மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மனித நேயத்தை ஊட்டி வளர்த்தால்...சாதி, மதம், கடவுள் ஆகியவற்றின் தேவை முற்றிலும் ஒழியும்.

Thursday, January 28, 2016

முதலிரவை மறந்து ஆய்வுக்கூடத்தில் தஞ்சம் புகுந்த அதிசய விஞ்ஞானி!

“மதம் சொன்னாலும் சரி, மனிதன் சொன்னாலும் சரி ஆய்வு செய்யாமல் எதையும் ஏற்க மாட்டேன்” -இப்படிச் சொன்னதோடு நில்லாமல், சொன்னபடி வாழ்ந்து காட்டியவர் அவர்; "மனிதர்களுக்குப் பயன்படாத எதையும் நான் கண்டுபிடிக்க மாட்டேன்" என்று சபதம் செய்தவர்.

பருமனான தலை உடையவர்கள் புத்திசாலிகளாக இருக்க மாட்டார்கள் என்ற மருத்துவர்களின் கணிப்பைப் பொய்யாக்கியவர்.

தன்னுடைய பதினோராவது வயதிலேயே, ‘தி ரைஸ்அண்ட் ஃபால் ரோமன் எம்பயர்’, ‘ அனாட்டமி ஆஃப் மெலங்கலி’, ‘உலக அறிவியல் அகராதி’ போன்ற சிறந்த நூல்களைப் படித்துவிட்டாராம்.

சொற்களைத் தனித்தனியே பிரித்துப் படிக்காமல் ஒட்டுமொத்த வாக்கியத்தையே படித்துவிடும் திறன் படைத்தவராம் அவர்.

‘வீக்லி ஹரால்டு’ என்னும் பத்திரிகையின் ஆசிரியர் அவர். வெளியிடுபவர், அச்சுக் கோப்பவர், நிருபர், விற்பனையாளர் என்று எல்லாம் அவரே. உலக வரலாற்றில் ரயிலில் அச்சடிக்கப்பட்ட முதல் பத்திரிகை இதுதானாம்.

“நான் எவ்வளவோ செய்யவேண்டியிருக்கிறது. என் வாழ்நாளோ கொஞ்சம். எனவே, என்னை நானே முடுக்கிவிட்டுக் கொள்கிறேன். முடங்கிக் கிடந்தால் முன்னேற முடியாது” என்று தன்னிலை விளக்கம் தந்து, உலக மக்களை விழிப்படையச் செய்தவர் அவர்.

முதல் ஊதியம் பெற்றபோது, 30 டாலர் கொடுத்து சூட்  தைத்தார். ஆய்வுக்கூடத்தில் அமிலம் கொட்டி அது தீய்ந்துபோனது. அன்று முதல் சாதாரண உடைகளையே உடுக்கலானார்.

ஒர சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டார். ஒரு கண்டுபிடிப்பிலிருந்து விடுபட்டு ஓய்வுகொள்ள இன்னொரு கண்டுபிடிப்பில் ஈடுபடுவது அவர் வழக்கம்.

ஆராய்ச்சியே கதி என்று சோதனைச் சாலையில் காலம் கழித்த அவர், தம் தாய் இறந்த துக்கத்திலிருந்து விடுபட, நண்பர்களின் ஆலோசனைப்படி திருமணம் செய்துகொண்டார்.

மணம் முடிந்ததும் சோதனைச் சாலைக்குள் புகுந்துவிட்டார்.

அவருக்கு மணம் முடிந்துவிட்டது என்பதை நினைவுபடுத்தி, சக ஊழியர்கள் அவருடைய இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.

பேச்சைப் பதிவு செய்து வெளியிடும் கருவியை அவர் கண்டுபிடித்தபோது, அதைக் காண, மக்கள் வந்துகொண்டே இருந்தார்களாம். போக்குவரத்துக்காக, ரெயில்வே நிர்வாகம் தனி ரயில்களை விட்டதாம்.

“நான் மிகவும் மலிவான விலையில் மின்விளக்குகள் தயார் செய்தபின் ஏழைகளின் வீடுகளிலும் மின் விளக்குகள் எரியும்" என்றாராம் அந்த ஏழைகளின் பங்காளர்.

கல்வி நிலையங்களில் மதக் கல்வியே கூடாது என உறுதிபடச் சொன்னவர் அவர்.

அவர் யார்?
அவர் 1368 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி மாபெரும் சாதனை நிகழ்த்திய தாமஸ் ஆல்வா எடிசன் என்பது நீங்கள் அறிந்த ஒன்றுதான்.

இன்று காலையில் வாசித்த, எம்.ஏ.பழனியப்பன் எழுதிய ‘தாமஸ் ஆல்வா எடிசன்’[ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பாண்டி பஜார், சென்னை] என்னும் நூலிலிருந்து சுவையான சில தகவல்களை உங்களுடன் பகிரவே இந்தப் பதிவு.

வருகைக்கு நன்றி.
***************************************************************************************************************************************************** 


No comments :

Post a Comment