தேடல்!


Nov 5, 2015

விஞ்ஞானியும் மெய்ஞ்ஞானியும்.....ஒரு நடுநிலை ஒப்பீட்டாய்வு!


இந்தப் பதிவு ரொம்பப் பழசு. இதை எழுதியபோது நான் பதிவுலகுக்குப் புதுசு! என் அரைகுறை ‘அறிவியல்&தத்துவ’ ஞானம் இதில் வெளிப்படக்கூடும். எள்ளி நகையாட வேண்டாம்! விரும்பினால் மேலே படியுங்கள்.


ஆய்வு [???]....................... 


இந்த இருவர் பற்றியும் அறியாதார் எவருமிலர்.

அறிவு வளர்ச்சிக்கு விஞ்ஞானியும், ஆன்மிக வளர்ச்சிக்கு மெய்ஞ்ஞானி எனப்படுபவரும் பாடுபடுவதாக மனித சமுதாயம் நம்புகிறது.

இந்த இருவரின் குண இயல்புகள் பற்றிப் பலரும் சிந்தித்திருக்கக்கூடும்.

ஆனால், ஒப்பிட்டு ஆராய்ந்தவர்கள் எத்தனைபேர் என்பதை யானறியேன்.

இந்த  ஆய்வால் பயன் ஏதுமுண்டா? வெட்டி வேலையா?

முடிவு எதுவாயினும் ஒரு முறை முயன்று பார்ப்போமே!.


விஞ்ஞானி:
அணு முதல் அண்டம் வரையிலான எந்த ஒன்றின் தோற்றம் பற்றியும் அதன் உள்ளடக்கம் பற்றியும் அறிவியல் சாதனங்களின் துணையுடன் [துணை இல்லாமலும்]ஆராய்ந்து அறிவதில்  நாட்டம் கொண்டவர்.
மெய்ஞ்ஞானி:
‘ஆழ்ந்த சிந்தனையின் மூலமே பிரபஞ்சப் புதிர்களை விடுவித்துவிட முடியும் என்று நம்புபவர்.

விஞ்ஞானி: 
தான் அனுமானித்தது, ஆய்வின் மூலம் ‘உண்மை’ என உறுதிப் படுத்தப்பட்ட பின்னரே ஆதாரங்களுடன் அதை உலகுக்கு அறிவிப்பவர்.

மெய்ஞ்ஞானி: 
தான் அனுமானித்தவற்றோடு, புனைவுகளும் கற்பனைகளூம் கலந்து, ‘இதுவே உண்மை’என்று பறை சாற்றுபவர்; தொடர் பிரச்சாரங்கள் மூலம் அதை மக்கள் மனங்களில் ஆழப் பதிய வைத்திட முயல்பவர். [படிப்பவர்களுக்குப் புரியும் என்பதால் உதாரணங்கள் தரப்படவில்லை]

விஞ்ஞானி:
பிறர், தமக்குள் எழும் ஐயங்களை இவர் முன் வைக்கும் போது, உரிய விளக்கங்களைத் தர இயலவில்லை என்றால், “எனக்குத் தெரியாது”, அல்லது, “புரியவில்லை” என, கவுரவம் பார்க்காமல் இயலாமையை ஒத்துக் கொள்பவர்.

மெய்ஞ்ஞானி: “தெரியாது”, “புரியவில்லை” போன்ற சொற்களை இவர் ஒருபோதும் உச்சரித்தறியாதவர். “நீ அஞ்ஞானி...அற்பஜீவி...” என்றோ, “நாம் சொல்லும் உண்மையை உணரத்தான் முடியும்; உணர்த்த முடியாது” என்றோ சொல்லி வாய்ப்பூட்டுப் போடுபவர்.

விஞ்ஞானி: 
மிகக் கடுமையாய் உழைத்தும் உண்மைகளைக் கண்டறிய இயலாதபோது, அதற்கொரு முற்றுப்புள்ளி வைத்துவிடாமல், தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பவர்.

மெய்ஞ்ஞானி
ஒன்றும் புரியாத நிலை வரும்போது,  “எல்லாம் அவன் சித்தம்...அவனின்றி அணுவும் அசையாது...அவனன்றி வேறு யாரறிவார்...” என்று சொல்லிக் கடவுளைச் சரணடைபவர்.

விஞ்ஞானி:
இவர்களில் சிலர், ‘கண்டுபிடித்தே தீருவது’ என்ற தணியாத ஆவேசத்துடன் அலுக்காமல் உழைப்பவர்கள்; சேர்த்து வைத்த பொருளை இழப்பவர்கள்; ஆய்வுக்குத் தம் உடலையே அர்ப்பணித்து உயிரிழக்கவும் துணிபவர்கள்.

மெய்ஞ்ஞானி
இவர்களில் சிலர் மட்டுமே, மனப்பூர்வமாக உண்மைகளைக் கண்டறியவும், கடவுள் நம்பிக்கையை மக்களிடையே பரப்பவும் தம் உடல் நலத்தையும் பொருட்படுத்தாது பாடுபடுபவர்கள்.இந்த ஒப்பீடு எவருடைய மனதையும் நோகடிக்க அல்ல; சிந்திக்க வைப்பதற்கு மட்டுமே.
========================================================================================================