அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 27 மே, 2018

கொதிக்கும் எண்ணைக்குள் 'குளு குளு' சாமியார்!!!

கொதிக்கும் எண்ணைக்குள் கை துழாவி, வடைச்சட்டி[வானலி]யில் நம்ம ஊர்ச் சாமியார்களும் சாமியாரிணிகளும் வடை சுடுவதை ஊடகங்களின் மூலம் அறிந்து பிரமித்திருப்பீர்கள்.
இவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில், தாய்லாந்து நாட்டின் 'சோங் புவா லம்பு' மாகாணத்தில், எரியும் அடுப்பின் மீதுள்ள எண்ணை நிரப்பிய தாம்பாளத்தில்[[பத்திரிகையில் வேறு பெயர் போட்டிருந்தார்கள்] உட்கார்ந்துகொண்டு[இடுப்பளவு] பக்த சிரோன்மணிகளுக்கு ஆசி வழங்கியிருக்கிறார்[சில நாள் முன்பு 'தினத்தந்தி'யில் வாசித்தது] ஒரு சாமியார்.

இப்படியொரு அபூர்வ சக்தி படைத்த சாமியாரிடம் ஆசி பெறுவதோடு, இவர் தொட்டுக்கொடுக்கும் பொருள்களை வாங்கினால்[பணம் கொடுத்துதான்] வாழ்க்கையில் சுபிட்சம் கிட்டும் என்பது தாய்லாந்து வாசிகளின் நம்பிக்கை. இதன் மூலம், சாமியாருக்குச் சொந்தமான கடையின் பலசரக்கு விற்பனை அமோகமாம்.

பாவம், நம்ம ஊர்ச் சாமியார்களுக்கு இப்படியான அதிர்ஷ்டம் இல்லை. 

இவர்கள் கொதிக்கும் எண்ணையில் கை நனைப்பது குறித்து ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்ட நினைவு எனக்கு உள்ளது. 

'குதிவாதம்'  என்னும் நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

எனக்கு அப்போது முப்பது வயதிருக்கும். காலையில் தூங்கி எழுந்ததும் குதிகாலைத் தரையில் ஊன்றும்போது ரொம்பவே வலிக்கு. ஊன்றவே முடியாது. வெய்யில் வந்த பிறகுதான் படிப்படியாகக் குறையும். 

என் தந்தை ஒரு நாட்டு வைத்தியரிடம் அழைத்துச் சென்றார்.

வடைச்சட்டியில்[வானலி] கொதித்துக்கொண்டிருக்கும் எண்ணையில் மூலிகைச் சாற்றைக் கலந்தார் வைத்தியர்; என்னுடைய குதிகாலிலும் சாற்றைப் பூசினார்.

''பயம் வேண்டாம். கொஞ்சம்கூடச் சுடாது'' என்று சொல்லிக்கொண்டே, பச்சிலைச் சாறு பூசிய என் குதிகாலை அரை நிமிடம்போல் கொதிக்கும் எண்ணையில் அமுக்கிப் பிடித்திருந்து விடுவித்தார். ''வலி சரியாயிடும்'' என்று சொல்லிப் புன்னகையுடன் வழியனுப்பினார்.

நம்ப மாட்டீர்கள் நான்கு நாட்களில் வலி காணாமல் போனது.

எனக்குக் குதிவாதம் வருவதற்கு முன்னரேகூட, எண்ணையில் வடை சுடும்[கையில் மூலிகைச்சாறு பூசிக்கொண்டு] சாமியார்கள் ஏதோ சூது பண்ணுகிறார்கள் என்று நான் எண்ணியதுண்டு. சம்பவத்தை நேரில் காணும் வாய்ப்புக் கிடைத்தால், ''சாமிகளே, கொதிக்கிற எண்ணைக்குள் கையை விடுறீங்க. கொதிக்கிற அந்த எண்ணையைக் கொஞ்சம் உங்க வாய்க்குள்ள ஊத்துங்களேன், பார்க்கலாம்'' என்று சொல்ல நினைத்ததுண்டு. வாய்ப்பு அமையவில்லை.

ஆக, நாம் நம் சாமியார்களைச் சந்தேகப்படுகிறோம். தாய்லாந்துக்காரர்கள்?

தாய்லாந்தில், எண்ணைத் தாம்பாளத்திற்குள் குந்தியிருந்து பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் அந்தச் சாமியாரின் நடவடிக்கைமீது சில சமூக ஆர்வலர்களுக்குச் சந்தேகம் வந்ததாம்; அது குறித்து ஆய்வு நடத்தி உண்மையைக் கண்டுபிடித்தார்களாம்.

'சாமியார் பயன்படுத்திய தாம்பாளம் இரண்டு அடுக்குகளாக இருந்தது[பார்வைக்கு ஒரே பாத்திரமாகத் தெரியும்]. மேலடுக்கில் எண்ணை. கீழடுக்கில் தண்ணீர். எரியும் நெருப்பின் சூட்டைக் கீழடுக்குத் தண்ணீர் உள்வாங்கிக் கொள்வதால், மேலடுக்கு எண்ணை சூடாவதே இல்லை' என்பதே அந்தக் கண்டுபிடிப்பு.

சாமியாரின் ஏமாற்று வேலை இவ்வாறு அம்பலப்படுத்தப்பட்ட பிறகும் அதை நம்ப மறுத்துவிட்டார்களாம் பக்தர்கள். வழக்கம்போல, சாமியார் எண்ணைத் தாம்பாளத்தில் அமர்ந்து ஆசீர்வதிப்பதும் பக்தர்கள் அணி அணியாய்ச் சென்று ஆசீர்வாதம் பெறுவதும் இன்றளவும் நடந்துகொண்டிருக்கிறதாம்.

நம்ம ஊர்ப் பக்தர்கள் தேவலாம்போலிருக்கிறது.
--------------------------------------------------------------------------------------------------------------









4 கருத்துகள்:

  1. எனக்கு பிழைக்க தெரிந்த சாமியார் மீது கோபம் வரவில்லை.

    எண்ணையை கொதிக்க வைத்து பக்தர்கள் மீது ஸ்பிரே செய்யணும்.

    மூடர்கள் உலகம் முழுவதுமே இருக்கின்றார்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன பண்ணினாலும் சாகும்வரை சாமியார் பக்தி போகாது.

      நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  2. ஹா ஹா ஹா நல்லாத்தான் சொல்லியிருக்கிறீங்க. ஆனா இப்படி பல மந்திர வித்தை எல்லாம் செய்கிறார்களே.. சிலது உண்மைதானா நம்பலாமா என்பது போலவும் இருக்கும்.. என்னால இப்பவும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை இதெல்லாம் உண்மையா இல்லை மஜிக் ஆ என:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தைகளைப் பார்ப்பதில் ஆர்வம் இருந்தால், பொழுதுபோக்குக்காகப் பார்க்கலாம். மோசம் போகாமல் இருந்தால் சரி.

      நன்றி அதிரா.

      நீக்கு