Wednesday, June 6, 2018

படிக்கும் வயதில் பாலுணர்ச்சியைக் கட்டுப்படுத்துவது எப்படி?'...குமுதம் போதனை!!!

குமுதம் வார இதழ், அண்மையில் அதிரடியாய் ஒரு சிறுகதைப் போட்டியை அறிவித்தது. பரிசு பெற்ற 'முத்திரை'க்  கதைகளை வெளியிட்டும் வருகிறது. 'குருவம்மா' இந்த வார[13.06.2018]ப் பரிசுக்கதை.

இந்தக் கதையின் முக்கியக் கதாபாத்திரம் 'குருவம்மா'. 'உளுத்தங்கஞ்சிக் கடை' நடத்திக்கொண்டு நாலுபேருக்கு நாலுவிதமாய் உதவி செய்து வாழ்பவள்.

இந்தக் கதையின் கதாசிரியரே[ரெ.முத்தரசு] 'கதை சொல்லி'யாகவும் இருக்கிறார்[கதாசியர், தானே ஒரு பாத்திரமாக இருந்து கதையைச் சொல்வது ஒருவகை உத்தி].

ஆண்-பெண் புணர்ச்சி சுகம் பற்றி அறியும் அதீத வேட்கை காரணமாக, அடுத்த வீட்டு மொட்டை மாடியில் அரங்கேறும் அந்தரங்கத் தேடல்களை அரையிருட்டில் மறைந்திருந்து பார்ப்பது; அடுத்த வீட்டுச் சன்னல் சந்து வழியாகக் கண்டறியாதனவற்றைக் கண்டு சுகிப்பது என்றிப்படிக் கட்டவிழ்த்துவிட்ட ஜல்லிக்கட்டுக் காளையாய் அலைந்து திரிந்ததால் இந்தக் கதையின் நாயகனால்[நாயகன் என்றே அழைப்போம்] படிப்பில் கவனம் செலுத்த இயலவில்லை.

இவனுடன் இரண்டு பெண் பிள்ளைகளையும் ஈன்றெடுத்த இவனின் தாயானவள், குருவம்மாவிடம் ''என் பையனுக்கு மோகினிப் பேய் பிடிச்சிருக்கு. நீதான் அதை விரட்டணும்''னு வேண்டிக்கொள்கிறாள்.

இயல்பாகவே ஊராருக்கு உதவுகிற இரக்க குணம் படைத்த குருவம்மா, நாயகனை ஆட்டிப்படைத்த பேயை விரட்டியடிக்கிறாள். அது எப்படிச் சாத்தியப்பட்டது என்பதுதான் கதையின் மையக்கரு.

நாயகனைத் தன் வீட்டுக்கு அழைத்த குருவம்மா, ஒரு தம்ளர் கஞ்சி கொடுத்துக் குடிக்கச் சொல்கிறாள். குடித்த பிறகு.....

''என்னப்பா, நிறையக் கந்தர்கோலம் பண்ணிட்டிருக்கே'' என்கிறாள்.

''யார் சொன்னாங்க'' என்கிறான் நாயகன்.

''நீ அதுக்காக அலையுறது எல்லோருக்கும் தெரியும். அக்கா தங்கச்சிகளை உன்னை நம்பித்தான் உங்கம்மை பெத்துப் போட்டிருக்கா.''

''நான் என்ன தப்புப் பண்ணினேன்?''

''ஒன்னும் பண்ணிடாதேப்பா'' என்ற குருவம்மா, நாயகனின் தொடையில் சுளீரென அடிக்கிறாள்; அவன் மார்பைத் தடவி, ''எது வேணுன்னாலும் இனி என் கிட்டே வா'' என்கிறாள்.

நம் நாயகனுக்கு எது புரியவேண்டுமோ அது புரிந்தது. அதற்கப்புறம் மொட்டை மாடிகளில் தவம் கிடக்கவோ, அடுத்த வீட்டுச் சன்னல் சந்துகளையும், கதவுத் துவாரங்களையும் தேடி அலையவோ இல்லை.

அவ்வப்போது குருவம்மாவிடம் தன் ஆசையைத் தணித்துக்கொள்கிறான் நாயகன். அலையும் நேரம் மிச்சமானதால் அவனால் நன்றாகப் படிக்க முடிந்தது. எஞ்ஜினீயர் ஆகிறான். கனடா, அமெரிக்கா என்று சுற்றிவிட்டுத் திருமணம் புரிந்து 'யுடா' மாகாணத்தில்[?] செட்டில் ஆகிறான்.

[ஆண்டுகள் உருண்டோடுகின்றன].

சொந்த ஊரில், குருவம்மா வயது முதிர்ந்த நிலையில், நோய்வாய்ப்பட்டுக் கவலைக்கிடமான நிலையில் இருப்பதை நண்பர் மூலமாக அறிந்த நம் நாயகன்[வயதாகிவிட்டதால் நாயகர் என்போம்] விமானம் மூலம் குருவம்மாவைப் பார்க்க வருகிறார்[இதுதான் கதையின் தொடக்கம். மேலே விவரித்த நிகழ்வுகள் பின்னோக்கு உத்தியில் சொல்லப்பட்டவை].

