திங்கள், 4 ஜூன், 2018

'அது' தெரியும்! அதுக்கப்புறம்.....???

யிரம் வார்த்தைகளால் விளங்க வைக்க முடியாத விஷயத்தை ஒரு புகைப்படம் விளங்க வைத்துவிடும் என்று சொல்வார்கள். கட்டுரைகள் செய்ய முடியாத விஷயத்தை, ஒரு புகைப்படம் எளிதில் உணர்த்திவிடும் என்பதால் சர்வதேச நாளேடுகள், புகைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிப்பது உண்டு[பழைய விகடனில் இடம்பெற்ற வாசகம் இது].
அந்த வகையில், வியட்நாம் போரின் போது அமெரிக்கப் படைகள் நடத்திய வெடி குண்டுத் தாக்குதலுக்குப் பயந்து குழந்தைகள் ஓடி வருவது போன்ற படம் உலகை முதன் முதலாக உலுக்கிப் போட்டது. [வியட்நாமில் ட்ராங் பாங் என்ற இடத்தில், 11 வயதுச் சிறுமி நிர்வாணமாக ஓடி வரும் படத்தை, 1972ஆம் ஆண்டு ஜுன் 8ஆம் தேதி,  புகைப்படக் கலைஞர் 'நிக் உட்' பதிவு செய்திருந்தார்]. 

முதலில் இந்தப் படத்தைப் பிரசுரிக்க 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையின் ஆசிரியர் குழு மிகவும் யோசித்தது. அந்தப் படத்தில் சிறுமி ஒருவர்  நிர்வாணமாக ஓடி வந்ததுதான் அவர்களின் தயக்கத்துக்குக் காரணம்.  பின்னர், போரின் கொடூரத்தை மக்களுக்கு விளங்க வைக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, இந்தப் புகைப்படத்தை முன்பக்கத்தில் வெளியிட்டனர்.

அடுத்த நாள் அமெரிக்காவே கொதித்து எழுந்து விட்டது. உடனடியாக வியட்நாமில் அமெரிக்கா போரை நிறுத்த வேண்டுமென அமெரிக்க மக்களே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசுக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டது. பல நெருக்கடிகளுக்கிடையே இருந்த அமெரிக்க அரசு, தங்கள் நாட்டு மக்களே போராட்டத்தில் குதித்ததும்தான் வியட்நாம் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து யோசிக்கத் தொடங்கியது. [உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தப் படம், பின்னர் சிறந்த புகைப்படத்திற்காக வழங்கப்படும் 'புலிட்சர் 'விருதினை வென்றது].

நெஞ்சைவிட்டு அகலாத இந்த நிகழ்வை/செய்தியை நம்மில் மிகப் பெரும்பாலோர் ஊடகங்கள் வாயிலாக அறிந்திருக்கக்கூடும்.

அப்போது படம் எடுத்துச் சாதனை புரிந்த 'நிக் உட்', படம் எடுக்கப்பட்ட சிறுமி 'கிம்புக்' ஆகியோரின் இப்போதைய நிலை என்ன என்பது குறித்து நம்மில் எவரும் யோசித்திருக்க மாட்டோம். 

ஆனந்தவிகடன் வார இதழுக்கு அவர்களின் நிலை குறித்து அறியும் ஆர்வம் இருந்ததோ என்னவோ, அண்மையில், கேரள மாநிலத்திற்கு 'நிக் உட்' வருகை புரிந்ததையும், கேரள அரசு அவரின் வருகையை ஒட்டி விழா எடுத்துச் சிறப்பித்ததையும் மோப்பம் பிடித்துவிட்ட விகடன் குழு, கேரளா சென்று அவரைச் சந்தித்ததோடு அவருடனான பேட்டி[விகடன், 11.04.2018]யையும் வெளியிட்டது.

