'பிரபஞ்சத் தோற்றம்' குறித்து ஆழ்ந்து சிந்தித்தால், 'ஏதும் புரியவில்லை' என்பது புரியும். தோற்றுவித்தவர் கடவுள் என்பது வெறும் அனுமானம்தான்!

Wednesday, May 10, 2017

பரமஹம்ச நித்தியானந்தனின் புதிய அவதாரம்!!!

கீழே உள்ள படத்தைக் கூர்ந்து கவனியுங்கள்.
கண்கவர் தலைப்பாகைக்கு அழகு சேர்க்கும் பிறைச் சந்திரன்.  வளைந்த இரு புருவங்களுக்கிடையே நெற்றிக்கண்.  அழகிய வதனத்தில் வளைந்த மீசையும் அடர்ந்த கருகரு தாடியும்.

‘கலியுக’ சிவபெருமானாகவே காட்சியளிக்கிறார்   நடிகை ரஞ்சிதா புகழ்  பரஹம்ச நித்தியானந்தன்.

கடவுளின் பெயரால் பரப்பப்படும் மூடநம்பிக்கைகளையும் முட்டாள்தனமான சடங்குகளையும் சாடும் பகுத்தறிவாளர்களைத் தாக்கியும் உயிர்க்கொலை புரிந்தும் வெறியாட்டம் ஆடுகிற இந்துமதப் பாதுகாவலர்களிடம் ஒரு கேள்வி.....

தின்று ஜீரணித்து மலம் கழித்து வாழுகிற ஒரு மனிதன், தான் முழுமுதல் கடவுளின் அவதாரம் அல்லது, தானே அந்த முழுமுதல் கடவுள் என்பதாகப் பிரகடணப்படுத்துவதை உங்களின் இந்துமதம் அங்கீகரிக்கிறதா? ‘இல்லை’ எனின் இந்த வேடதாரிமீது நீங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? 

சாட்சாத் சிவபெருமானாகவே தன்னை ஒப்பனை செய்துகொண்டிருக்கும் இந்த ஆள், ‘கல்பதரு’ என்னும் தலைப்பில் தந்துள்ள அறிவிப்பைப் படியுங்கள்.

#திருவண்ணாமலை நித்தியானந்த பீடத்தில் பத்தாவது வருடத் துவக்க விழா மற்றும் சித்ரா பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பரமஹம்ச நித்தியானந்தரின் அவதார ஷேத்திரமான திருவண்ணாமலையில் ஒரு நாள் தியான அனுபவ முகாம், உங்களின் ஆழமான எண்ணங்களை நிஜமாக்கும் ஞான கருத்துகள், தியான நுட்பங்கள், சக்தி வாய்ந்த தீக்‌ஷை பெற்று ...உங்கள் வாழ்வில் நித்தியமான வெற்றி பெறும் அறிவியலை அறிந்து கொள்ளுங்கள்.

மூன்றாவது கண்ணை விழிப்படையச் செய்யும் சக்தி வாய்ந்த சிவ தீக்‌ஷையான சமய தீக்‌ஷை அளிக்கப்படுகிறது#

தியான முகாம் என்னும் பெயரில் பக்தர்களுக்கு தீக்‌ஷை வழங்குவதாகச் சொல்லும் இந்த வேடதாரி, மூன்றாவது கண்ணை விழிப்படையச் செய்யும் சக்தி வாய்ந்த சிவ தீக்‌ஷையான சமய தீக்‌ஷை அளிக்கப்படுகிறது’என்று சொல்கிறார், நெற்றிக் கண், ஞானக் கண் என்றெல்லாம் கேள்வியுற்றிருக்கிறோம். இது என்ன மூன்றாவது கண்? 

‘ஆகாயப் பதிவுகள்’ என்னும் தலைப்பிலான விளம்பர அறிக்கையில் சொல்வதையும்  கவனியுங்கள்.
#‘பிரபஞ்ச ஆவணப் பதிவுகளைப் படித்தல்’ என்பது நம் வேத பாரம்பரியத்தில் இருக்கும் ஒரு வேத ஆன்மீக அறிவியல்.

பிரபஞ்ச ஆவணப் பதிவுகளிலிருந்து நீங்கள் பிறந்ததன் நோக்கம், அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளின் காரணங்கள், அதற்கான தீர்வுகள் வரை தெரிந்துகொள்வதற்கான ஒரு மாபெரும் வாய்ப்பு!

பரமஹம்ச நித்தியானந்தர் அவர்கள் இந்த வேத அறிவியலை மீண்டும் உயிர்ப்பித்து, சக்தி வாய்ந்த தீக்‌ஷையின் மூலம்  மூன்றாம் கண் விழிப்படைந்த தன் சீடர்களுக்குப் பிரபஞ்ச ஆவணங்களைப் படிக்கும் சக்தியை வழங்கியுள்ளார். அவர்களால் உங்களுடைய எந்தக் கேள்விக்கும் பிரபஞ்ச ஆவணப் பதிவுகளைப் பார்த்துப் பதிலளிக்க இயலும்.

வாருங்கள்! உங்கள் வாழ்வின் ரகசியங்களை தெரிந்துகொள்ள.....!!!#

நமக்குப் பிரபஞ்சம் தெரியும்; பதிவு என்றால் என்ன என்றும் தெரியும்; ஆவணப் பதிவுகள் என்பதும் புரியும். அதென்ன, ‘பிரபஞ்ச ஆவணப் பதிவு’?

இவரின் சீடர்கள், அந்த ஆவணங்களைப் படித்து நம் வாழ்வின் ரகசியங்களைச் சொல்லுகிறார்களாம். சொல்வார்களா?

நாளை நடக்கவிருக்கும் இந்த முகாமுக்கு அதிதீவிர இந்துமதப் பிரியர்கள் தவறாமல்[நல்ல சிந்தனையாளர்களுடன்] செல்ல வேண்டும். கேள்விகள் கேட்க வேண்டும். 

கிடைக்கும் விடைகள் நம்பத்தகாதவை என்றால்........

இந்தப் போலி அவதாரப் புருஷனையும் சீடர்களையும் சமூக விரோதிகள் என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். தண்டனைக்குரிய குற்றவாளிகள் என அரசிடம் ஒப்படைத்துத் தண்டனை பெற்றுத் தரவேண்டும். 

அவர்கள் செய்வார்களா இதை?
===============================================================================

2 comments :

 1. உங்க பதிவு எத்தனை புது அவதாரம் எடுத்தாலும் ,தமிழ் மணம் சரியாக ஆக மாட்டேங்குதே :)

  ReplyDelete
  Replies
  1. தமிழ்மணத்திற்குப் பதிலாக வேறு நல்ல திரட்டி உருவாகுமா?

   காத்திருப்பதைத் தவிர வேறு வழி?

   நன்றி பகவான்ஜி.

   Delete