குருவம்மாவைச் சந்தித்து உரையாடுகிறார். நாயகரின் தாய் முன்வைத்த வேண்டுதலின் பேரிலேயே, நாயகரின் தாபம் தணித்த ரகசியத்தைச் சொல்கிறாள் குருவம்மா.

சொல்லி முடித்தபோது, அவளின் கண்களில் கண்ணீர் வடிந்ததாம். கர்சீப்பை எடுத்துத் துடைத்தாராம் நம் நாயகர். 'துணியையும் மீறி அவளின் உடம்புச் சூடு தகித்தது'ன்னு உருக்கமாகக் கதையை முடிக்கிறார் கதாசிரியர் 'ரெ.முத்தரசு'.

மேம்போக்காகப் பார்க்கும்போது இந்தக் கதையின் கரு முற்றிலும் புதுமையான[புரட்சிகரமானது என்றுகூடச் சொல்லத் தோன்றும்] ஒன்று என்றே எண்ணத் தோன்றுகிறது. கொஞ்சம் சிந்தித்தால் அது தவறு என்பது புரியும்.

பதின் பருவத்தில்[Teen Age] பாலுணர்வுத் தூண்டல் என்பது இயற்கையானதே. குடும்பத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகளையும், உழைத்து முன்னேற வேண்டியதன் அவசியத்தையும் மனதில் அவ்வப்போது அசைபோடுவதன் மூலம் மனதைத் தன்வயப்படுத்திப் படிப்பில் தீவிர ஈடுபாடு கொள்ளுதல் வேண்டும். இதன் மூலம் இந்த இச்சையைக் கட்டுப்படுத்தலாம். மாறாக,  ஒரு முறை புணர்ந்தால் அப்புறமும் அதன் மீதான ஆசை அதிகரிக்கவே செய்யும். படிப்பின் மீதான ஆர்வம் குறையும்.

சில கேள்விகள்:

நம் நாயகனுக்கு வாய்த்தது போல மற்ற இளைஞர்களுக்கும் குருவம்மாக்கள் வாய்ப்பார்களா?

இவளைப்போல், காசு பணம் எதிர்பார்க்காமல் கண்டவனுக்கெல்லாம் கட்டில் சுகம் வழங்கும் காரிகைகள் எத்தனை பேர் தேறுவார்கள்?

பெற்றோரைச் சார்ந்திருக்கும் வயதில், 'அந்த' ஆசையைத் தணிப்பதற்காகத் திருமணம்தான் செய்துகொள்ள முடியுமா? துள்ளும் வாலிப வயதில், கட்டியவள் தொட்டுவிடும் தூரத்தில் காத்திருக்க, படிப்பில் கவனம் செலுத்தத்தான் முடியுமா?[விதிவிலக்குகள் இருக்கலாம்].

எழுத்தாளர் முத்தரசுவும், இதை முத்திரைக்கதையாகத் தேர்வு செய்த குமுதம் ஆசிரியர் 'ப்ரியா கல்யாணராமன்' அவர்களும்தான் பதில் சொல்ல வேண்டும்!

ப்ரியா கல்யாணராமன்
------------------------------------------------------------------------------------------------------------------
8 comments :

 1. நீங்கள் கேட்பதுபோல் எல்லோருக்கும் குருவம்ளாக்கள் கிடைப்பார்களா ?

  மேலும் எந்த தாயும் மகனுக்காக பிற பெண்ணிடம் இப்படியொரு கோரிக்கை வைக்க மாட்டார்.

  ReplyDelete
  Replies
  1. //எந்த தாயும் மகனுக்காக பிற பெண்ணிடம் இப்படியொரு கோரிக்கை வைக்க மாட்டார்//

   இதையெல்லாம் கதாசிரியர் யோசித்திருக்க வேண்டும்.

   அதிவிரைவு வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கில்லர்ஜி.

   Delete
 2. இதுபோன்ற கதைகளைப் பிரசுரிப்பது தவறான வழிகாட்டுதலாக ஆகிவிடும்

  ReplyDelete
  Replies
  1. விற்பனைதான் அவர்களின் முக்கிய நோக்கம். வேறு எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.

   நன்றி நண்பர் ஜெயக்குமார்.

   Delete
 3. Replies
  1. மக்களுக்கு இடும்பை தரும் இதழ்!!!

   நன்றி டாக்டர்.

   Delete
 4. இப்போதெல்லாம் உம்ம கதையைக் குமுதம் வெளியிடுவதில்லையோ?! வெளியிட்டிருந்தால் இதை எழுதியிருக்க மாட்டீர். ஹ...ஹ...ஹ!

  ReplyDelete
  Replies
  1. குமுதம் வெளியிடத் தயார். நான் அனுப்பத் தயாராய் இல்லை. ஹ...ஹ...ஹ!!

   Delete