பேட்டியில், ரத்தக் காயங்களுடன் இருந்த 'கிம்புக்'கைத் தன் காரில் ஏற்றிச் சென்று, சிகிச்சையளித்துப் பிழைக்க வைத்ததையும், இன்றளவும் அவர்[கிம்புக் பாட்டி] நலமாக இருப்பதையும் ஐ.நா.வின் அமைதித் தூதராக அவர் பணி புரிவதையும் விவரித்ததோடு, அடுத்தமுறை இந்தியா வரும்போது அவரையும் அழைத்துவருவதாகவும் கூறியிருக்கிறார் நிக் உட்.

கூடவே, ஒரு பெரும் சோகச் செய்தியையும் அவர் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அது.....

'கெவின் கார்ட்டர்' என்னும் புகைப்படக்காரர் பற்றியது.

சூடானில் கடும் பஞ்சம் நிலவிய நேரம் அது. பல நாள் உணவின்றி, எலும்பும் தோலுமாய், குப்புறக் கவிழ்ந்து கிடக்கிறாள் ஒரு சிறுமி[பதிவர்கள் அனைவரும் பார்த்திருப்பார்கள். என்னுடைய ஒரு பதிவில் இப்படத்தை இணைத்திருந்தேன்]. எந்த நேரத்திலும் அவரின் உடம்பிலிருந்து உயிர் பிரியலாம் என்பதால், அந்தச் சிறுமியைக் கொத்தித் தின்பதற்காகக் காத்திருக்கிறது ஒரு கழுகு.


இந்தக் காட்சி கெவின் கார்ட்டரின் கண்ணில் பட்டது. படம் எடுத்தார். புகைப்படக்காரர் என்ற முறையில் தன் கடமை முடிந்ததாகக் கருதி[கூடுதல் செய்திகள் தவிர்க்கப்பட்டன] அங்கிருந்து புறப்பட்டுப் போனார்.

பின்னர், சிறுமியைக் காப்பாற்றாமல் படம் மட்டும் எடுத்தது அறம்தானா என்னும் கேள்வி அவர் மனதை வாட்டி வதைத்திருக்கிறது. ஆறுதல் பெறும் வகையறியாமல் கெவின் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த அதிர்ச்சிச் செய்தியை விவரித்து முடித்த 'நிக் உட்' சொல்கிறார்.....

''கிம்புக் உயிர் பிழைக்காமல் இருந்திருந்தால் நானும் கெவின் கார்ட்டர் போல் தற்கொலை செய்துகொண்டிருப்பேன்.''

''இவர்களைப் போன்ற நல்லவர்களால் வாழ்கிறது இவ்வுலகம்'' என்று சொல்லத் தோன்றுகிறது அல்லவா?-----------------------------------------------------------------------------------------------------------நன்றி: விகடன்






6 கருத்துகள்:

  1. இவர்களுக்கும் நம்மை ஆளும் ஆட்சியாளர்களுக்கும் எவ்வளவு வித்தியாசம் ???

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. உலகில் வியத்தகு மனிதர்களும் வாழ்கிறார்கள்தானே!

      நன்றி ஜெயக்குமார்.

      நீக்கு
  3. நல்ல தகவல்கள்.
    வியட்நாம் கடந்த காலம் பற்றியவை.சாதாரண தமிழர்கள் எண்ணத்தில் வீரம் மிகுந்த போராட்டத்தை நடத்தி வெற்றி கொண்ட வீரம் கொண்ட வியட்நாம் மக்கள் என்றே இப்போதும் நம்புகிறார்கள் என்பதை அறிவேன்.அனால் உண்மை நிலை அமெரிக்க கம்பனிகள் பல வியட்நாமில் தாராளமாக வந்து விட்டன. அங்கே வேலை பார்ப்பதை மகிழ்ச்சியாக பல வியட்நாமியர் நினைக்கிறார்கள். அமெரிக்க உறவை அரசும் மக்களும் விரும்புவதையே சில மதங்களுக்கு முன்னால் சென்ற என்னால் அறிய கூடியதாக இருந்தது.

    பதிலளிநீக்கு