செவ்வாய், 5 ஜூன், 2018

'கூரு கெட்ட' எங்க ஊர்க் குடியானவனின் கதை!!

ழக்கறிஞர் ஆனந்தனுக்காக அவர் வீட்டு வரவேற்பறையில் காத்திருந்தபோது, பொழுதுபோக்காக அருகிலிருந்த அந்தக் கிராமத்து மனிதருடன் உரையாட நேர்ந்தது. 

கடின உழைப்பால் காய்ப்பேறித் தடித்த விரல்கள்; மேலிரண்டு பட்டன் போடாத தொளதொளத்த சட்டை; தோளில் பச்சைத் துண்டு; படியாத முரட்டுத் தலைமுடி; பல நாள் தாடி. இவர் கிராமத்து ஆள் என்பதைச் சுலபமாக யூகிப்பதற்கான அடையாளங்கள் இவை.

''பக்கத்துக் கிராமமா?''

''கருவேப்பம்பட்டிங்க. இங்கிருந்து பத்து மைலுங்க. பேரு கந்தசாமி.  தம்பிக்கும் எனக்கும் ஒரு புளிய மரப் பாத்தியதையில் பிரச்சினைங்க....'' -கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் என்றில்லாமல், தனக்கான குடும்ப விவகாரங்களை முன்பின் அறிமுகம் இல்லாத என்னிடம் அவர் சொல்லிக்கொண்டுபோனது அவருடைய வெள்ளை மனதை அடையாளப்படுத்தியது. குறுக்கிடாமல் செவி மடுத்தேன்.
''.....அவன் ஒரு மோடாமுட்டிங்க. சூதுவாது தெரியாது. எல்லாம் அவனோட பொண்டாட்டி பண்றது. அவளுக்கு ஒடம்பெல்லாம் வெசம். வருசாவருசம் அறுவடை செய்யுற புளியை ஆளுக்குப் பாதியாப் பங்கு பிரிப்போம். திடீர்னு போன வருசம் இனிமே உனக்குப் பங்கு இல்லீன்னு சொல்லிப்புட்டானுங்க. எல்லாம் அவ போட்ட பாடமுங்க.''

''நீங்க என்ன சொன்னீங்க?''

''இது நியாயம் இல்லடான்னேன். அவன் காதுல போட்டுக்கல. மரம் என்னுது. என் பாகத்துலதான் இருக்குன்னான். சர்வேயருக்குப் படி கட்டி அளந்து பார்த்துடலாம்னேன். அதுக்கும் ஒத்துக்கல.  பஞ்சாயத்துல மொறையிட்டேன். அந்த மொறட்டு நாயி அதுக்கும் கட்டுப்படல. வக்கீலத் தேடி வந்தேன். இவரு அவனுக்கு நோட்டீசு அனுப்பிச்சாரு. அவனும் ஒரு வக்கீலைப் புடிச்சிப் பதில் நோட்டீசு குடுத்தான்.'' -மேற்கொண்டு சொல்ல ஒன்றுமில்லை என்பது போல, சுவரில் மாட்டப்பட்டிருந்த கடவுளர் படங்களை வெறிக்க ஆரம்பித்தார் அந்தக் கிராமவாசி.

நான் அறிந்தவரை, இந்த வட்டார சிவில் கோர்ட்டு வழக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை இந்தப் பங்காளிகளின் சொத்துப் பிரச்சினை சம்பந்தப்பப்பட்டவைதான். பொது வரப்பில் ஆக்கிரமிப்பு, பாசன முறை வைப்பில் முறைகேடு, பொதுத்தட பாத்தியதையில் முரண்பாடு, பாகப் பிரிவினையில் சுயநலப்போக்கு போன்றவை  முக்கிய காரணங்கள்.

இந்த வட்டார விவசாயிகள் வெட்டி கவுரத்துக்காக  வக்கீல், கோர்ட் என்று அலைகிறவர்கள். வேகாத வெய்யிலில் மாடாக உழைத்துச் சம்பாதித்ததையெல்லாம் வழக்குக்காகச் செலவழித்துவிட்டு அரசாங்கக் கடனுக்குக் கையேந்தி நிற்கிறவர்கள். இவர்களின் பரிதாப நிலைக்காக இம்மாதிரி ஆட்களைச் சந்திக்கும்போதெல்லாம் நான் வருத்தப்பட்டதுண்டு

சிறிது நேர ஆழ்நிலைச் சிந்தனைக்குப் பிறகு என் பக்கம் பார்வையைத் திருப்பினார் கந்தசாமி.

''மேற்கொண்டு சொல்லுங்க.''

''இன்னிக்கிக் கோர்ட்டுல கேஸ் தாக்கல் பண்ணனும்; வந்துடுன்னு வக்கீல் சொன்னாருங்க. வந்திருக்கேன். காட்டுல ஏகப்பட்ட வேலை கிடக்குது. ரெண்டு அணப்புக்குப் பருத்தி வெடிச்சிக் கிடக்குது. பசு மாடு, நாலு நாளா  காளைக்குக் கத்திட்டிருக்குது. நாலு செறவு நெல்லு நாத்து உட்டிருக்குது. அதுக்குத் தண்ணி பாய்ச்சணும். ஆளுக்காரன் ஒடம்புக்குச் செரியில்லீன்னு நேத்தே சொல்லிட்டுப் போய்ட்டான். அவ ஒருத்தி தனியா என்ன செய்யப் போறாளோ தெரியல'' என்று வேதனைப் பெருமூச்செறிந்தார் கந்தசாமி.

