சனி, 11 ஜனவரி, 2014

குமுதம் ஒரு பக்கக் கதைகள் [2009-10] தொகுப்பில் என் படைப்புகள்!

குமுதம் இதழ், 2009-10 ஆம் ஆண்டுகளில் பிரசுரித்த ஒரு பக்கக் கதைகளில் சிறந்த படைப்புகளைத் தொகுப்பாகக் [பாகம்-1] கடந்த ஆண்டு வெளியிட்டது. அதில் நான் படைத்த இரு கதைகள் இடம்பெற்றுள்ளன என்பதை மகிழ்வுடன் [தற்பெருமையுடன் என்று நீங்கள் எண்ணினாலும் சரியே!] தெரிவிப்பதோடு அவற்றை ஒரு பதிவாகவும் வெளியிடுகிறேன்.

படித்து மகிழுங்கள். உங்கள் பொன்னான நேரத்தை இவை வீணடித்திருந்தால் பெருந்தன்மையுடன் மன்னியுங்கள்.



கதை ஒன்று:                     ‘யாருங்க இவர்?’ [பரமசிவம்]

“ஐயா, காம்பவுண்டைச் சுத்தியிருந்த புல் பூண்டெல்லாம் செதுக்கிச் சுத்தம் பண்ணிட்டேன்.” சொல்லிக்கொண்டு வந்த துரைசாமி, வருவாய்த்துறை அதிகாரி சங்கரன் முன்னால் கைகட்டி நின்றான்.

“வெரிகுட். இன்னிக்கி ஈரோட்டிலிருந்து என் சொந்தக்காரங்க வர்றாங்க. நிறைய லக்கேஜ் இருக்கும். டிரைவரோட ரெயில்வே ஸ்டேஷன் போயி அவங்களை அழைச்சுட்டு வா. அப்புறம், மார்க்கெட் போயி இலை வாங்கி வந்து கொடுத்துட்டு நேரே ஆஃபீஸ் வந்துடு” என்றார் சங்கரன்.

துரைசாமி இடம்பெயர்ந்ததும் சங்கரனை நெருங்கிய அவர் மனைவி மணிமேகலை, “எல்லா வேலைக்கும் நம் வீட்டில் ஆள் இருக்கும்போது, வீடு தேடி வந்த இவர்கிட்டே நிறைய வேலை வாங்குறீங்களே, யாருங்க இவர்?” என்று கேட்டார்.

“இவன் ஒரு கூலிக்காரன். செத்துப்போன அப்பன் பேரில் உள்ள குடிசை வீட்டுப் பட்டாவை இவன் பேருக்கு மாத்தணுமாம். பைசா தரமாட்டான். இப்படி ஏதாச்சும் வேலை வாங்கினாத்தான் உண்டு” என்றார் அதிகாரி சங்கரன்!

‘எத்தனை அல்ப மனசு என் புருஷனுக்கு’ என்று மனதுக்குள் முணுமுணுத்தார் மணிமேகலை.

                     *                    *                *                  *                      *                    *

கதை இரண்டு:                               ‘தானம்’ [பரமசிவம்]

யிரம் ஏழைகளுக்கு ஆண்டுதோறும் அன்னதானம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் தொழிலதிபர் பெரிய கருப்பன்.

வியாபாரத்தில் அந்த ஆண்டிலும் நல்ல லாபம் என்பதால் மகிழ்ச்சியோடு கணக்குப்பிள்ளையை அழைத்து, “அன்னதானத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க என்றார்.

“போஸ்டர் அடிச்சி ஒட்டிடச் சொல்றேன். சமையல்காரருக்கு ஃபோன் பண்ணி வரவழைக்கிறேன். மண்டபம் புக் பண்ணிட்டு.....”

குறுக்கிட்டார் பெரிய கருப்பன், “மண்டபம் வேண்டாம். இந்த வருஷம் அன்னதானத்தை ஒரு கோயிலில் நடத்திடுவோம்” என்றார்.

புரியாமல் விழித்தார் கணக்கு.

“மண்டபத்திலோ, சத்திரம் சாவடியிலோ வெச்சி அன்னதானம் பண்ணினா பெரும்பாலும் பிச்சைக்காரங்கதான் வர்றாங்க. கோயிலில் செய்யும்போது, வயிறாரச் சாப்பிட வழியில்லாத மத்தவங்களும், ‘சாமி பிரசாதம்’னு தயங்காம வந்து சாப்பிடுவாங்க” என்றார் பெரிய கருப்பன்.

“முதலாளி, உங்களுக்குத்தான் எத்தனை பெரிய மனசு” என்று வாய்விட்டுப் பாராட்டினார் கணக்குப்பிள்ளை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@