'பிரபஞ்சத் தோற்றம்' குறித்து ஆழ்ந்து சிந்தித்தால், 'ஏதும் புரியவில்லை' என்பது புரியும். தோற்றுவித்தவர் கடவுள் என்பது வெறும் அனுமானம்தான்!

Sunday, December 18, 2016

“நான் சுகவாசி அல்ல” - பெரியார்

கடவுளையும் மூடநம்பிக்கைகளையும் மட்டுமல்ல,  சுகபோகங்களையும் வெறுத்து வாழ்ந்தவர் பெரியார். தம் [அ]சுகபோக வாழ்வு குறித்து அவரே சொல்கிறார். படியுங்கள்.
#சாதாரணமாக நான் ஈசிசேரில் உட்காருவதே கிடையாது. எங்கள் வீடுகளில் விலையுயர்ந்த நாற்காலிகளும் சோபாக்களும் இருக்கிறதென்றாலும் ஈஸிசேர் கிடையாது. இருந்தாலும் அதை நான் உபயோகிக்க மாட்டேன்.

சாய்ந்த நிலையில் கால்களை நீட்டிக்கொண்டு உட்காரும் பழக்கம் எனக்கு இல்லை; அதை நான் விரும்புவதும் இல்லை. இம்மாதிரிப் பழக்கமெல்லாம் சுகவாசிகளுக்கு உரியவை. 

என் வாழ்நாளில் பெரும்பான்மையும் பிரயாணம்தான் அதிகம் என்றபோதிலும், பிரயாணக் காலத்தில் அநேகமாய் மோட்டார் வண்டியில் படுப்பதும் இல்லை. இரவு பகலாய்ப் பிரயாணம் செய்ய நேரிட்டாலும் பெரும்பான்மையும் கண் விழித்துக்கொண்டுதான் செல்வேன். ஏதாவது இரவு நேரங்களில் மட்டும் தூங்கும்படியாக மணியம்மையார் வற்புறுத்துவதுண்டு. நானும் அதற்கு ஏதேதோ கூறித் தப்பித்துக்கொள்ளப் பார்த்துவிட்டுக் கடைசியில் பெரிய ரகளை உண்டாகி அதன் பிறகுதான் சிறிது நேரம் படுப்பதுண்டு. ஆனால், அதிகம் தூங்கமாட்டேன். இப்படிப்பட்ட ரகளையின் காரணமாக நானும் மணியம்மையும் ஓரிரண்டு தினங்கள் பேசாமல்கூட வருத்தமாக இருப்போம்.

இப்படி எனக்கு, ‘தூங்குவது’ என்ற பழக்கம்கூட வெறுப்பாகிவிட்டது. தூங்காமல் இருப்பதால் கஷ்டம் தோன்றுவதே இல்லை. 

இப்படிச் சுகம் என்ற ஒவ்வொரு பழக்க வழக்கமும்  எனக்கு வெறுப்பாகிக்கொண்டும், சுகம் இல்லாவிடில் அதனால் ஒருவிதக் கஷ்டமும் இன்றியும் இருக்கிறது.............

.............எனது வார்த்தைகளும் எழுத்துகளும் செய்கைகளும் தேசத் துரோகம் என்றும், வகுப்புத் துவேஷம் என்றும் பிராமண துவேஷம் என்றும், மான நஷ்டம் என்றும், அவதூறு என்றும், ராஜ துரோகம் என்றும், நாஸ்திகம் என்றும், மத தூஷணை என்றும் சிலர் சொல்லவும் ஆத்திரப்படவும் ஆளானேன்.

அரசியல் தலைவர்கள், தேசாபிமானிகள் என்பவர்கள் என்னை வையவும் என்னைக் கண்டித்து ஜெயிலில் வைக்கும்படி அவர்கள் அரசாங்கத்தைக் கெஞ்சவும் ஆளானேன்.

இந்த இன்பமற்ற காரியங்களை நான் ஏன் செய்ய வேண்டும் என்று நானே யோசிப்பதுண்டு. சிற்சில சமயங்களில் யாரோ எப்படியோ போகட்டும்; நாம் ஏன் இவ்வளவு தொல்லைகளையும் அடைய வேண்டும்? நமக்கென்ன இதனால் ஜீவனமா? பணமும் புகழும் சம்பாதிக்கிறோமா?

நமக்கு ஏன் இத்தனை எதிரிகள்? ஒரு பத்திரிகையாவது உதவியதுண்டா? ஒரு தலைவராவது உதவியது உண்டா?

‘இமயமலை வெயிலில் காய்கிறது என்று குடை பிடிப்பது போல்’ இருக்கிறது என்பதாகக் கருதி விலகிவிடலாமா என்று யோசிப்பதுண்டு.

ஆனால், விலகுவதில்தான் என்ன லாபம்? ஏறக்குறைய ஆயுள் காலம் தீர்ந்துவிட்டது. இனி நாலோ ஐந்தோ, அல்லது, அதிகமிருந்தால் பத்து வருட காலமோ இருக்கலாம்.  இந்தக் கொஞ்ச காலத்தை ஏன் நம் மனசாட்சிக்கு விட்டுவிடக் கூடாது? விலகித்தான் என்ன பெரிய காரியம் செய்யப் போகிறோம்? என்றெல்லாம் யோசித்து மறுபடியும் இதிலேயே உழன்றுகொண்டிருக்கிறோமே தவிர வேறில்லை#
===============================================================================

நன்றி: ‘பெரியார் சாதித்தது என்ன?’, தொகுப்பு: செந்தமிழ்க்கோ; குடியரசு பதிப்பகம். 2ஆம் பதிப்பு, 2009.10 comments :

 1. அய்யா பெரியாரின் மற்றொரு தன்னலமில்லா பரிமாணத்தை உணர்த்தும் வகையில் அவரே பதிவு செய்த செய்திகளை பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் பாராட்டுரைக்கும் மிக்க நன்றி சுதாகர்.

   Delete
 2. தொண்டுகிழம் என்று சும்மாவா சொன்னார்கள் ?

  ReplyDelete
  Replies
  1. துவண்டுவிடாமல் இறுதி மூச்சுவரை தொண்டு செய்ததே!

   நன்றி பகவான்ஜி.

   Delete
 3. சுவாரஸ்யமான தகவல்.

  ReplyDelete