வெள்ளி, 26 ஜூலை, 2019

நாமக்கல்லில், ‘நடந்த’ கோலத்தில் அத்தி வரதப்பர்!!!

கீழ்வருவது இன்றைய தினமலர் நாளிதழ்ச் செய்தி. இன்றைய காலைக்கதிர் நாளிதழும் இதே செய்தியை வெளியிட்டுப் புளகாங்கிதம் அடைந்திருக்கிறது.

நேற்று முன்தினம் வரை, சயன கோலத்தில் இருந்த அத்தி வரதரை நேற்று முதல் நின்ற கோலத்தில் எழுந்தருளச்செய்தனர்[தூக்கி நிறுத்தலையாம்] அர்ச்சகர்கள். அடுத்த மாதம், 17 வரை, இக்கோலத்தில் காட்சியளிப்பார் வரதர். ஆக., 6ல், மகா சுதர்சன யாகம், 16 மாலை, 'கஜேந்திர மோட்ச' உற்சவம் நடக்கவுள்ளது[தினமலர் 26.07.2019]

[ஆக, காஞ்சிபுரத்து அத்தி வரதப்பரை முந்திக்கொண்டுவிட்டார் சேலத்து அத்தியார். காஞ்சிபுரத்தார்  ஆகஸ்டு முதல் தேதியில்தான் எழுந்தருள இருக்கிறாராம்].

ஒரு விசேடச் செய்தி நாமக்கல்லிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பரவிக்கிடக்கிறது. அது.....

சேலத்தில் நின்றகோலத்தில் அருள்பாலிக்கிற அத்தி வரதப்பர், அடுத்த மாதம் 18ஆம் தேதி நாமக்கல் வந்து சேர்ந்து ‘நடந்த’ கோலத்தில் தன் பக்தர்களுக்குக் காட்சி தந்து அவர்களைப் பரவசத்தில் ஆழ்த்தப்போகிறாராம். இந்தத் தகவல், இங்குள்ள பிரபலமான கோயில் ஒன்றின் பிரதான அர்ச்சகருக்கு வரதப்பரால் அசரீரியாகச் சொல்லப்பட்டதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
அத்தி வரதர் வரலாறு க்கான பட முடிவு
சிலையைப் படுக்க வைத்து, சயன கோலத்தில் அத்தி வரதப்பர் அருள்பாலிக்கிறார் என்று சொல்வதையும், தூக்கி நிறுத்தப்பட்ட சிலைக்குள்ளிருந்து அவர் அருள் புரிகிறார் என்பதையும் நம்புகிற எங்கள் ஊர் மக்கள், அர்ச்சகர்களின் உதவியில்லாமல் தாமே எழுந்து நடந்து, ‘நடந்த கோலத்தில் தங்களுக்கு அவர் காட்சி தரவேண்டும் என்று வரதப்பரை வேண்டினார்கள். அவர்களின் கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டுவிட்டதாகத் தெரிகிறது.

ஆம், எதிர்வரும் ஆகஸ்டு 18ஆம் நாளில் ‘நடந்த’ கோலத்தில் காட்சிதர இருக்கிறார் அத்தி வரதப்பர்!. 

பக்தகோடிகளே, எக்காலத்திலும் எவ்விடத்திலும் வாய்க்காத அரும்பெரும் பேறு இது. வாய்ப்பைத் தவறவிடாதீர்கள். நாமக்கல் வந்து, அத்தி வரதரைத் தரிசனம் செய்து, சொர்க்கத்தில் உங்களுக்கென்று ஓரிடத்தை ‘ரிசர்வ்’ செய்துவிடுங்கள்!

நன்றி.
=================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக