப்பலிகளும் ஏற்படுகின்றன என்பதுதான்.

இதனையும், இது போன்ற பல தீய விளைவுகளையும் கருத்தில் கொண்டுதான், ”ஜாதிச் சங்கங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்” என்னும் முழக்கம், மக்களின் நலம் நாடுவோரால் அவ்வப்போது எழுப்பப்படுகிறது.

’மக்களின் மனங்களில் ஜாதி வெறியை ஊட்டுபவை இந்தச் சங்கங்கள்தான். இவற்றைத் தடை செய்வதால், வெறி தணிந்து படிப்படியாக ஜாதிப் பற்றும் குறையும். கலப்பு மணங்களின் எண்ணிக்கை பெருகும். காலப்போக்கில், சாதிகளற்ற சமுதாயம் உருவாகும்’ என்பது இவர்களின் நம்பிக்கை.

இவர்களின் நம்பிக்கை செயல் வடிவம் பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளனவா என்பது பற்றி ஏற்கனவே நீங்கள் சிந்தித்திருப்பீர்கள். ஒரு முடிவுக்கும் வந்திருக்கக்கூடும்.

நீங்கள் எடுத்த முடிவுக்கு உரம் சேர்ப்பதாகவோ, அதை மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை உண்டுபண்ணுவதாகவோ என் எண்ணங்கள் அமையலாம் என்ற நம்பிக்கையில்தான் இப்பதிவை வெளியிடுகிறேன்.

இந்த மண்ணின் ஏதோ ஒரு பகுதியில், ஜாதிக் கலவரம் மூண்டு, அது பற்றிய செய்திகளை நாளிதழ்களில் படிக்க நேரும்போது, எனக்குள் நானே எழுப்பிக் கொள்ளும் கேள்வி ஒன்று உண்டு. அது..........

இந்தக் கலவரங்கள் மூளுவதற்கு மூல காரணமாக இருப்பவர்கள் யார்? எவை?

ஒரு சிற்றுண்டிக் கடைக்காரருக்கும் போதையில் இருந்த வாடிக்கையாளருக்கும் இடையே ‘மீதிச் சில்லரை’ கொடுப்பதில் தகராறு. போதை மனிதர் ’வக்காளி’, ‘தக்காளி’ என்று வாய்க்கு வந்தபடி பேச, கடைக்காரர் கை நீட்டிவிடுகிறார். அவரைத் திருப்பி அடிக்க முடியாத நிலையில் சொந்த ஊர் சென்று தன் ஜாதி ஆட்களுடன் வந்து கடையை அடித்து நொறுக்குகிறார் நம் குடிமகன். ஜாதி பேதமின்றி மற்ற கடைக்காரர்களின் சொத்துகளும் சூறையாடப்படுகின்றன.

கடைக்காரரின் ஜாதிக்காரர்கள் போதை ஆசாமியின் கிராமத்துக்குத் திரண்டு போய் அவர்களைத் திருப்பித் தாக்குகிறார்கள்.

குடியிருப்புகள் தரை மட்டம் ஆகின்றன. சுற்று வட்டாரத்தில் உள்ள கரும்புத் தோட்டங்கள் பற்றி எரிகின்றன. பம்ப் செட்கள் உருக்குலைகின்றன.

நூற்றுக் கணக்கில் போலீஸ் படை குவிக்கப்பட்டும் கலவரம் அடங்க நான்கு நாட்கள் தேவைப்பட்டன. [இவை, நான் நேரடியாகக் கண்ட நிகழ்வுகள்]

இது, தனி மனிதர்களால் உருவான ஜாதிக் கலவரம்.

யாரோ ஒரு குடிகாரன் அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவன் அல்லது ஜாதி வெறி ஊட்டி வளர்க்கப்பட்ட ஓர் அசாதாரணன் நாற்சந்தியில் உள்ள ஒரு ஜாதி சார்ந்த தலைவருக்குத் திருட்டுத்தனமாய் செருப்பு மாலை அணிவிக்க, வெடிக்கிறது ஜாதிக் கலவரம்.

