மாரடைப்பால் செத்துப்போனார் ஒரு சாது. அவரின் ஆன்மா, கண்டம்விட்டுக் கண்டம் சென்று தியானம் செய்துகொண்டிருப்பதாகச் சொல்லி, சவத்துக்கு இறுதிச் சடங்கு செய்யாமல், இரண்டு ஆண்டுகளாக 'உறைநிலைப் பனி'யில் வைத்து பாதுகாத்து வருகிறார்கள் அவரின் பக்தர்கள்.
இந்நிகழ்வு இடம்பெற்றிருப்பது, பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் மாவட்டம், நூர்மகால் கிராமத்தில் உள்ள ‘திவ்ய ஜோதிஜாக்ரதி சன்ஸ்தான்’ என்னும் பெயர் கொண்ட ஆன்மிக மடத்தில்[தி இந்து, ஜனவரி 29, 2016].
மடத்தின் நிர்வாகிகள், சாதுவின் மகனிடம் உடலை ஒப்படைக்க மறுத்துவிட்டார்களாம். அவர்கள் சொல்லும் காரணம்.....
“கண்டம் விட்டுக் கண்டம் சென்று ஆழ்நிலை தியானத்தில் ஈடுபட்டிருக்கும் சாது என்றேனும் ஒருநாள் திரும்பி வந்து, தன் பிணத்துடன் ஐக்கியமாகி, எழுந்து நடமாடி, இந்த உலகை உய்விக்க இருக்கிறார்.”
சாமியார் ‘அசுதோஷ் மகராஜ்’ மகன் ’திலீப் குமார் ஜா’வை, சாமியாரின் மகனாக ஏற்க மடத்தின் நிர்வாகம்[மூடர் குழு] மறுத்துவிட்டதாம். நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார் அவர்.
2014, ஜனவரி 29ஆம் தேதி இறந்துபோன சாது அசுதோஷ் மகராஜ் பெயரில் ரூ1500 கோடிக்கும் மேலாக, சொத்துகள் உள்ளனவாம். அவற்றை அபகரிக்க, அறங்காவலர் குழுவிலுள்ள சிலர் திட்டமிட்டு, அவரின் ஆன்மா நாடுவிட்டு நாடு சென்று தியானம் செய்வதாகப் புருடா விட்டுப் பொய்ச் செய்திகளைப் பரப்பிக்கொண்டிருப்பதுகூடச் சாத்தியம்தான்.
இந்நிலையில், இது தொடர்பாக பஞ்சாப் மாநில அரசு எடுத்திருக்கவேண்டிய நடவடிக்கை என்ன?
மருத்துவர் குழுவை அனுப்பி, சாதுவின் மரணம் இயற்கையானதுதான் என்பதை உறுதி செய்திருக்க வேண்டும்.
சட்ட ரீதியாக, மரபணுச் சோதனை நடத்தியோ வேறு ஆதாரங்கள் மூலமோ, சாதுவின் மகன்தான் திலீப் குமார் ஜா என்பதை உறுதி செய்வதோடு, சடலத்தை அவரிடம் ஒப்படைக்கவும் ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.
தடை செய்வோரைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும்.
இவற்றில் எந்த ஒன்றையும் பஞ்சாப் அரசு செய்யவில்லை. மாறாக.....
பக்தர்கள் 24 மணி நேரமும் சவத்துக்குக் காவல் புரிய, பஞ்சாப் அரசின் 40 போலீசார் மடத்தின் அனைத்து வாயில்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்களாம்.
“அயலிடத் தியானத்திலிருந்து அவர்[சாமியார்] மீண்டு வருவார். அதற்காக நாங்கள் எத்தனை காலமும் காத்திருப்போம்” என்று மூடர் குழுவின்/மடத்தின் செய்தித் தொடர்பாளர் விஷாலானந்த் ‘தி இந்து’விடம் கூறியிருக்கிறார்.
செத்த மனிதனின் பிணம் மீண்டும் உயிர் பெற்று எழும் என்று மடத்தின் நிர்வாகிகளும் பக்தர்களும் நம்புவதில் தவறில்லை. ஏனெனில், அவர்கள் அத்தனை பேரும் முழு மூடர்கள்.
இம்மாதிரி மூடநம்பிக்கைகளைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறார்களே மாநில ஆட்சியாளர்கள், அவர்களை என்ன சொல்லி அழைப்பது?!
=============================================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக