'பிரபஞ்சத் தோற்றம்' குறித்து ஆழ்ந்து சிந்தித்தால், 'ஏதும் புரியவில்லை' என்பது புரியும். தோற்றுவித்தவர் கடவுள் என்பது வெறும் அனுமானம்தான்!

Thursday, February 4, 2016

பெண்களை அலுவலகத்திற்குள் அனுமதிக்காத வார இதழ்?!?!

‘இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் வார இதழ்’ என்று ஒரு காலத்தில் நம் நாடாளுமன்றத்திலேயே பேசப்பட்ட பத்திரிகை இது.....

1947இல் இந்த வார இதழ் தொடங்கப்பட்டது.

இதன் ஆசிரியர், பணம், புகழ், பட்டம் போன்றவற்றை அறவே வெறுத்தவர்; பெயருக்குப் பின்னால் எம்.ஏ.,பி.எல்., என்று எப்போதும் போட்டுக்கொள்ளாதவர்; தம்மைப் பற்றி ஒரு வரியோ, தபால்தலை அளவு புகைப்படமோ தம் இதழில் வெளிவர அனுமதிக்காத பெருந்தகை.

தம்மையோ, தம் இதழையோ பாராட்டி எழுதப்படும் கடிதங்களை விடவும் கடுமையாகச் சாடி எழுதப்படும் மடல்களையே கடிதம் பகுதியில் விரும்பி வெளியிடுவார்.

‘சுட்டி’ என்று ஒரு கையடக்கச் சிற்றிதழ். அது, இந்த இதழ் கையாளும் வணிக உத்திகளைக் கடுமையாகச் சாடி ஒரு கட்டுரை வெளியிட்டது. அதை வரி பிசகாமல் முழுமையாகத் தன் பத்திரிகையில் மறு பிரசுரம் செய்தார் இவர். ஒரு நூறைத் தாண்டுவதற்கே முக்கி முனகிக்கொண்டிருந்த அந்தச் சுட்டியின் விற்பனை 19 ஆயிரம், இருபதாயிரம் என்று எகிறியது!

“நாலு பேர் தாக்கி எழுதும்போதுதான் வாசகரிடையே பிரபலம் ஆகிறோம்; புத்துணர்ச்சி பெறுகிறோம்” என்று அடிக்கடி சொல்வாராம் இவர்.

‘ரிலீஸ்’ திரைப்படங்களை ஓசியில் பார்த்தால் நடுநிலையாக விமர்சனம் எழுத முடியாது என்ற கொள்கையுடைய இவர், தியேட்டரில் நுழைவுச் சீட்டு வாங்கிப் படம் பார்த்து விமர்சனம் எழுத வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தாராம் தம் நிருபர்களுக்கு.

சட்டம் படித்த இவர், வக்கீலாகத் தொழில் செய்ய விரும்பவில்லை. பிரசண்ட விகடனில் தம் கதைகள் வெளியானதில் பெற்ற உற்சாகத்துடன் தம் நண்பர் பார்த்தசாரதி அவர்களுடன் இணைந்து புதிய இதழ் ஒன்றைத் தொடங்கினார்.

தொடக்கத்தில், மாதம் மும்முறை வெளியான அது பின்னர் வார இதழாக மாறியது.

ஆரம்ப காலத்தில், பெரியவர்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு இதழில் இளமை ஊஞ்சலாடியது என்னவோ உண்மை[இப்போது?!]. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் உள்ளடக்கத்தை, ஒரு சீரியஸ் கதை, காதல் கதை, குடும்பக் கதை, கிரைம் கதை, கிராமியக் கதை என்று மாற்றிக்கொண்டது.

“ஒரு நல்ல கதை எழுதணும்னா முதலில் ஒரு நல்ல கதையைப் படிக்க வேண்டும்” என்பாராம் தம் உதவி ஆசிரியர்களிடம்.

இவர் அடிக்கடி உதிர்க்கும் சொற்றொடர், “எல்லாம் ஆண்டவன் செயல்” என்பது. அடிக்கடி எழுதிப் பார்ப்பது, ‘ஓம் முருகா’!

இவர் பெரும் செல்வந்தர் குடியில் பிறந்தவர். ஆயினும் மிக மிக எளிமையானவர்.

திருக்குறளும் கீதையும் இவரின் இரண்டு கண்களாம்; சுவாமி சின்மயானந்தாவுடன் நெருக்கமானவர்; அவருடன் யாத்திரை செல்வதை மிகவும் விரும்பியவர்; கர்ம யோகி; மிகவும் கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்ந்தவர்.

இவரின் பத்திரிகை அலுவலகத்தில் பெண்கள் நுழையக் கூடாது என்பது எழுதப்படாத ஒரு விதியாக இருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். [இப்போதைய நிலையை யாம் அறியோம்].

இவர் யாரென்பதையும், இவர் தொடங்கி நடத்திய அந்த வார இதழ் எது என்பதையும் அனுமானித்திருப்பீர்கள்.

அந்த ‘இவர்’.....
16.04.1994இல்[70 வயதில்] காலமான எஸ்.ஏ.பி.அண்ணாமலை அவர்கள். 

வார இதழ்.....’குமுதம்’!
=============================================================================================

டிசம்பர், 2015இல் எழுதி முடித்த பதிவு இது. இனம்புரியாத தயக்கத்தால் தாமதம் ஏற்பட்டது.

சில முக்கிய தகவல்களைத் தந்த நூல்: முக்தா சீனிவாசன் அவர்களின், ‘இணையற்ற சாதனையாளர்கள்’, திருக்குடந்தைப் பதிப்பகம், சென்னை.No comments :

Post a Comment