இது ஒரு தனி மனிதருக்காக உருவாக்கப்பட்ட கலவரம். இப்படிப்பட்ட பல கலவரங்களால் மக்கள் வாழ்க்கை சிதைந்து சீர்குலைந்து போனதை, நம் சமுதாய வரலாறு சொல்லும்.

இன்னும், காதல் திருமணங்கள்,  கோயில்களில் நுழையத் தடை போன்ற காரணங்களாலும் ஜாதிக் கலவரங்கள் வெடித்திருக்கின்றன. இம்மாதிரி கலவரங்களுக்கும் ஜாதி வெறியர்கள் சிலரே மூல காரணமாக இருந்திருப்பதைக் கொஞ்சம் நுணுகி ஆராய்ந்தால் புரிந்து கொள்ள முடியும்.

இவற்றிற்கும் தனி மனிதர்களே காரணமாக இருந்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு, அரசாங்கத்தின் சட்ட திட்டங்களின் மீதோ நீதிமன்றத்தின் நடுவு நிலை மீதோ எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை. எந்தவொரு ஜாதியிலும் சில பொல்லாதவர்களுக்கிடையே மிகப் பல நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதை இவர்கள் ஒரு போதும் உணர்ந்ததில்லை.

ஆக, தனிப்பட்ட நபர்களுக்காகவே  வெவ்வேறு ஜாதியைச் சார்ந்த பெரும்பான்மை மக்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டு சீரழிந்து போயிருக்கிறார்கள் என்று உறுதிபடச் சொல்லலாம்.

தத்தம் ஜாதிக்குச் சலுகைகள் வேண்டி, உண்ணா நோன்பு மேற்கொள்ளுதல், ஊர்வலம் நடத்துதல் போன்ற போராட்டங்களில் பல்வேறு ஜாதியைச் சார்ந்த மக்களும் ஈடுபட்டிருக்கிறார்களே தவிர, இம்மாதிரி போராட்டங்களின் போது பிற ஜாதியாருடன் மோதலை உருவாக்கியதற்கான  ஆதாரங்கள் ஏதும் எனக்குக் கிடைக்கவில்லை. கொடிக் கம்பம் நடுதல் போன்ற நிகழ்வுகளில் சிறு சிறு குழுக்களாக மோதிக் கொள்வது ஆங்காங்கே நிகழ்ந்திருக்கிறது.

இம்மாதிரி அசம்பாவிதங்களுக்கும்கூட, அனுசரித்துப் போகும் மனப் பக்குவமும் பிறரை மதிக்கும் குணமும் இல்லாத சுயநல விரும்பிகளே காரணமாக இருந்திருக்கிறார்கள்.

ஜாதிச் சங்கங்கள் தடை செய்யப்பட்டாலும்கூட, இந்தச் சுயநலவாதிகள், ‘நம்ம மாவட்டம்’, ‘நம்ம ஊரு’, ’நம்ம தெரு’ என்று ஏதாவதொரு பின்னணியில் மக்களைத் திரட்டி, கலவரங்களில் ஈடுபடத் தயங்க மாட்டார்கள்.

அமைச்சராக இருந்த ஒருவர், ஜாதிச் சங்கங்களில் முக்கிய பதவி பெற முயன்று தோற்றுப் போய், சுயமாய் ஒரு ஜாதிச் சங்கம் ஆரம்பித்து, திருமண விழாக்களில், ஏன், இழவு வாசல்களிலும்கூட தன் கட்சிக்கு ஆள் பிடிக்கும் காட்சிகளையெல்லாம் நான் நேரில் பார்த்து ரசித்திருக்கிறேன்.

இம்மாதிரி சமூக விரோதிகளை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து அமைதி விரும்பிகளான மக்களை விடுவிக்க அறிஞர்களும் பொதுநல விரும்பிகளும் முயல வேண்டுமே தவிர, ஜாதிச் சங்கங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பிக்கொண்டிருப்பதில் பயனேதும் இல்லை எனலாம்.