''பாசன வசதியெல்லாம் எப்படி?''

''கிணத்துப்பாசனம்தாங்க. ஒரு ஏக்கராவுல பருத்தி, கரும்பு, நெல்லுன்னு பயிரிடலாம். மிச்ச மீதியெல்லாம் மானாவாரி நெலந்தான். நல்லா மழை பேஞ்சா நெலக்கடலை பயிரிடலாம்.'' 

''நல்லது. கேட்குறேன்னு கோவிச்சுக்கப்படாது.''

''ஐயோ தாராளமா கேளுங்க. நல்லாப் படிச்சவங்க மாதிரி இருக்கிறீங்க. தப்பாவா கேட்டுடப் போறீங்க.''

''அவரு உங்க உடன் பிறந்த தம்பி. ஒரு புளிய மரத்தைத் தனக்குன்னு வெச்சுகிட்டு கோட்டையா கட்டிடப் போறார்? விட்டுக்கொடுத்துடுங்களேன். கோர்ட்டு, கேசுன்னு பண்ற செலவு மிச்சம்தானே?'' என்றேன்.

மென்மையாகச் சிரித்தார் கந்தசாமி. அதில் வேதனை கலந்திருந்தது. சொன்னார்: ''விட்டுக்கொடுத்துடறது பிரச்சினை இல்லீங்க. இன்னிக்கி மரத்தை விட்டுக்கொடுத்தா நாளைக்கு, பொதுவில் இருக்கிற வண்டித் தடத்தைக் கொஞ்சம் கொஞ்சமா வெட்டித் தன் பங்குல சேர்த்துடுவான். பொதுக்கெணத்துத் தண்ணியைத் திருட்டுத்தனமா உறிஞ்சி எடுப்பான். தம்பி, தம்பி பொண்டாட்டியைப் பொருத்தவரைக்கும் நல்லதுக்குக் காலம் இல்லீங்க.''

வக்கீல் வந்துவிடவே அத்துடன் எங்களின் உரையாடல் தடைபட்டது.

வக்கீல் நண்பரிடம் வந்த நோக்கத்தைப் பகிர்ந்துகொண்டு அங்கிருந்து கிளம்பினேன்.

சில வருடங்களுக்குப் பிறகு.....

உறவினர் வீட்டு விசேசத்துக்காகச் சேலம் சென்றிருந்த நான்,  வழக்கு நிமித்தமாகக் கோர்ட் சென்றிருந்த நண்பர் ஆனந்தனையும் சந்தித்துவிட்டு நீதிமன்றத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தேன். ''சார்'' என்ற அழைப்பு. எப்போதோ கேட்ட குரல்.

நின்று திரும்பினேன்.

கருவேப்பம்பட்டிக் கந்தசாமி.

''என்னைத் தெரியுதுங்களா?''

''தெரியாம என்ன? கந்தசாமிதானே? புளிய மரத்துக் கேசு என்னாச்சு?''

''கேசு ஜெயிச்சுட்டுதுங்க. ஆனா.....கேசுல ஜெயிச்ச  கையோட, நேர்த்திக் கடனை நிறைவேத்துறதுக்காகத் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குப் புறப்பட்டுப் போய்ட்டேன். அந்த நாயி ராத்திரியோட ராத்திரியா மரத்தை வெட்டிக் கடத்தி வித்துட்டானுங்க. அவனைச் சும்மா விட்டிருவேனா? நஷ்டஈட்டுக்காகக் கேசு போட்டிருக்கேன்.'' -குரலில் வருத்தத்தைவிடவும் ஆவேசம் மேலோங்கியிருந்தது.

''மரத்துக் கேசை ஜெயிச்சிக் கொடுத்த ஏழுமலையான் மரத்தைக் காவல் காக்கத் தவறிட்டாரே. நஷ்டஈட்டுக்காகவும் அவரை நேர்ந்துக்கப் போறீங்களா?'' என்ரு கேட்க நினைத்தேன்; கேட்கவில்லை.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

3 கருத்துகள்:

  1. இதற்கு பழனியாண்டியும் உடந்தை போல தெரிகிறதே...

    நீங்கள் அவரிடம் "தம்பிதானே விட்டுக் கொடுங்க" என்ற கருத்தையே சொல்ல நினைத்தேன் ஆனால் அவரது பதிலை பார்த்தீங்களா ? இதுதான் இன்றைய சமூகத்தினரின் குணம்.

    வாதியும், பிரதிவாதியும் இறந்து விடுவான், வக்கீலின் மகன் வயலை உழுது கொண்டு இருப்பான்.

    என்ற பொன்மொழி எனது நினைவுக்கு வந்து போனது நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவனும் நேர்ந்துக்கிறான். அவனும் நேர்ந்துக்கிறான். பழனியாண்டிகள் பாடு படு திண்டாட்டம்தான்.

      படித்தவர்கள் மத்தியிலேயும் பங்காளியைப் பகையாளியாய் நினைக்கும் மனப்போக்கு எங்கள் பகுதிகளில் மாறவில்லை. குறிப்பாக, சங்ககிரி, திருச்செங்கோடு, குமாரபாளையம் வட்டாரங்களில் வாய்க்கால் வரப்புத் தகராறுகள் இன்னும் குறைந்தபாடில்லை.

      வக்கீல்கள் காட்டில் மழைதான்.

      நன்றி நண்பரே.

      நீக்கு
  2. மீசைக்கார நண்பரின் கருத்தினை வழிமொழிகின்றேன் ஐயா

    பதிலளிநீக்கு