இம்மாதிரி நச்சுப் பிறவிகளைச் சட்ட நடவடிக்கைகள் மூலமோ, சமுதாயப் புறக்கணிப்பு வாயிலாகவோ திருத்த முயல்வதே புத்திசாலித்தனம் ஆகும்.

எவ்வகையிலேனும் இவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால், பொது வாழ்க்கையில் இவர்களின் தலையீடு மட்டுப்படுத்தப்பட்டால், ஜாதிச் சங்கங்களை ஒழிக்கும் பணி தேவையற்றதாகி, சங்கங்கள் தாமாகவே அழிந்து ஒழிந்து போகும். மக்களின் ஜாதிப் பற்று படிப்படியாக மறையத் தொடங்கும். ஜாதி பேதமற்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்னும் நல்லவர்களின் கனவு நனவாகும் என்பது திண்ணம்.

இது என் நம்பிக்கை. வருகை புரிந்த உங்களின் நம்பிக்கையும் இதுவாகத்தான் இருக்க முடியும்.

******************************************************************************************************************






























வியாழன், 4 ஜூலை, 2013

கேதார்நாத் கடவுளும் மறை கழன்ற கோயில் பூசாரியும்!

சாமி கும்புடுற எல்லாருமே சுயநலவாதிகள்தான்.

”என்னையும் என் குடும்பத்தாரையும்  நோய் நொடி இல்லாம காப்பாத்து”ன்னுதான் சாமியை வேண்டிக்கிறாங்களே தவிர, “ஊர் உலகத்தில் உள்ள அத்தனை பேரையும் நீ காப்பாத்தணும்”னு யாராவது வேண்டிக்கிறாங்களா? இல்லையே!

ஒரு சில இளிச்சவாயர்களைத் தவிர, மிச்சப்பேரெல்லாம் கோரிக்கை நிறைவேறின அப்புறம்தான் ‘நேர்த்திக் கடனை’ச் செலுத்துறாங்க. ”அடுத்த வாரம் செய்யுறேன்... அடுத்த மாசம் செய்யுறேன்”னு தவணை சொல்லிட்டே வந்து சாமிக்கே ‘அல்வா’ கொடுக்கிறவங்களும் இருக்காங்க!

“இந்தக் குறையை நிவர்த்தி பண்ணிக் குடுத்தீன்னா, உனக்குக் கிடா வெட்டிப் பொங்கல் வைக்கிறேன்”, ”உண்டியலில் பணம் போடுறேன்”, ”மொட்டை போடுறேன்”னு நேர்ந்துக்கிறதெல்லாம் வடிகட்டின முட்டாள்தனம்னு நினைக்கிறவன் நான்.

நாம தர்ற விருந்தை சாமி பந்தியில் உட்கார்ந்து சாப்பிடுதா? உண்டியலில் போடுற பணத்தை எடுத்துச் செலவு பண்ணுதா? காணிக்கையா தர்ற தலைமுடியை வித்துக் காசு பண்ணுதா? இல்லையே! எல்லார்த்தையும் மனுஷங்கதானே முழுங்கி ஏப்பம் போடுறாங்க. அப்புறம் எதுக்கு நேர்த்திக்கடன்?

கடவுள்கிட்டப் பேரம் பேசுறது எனக்குக் கொஞ்சமும் பிடிக்காத விஷயம்.
ஒரு கஷ்டம் வந்தா, கோயிலுக்குப் போயி, சூடம் பொருத்திக் கும்பிடுவேன் அவ்வளவுதான்.

என் கஷ்டம் தீர்ந்தா, அஞ்சோ பத்தோ உண்டியலில் போடுவேன். ”நீ நல்லா இருக்கணும் சாமி”ன்னு வாழ்த்திட்டு என் வேலையைப் பார்ப்பேன்.

சாமி கண் திறக்கலேன்னா என்ன செய்வேன் தெரியுங்களா?

நம்ப மாட்டீங்க, “நீயெல்லாம் ஒரு சாமியா? போயும் போயும் உன்கிட்டயா வேண்டுதல் வெச்சேன்”னு வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்துடுவேன்.

திட்டுனா சாமி கோவிச்சுக்குமேங்கிற பயமெல்லாம் எனக்கு இல்லீங்க. தன்னைத் திட்டுறதையே தொழிலா வெச்சிருக்கிற நாத்திகர்களையே அது தண்டிக்கிறதில்ல. அப்பிராணி என்னையா தண்டிக்கும்?

 ஒரு சாமிகிட்ட ஒரு தடவைதான் கோரிக்கை வைப்பேன். அப்புறமும் கஷ்டம் வந்தா வேற சாமியைத் தேடிப் போயிடுவேன். ஊர் உலகத்தில் சாமிகளுக்கா பஞ்சம்?

சந்தர்ப்பவாதின்னு திட்டுறீங்களா? பரவாயில்லீங்க.

இந்தப் பதிவைப் படிச்சுட்டிருக்கிற நீங்க எப்படின்னு எனக்குத் தெரியாது. ஆனா, நம்ம மக்களைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். சாமி நல்லது செய்யலேன்னாலும் அதைத் திட்டுற கெட்ட குணம் அவங்களுக்குக் கொஞ்சமும் இல்ல.

வறுமையாலயும் நோய் நொடிகளாலயும் ஆயிரக் கணக்கில் மக்கள் செத்துட்டே இருக்காங்க. அவ்வப்போது, சுனாமி மாதிரியான இயற்கைச் சீற்றங்களால லட்சக் கணக்கில் சாகுறாங்க. இதையெல்லாம் கடவுள் கண்டுக்கிறதில்லேன்னு நாத்திகர்களைத் தவிர வேறு யாரும் கடவுளைச் சாடுறதில்ல; மனுசன் செய்யுற தப்புகள்தான் இந்த மாதிரி அழிவுகளுக்கெல்லாம் காரணம்னு சொல்லுறதை வழக்கமா வெச்சிருக்காங்க!

உத்தரகாண்டில் பேய் மழை பெய்து வரலாறு காணாத அளவுக்கு நம் மக்கள் இறந்து போனாங்க. பாதிக்கப்படாதவங்க மட்டுமில்ல,  தப்பி உயிர் பிழைச்சவங்ககூட கடவுளைச் சாடலையே, கவனிச்சீங்களா?

“கடவுள்தான் காப்பாத்தினார்”னு சிலர் சொல்லவும் செய்யுறாங்க!

நீங்க எப்படியோ, என்னால கடவுளைத் திட்டாம இருக்க முடியல. பாவங்களைப் போக்கிப் புண்ணியம் சேர்க்கணும்னுதானே மக்கள் உத்தரகாண்டில் குடியிருக்கிற கடவுளைத் தேடிப் போனாங்க. தன்னைத் தேடி வந்தவங்களைக் காப்பாத்துறது அவரோட கடமை இல்லையா? ஏன் காப்பாத்துல? அப்புறம் எதுக்கு அவரைத் தேடிப் போகணும்? கும்பிடணும்?

தினம் தினம் தினசரிகளில் உத்தரகாண்டின் சோகங்களைப் படிக்கிறபோதெல்லாம் கடவுளைத் திட்டிட்டிருந்த நான், 23.06.2013 தேதியிட்ட தினத்தந்தியில், ஒரு செய்தியைப் படிச்சதும் ஆச்சரியத்தில் முழுகிப் போனேன். ‘கேதர்நாத் பேரழிவு பற்றி கோவில் பூசாரி பரபரப்புத் தகவல்’ என்னும் தலைப்பில் வெளியான  அந்தச் செய்தியை நீங்களும் படிச்சிருப்பீங்க. படிக்காதவங்க படியுங்க.

‘கடந்த ஞாயிற்றுக் கிழமை [16-ந் தேதி] கேதர்நாத் கோயில் வளாகத்திலும், சுற்றுப்புறத்திலும் பேய் மழை கொட்டியது.

இரவு 08.15 மணிக்கு மக்களின் ”ஓ...”வென்ற அலறல் சத்தம். மந்தாகினி ஆறு பயங்கர ஆவேசப் பேரிரைச்சலுடன் கொந்தளிப்பதைக் கேட்க முடிந்தது. எங்களைச் சுற்றிலும் இருந்த மலைச் சிகரங்கள் வெடித்துச் சிதறுவது போலிருந்தது அந்தப் பேரிரைச்சல்.

8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆதிசங்கரரின் சமாதி, அவரின் இரண்டு சிலைகள், ஒரு ஸ்படிக லிங்கம், அனுமான் சிலை என்று எல்லாவற்றையும் வெள்ளம் வாரிக்கொண்டு போனது. நள்ளிரவு வரை 12 பேர் கோயில் வளாகத்தில் தங்கியிருந்தோம்.

மறுநாள் காலையில், நான் பார்த்த இடமெல்லாம் பிணங்கள்தான். அவற்றை நாய்களும் கழுகுகளும் தின்றுகொண்டிருந்தன.

மந்தாகினியின் பொங்கிப் பெருக்கெடுத்த வெள்ளம் மேலும் பல மலைகளைப் பெயர்த்து வீழ்த்தியது. பலர் மண்ணில் புதைந்தார்கள். மேலும் பலரை ஆறு அடித்துச் சென்றது.

ஒரு பூகம்பம் போல, சிவ தாண்டவம் போல, மரண நாட்டியம் போல எல்லாமே நடந்து முடிந்துவிட்டது. சிவலிங்கம் இருந்த கோவிலின் கருவறை தவிர வேறு எதுவும் மிஞ்சவில்லை.

மந்தாகினியில் வெள்ளம் பெருகிக்கொண்டே இருந்தது. அழிவுகளும் தொடர்ந்தன. உயிர் பிழைக்க ஓடிய நூற்றுக்கணக்கானவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்; பனிக்கட்டி போல் குளிர்ந்த சரஸ்வதி ஆற்றில் குதித்து நீந்திக் கரை சேர்ந்தேன்; பைரன் கோவிலை அடைந்தேன். கிராம வாசிகள் உதவினார்கள். ராணுவ ஹெலிகாப்டர்கள், மற்றவர்களோடு சேர்த்து என்னையும் மீட்டது. நான் இப்போது என் கிராமத்தில் இருக்கிறேன்.....’

இப்படியாகத் தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட கோவில் ’பூசாரி ரவிபட்’ முத்தாய்ப்பாகச் சொன்ன சொற்கள்தான் இந்த நிகழ்ச்சியின் ‘ஹை லைட்’!

அப்படி என்ன சொன்னார் அவர்?!

“இப்போது என் மனதில் உலா வரும் எண்ணமெல்லாம் ஒன்றே ஒன்றுதான். கோவிலில் உள்ள என் சிவபெருமானை யார் கவனித்துக்கொள்வார்கள்? அங்கே யார் தீபம் ஏற்றுவார்கள்? யார் பூஜை செய்வார்கள்?”

”என் மனதில் உலா வரும் எண்ணம் ஒன்றே ஒன்றுதான்”னு அவர் சொன்னதைக் கவனிங்க.

 மக்கள் பிணங்களாய்க் குவிந்து கிடந்ததும், உயிர் தப்பினவங்க அடர்ந்த இருள் சூழ்ந்த மலைக் காடுகளில் ஊண் உறக்கமில்லாம அலைஞ்சி திரிஞ்சதும் இவருக்கு அடியோடு மறந்து போச்சு. சிவபெருமானின் அனாதரவான நிலை மட்டுமே  மனசை வருத்துது. ”தீபம் ஏற்றுவார் யார்? பூஜை செய்வார் யார்?”னு கேட்டுப் புலம்புற இவரைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்களோ எனக்குத் தெரியாது. நான் நினைக்கிறதைச் சொல்லுறேன்..........

”முழுக் கிறுக்கன்.”

=====================================================================================