அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

‘தமிழ் வழியில்’ கல்வி பயின்ற ‘நாசா’ விஞ்ஞானி!!!


#தமிழ் வழியில் படித்து நாசாவின் தலைசிறந்த விஞ்ஞானியான மெய்யப்பனின் வெற்றிக்கதை #தமிழர் _பெருமை

  • சாய்ராம் ஜெயராமன்
  • பிபிசி தமிழ்



நாசா



படக்குறிப்பு,
மெய்யா மெய்யப்பன்
(தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடர் வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் எட்டாவது கட்டுரை.)
தமிழ்வழியில் கல்வி பயில்வது குறித்து எண்ணற்ற ஆண்டுகளாக அவ்வப்போது விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. தமிழில் மட்டுமே படிப்பதால் உயர் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பின்தங்க நேரிடும் என்று ஒரு தரப்பினரும், தாய்மொழியில் படித்ததால் வாழ்க்கையில் சிறந்த நிலைக்கு வந்தவர்கள் ஏராளம் என்று மற்றொரு தரப்பினரும் வாதிடுவதுண்டு.
இவ்வாறு தமிழ்வழிக் கல்வியில் படித்துச் சிறந்தவர்களுக்கு உதாரணமாக, உள்நாட்டுத் தலைவர்கள் ஏராளமானோர் அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
ஆனால், அதே பின்புலத்துடன் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சாதித்துக் காட்டியவர்கள் பொதுவெளியில் அதிகம் தென்படுவதில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழகத்தின் காரைக்குடியில் பிறந்து, தமிழ்வழியில் கல்வி பயின்று, அமெரிக்காவுக்குக் குடிப்பெயர்ந்து இன்று உலகமே வியந்து பார்க்கும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பொறுப்பில் 24 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றி நடைபோட்டு வருகிறார் தமிழரான மெய்யா மெய்யப்பன்.
தன்னம்பிக்கை அளிக்கும் அவரது வெற்றிக்கதையையும், நானோ டெக்னாலஜித் துறையில் அவர் நிகழ்த்தி வரும் சாதனைகள் குறித்தும், 'நாசாவில் வேலை செய்பவர்களில் பாதிப் பேர் இந்தியர்கள்' என்ற கூற்றின் உண்மைத்தன்மை குறித்தும் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
“நான் என்னதான் அமெரிக்காவில் இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்து வந்தாலும், நான் ஒரு தமிழர் என்பதை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன். அந்த அடையாளம் எனது மரபணுவில் நிரந்தரமாக உள்ளது. மேலும், உலகின் மிகவும் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழிலிருந்துதான் பல்வேறு மொழிகள் பிறந்தன என்பது பெருமைக்குரிய விடயம்.
நான் உலகம் முழுவதும் எங்கே சென்றாலும், தமிழர்களும், தமிழ் மொழியும் விரவிக் கிடப்பதைக் காண்கிறேன். உதாரணமாக, ஒருமுறை நான் கொரியாவிற்குச் சென்றிருந்தபோது, கொரிய மொழிக்கும் - தமிழுக்கும் இடையே எண்ணற்ற ஒற்றுமை இருப்பதை எண்ணி வியந்தேன்" என்கிறார் விஞ்ஞானி மெய்யப்பன்.
முதல் தலைமுறைப் பட்டதாரியான இவர், தமிழ்வழியில் பள்ளிக்கல்வி பயின்றது குறித்துப் பேசியபோது, "நான் தமிழ்வழியில் பள்ளிக்கல்வி பயின்றது எந்த வகையிலும் எனக்கு பின்னடைவாகவே அமையவில்லை. மாறாக, தாய்மொழியில் பயின்றது எனக்கு உறுதுணையாகவே இருந்தது. மேலும், திருச்சியில் கல்லூரி படிப்பை படிக்கும்போது ஆங்கில புலமையை படிப்படியாக வளர்க்க தொடங்கினேன்.
நான் இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் படிக்கும்போதுகூட எனக்கு அமைய பெற்ற சிறந்த பள்ளிக்கல்வியை நினைத்துப் பெருமையடைந்தேனே தவிர, ஒருபோதும் அதுகுறித்து வருந்தியதில்லை" என்று கூறும் அவர் தனது பள்ளிக்கல்வி முதல் முனைவர் பட்ட ஆய்வுவரை அனைத்தையும் இலவசமாகக் கற்கும் வாய்ப்புக் கிடைத்ததாகக் குறிப்பிடுகிறார்.
'நாசாவில் பணிபுரிபவர்களில் பாதிக்கும் அதிகமானோர் இந்தியர்கள்' என்ற கூற்றைப் பலரும் கேட்டிருக்க வாய்ப்புண்டு. இதன் உண்மைத்தன்மை குறித்த கேள்விக்குப் பதிலளித்த மெய்யா மெய்யப்பன், "கண்டிப்பாக இல்லை. நாசா என்பது அமெரிக்காவின் ஓரிடத்தில் இருந்து செயல்படும் அமைப்பல்ல. அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நாசாவின் ஆராய்ச்சி மையங்கள் இருக்கின்றன. நான் பணிபுரியும் கலிஃபோர்னியாவிலுள்ள ஏம்ஸ் ஆய்வு மையம் உள்ளிட்ட சில மையங்களில் முனைவர் பட்டம் ஆய்வாளர்கள் பலர் பணிபுரிகின்றனர். அந்த வகையில் பார்த்தோமானால், அமெரிக்காவில் பிறக்காத வேற்று நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளில் இந்தியாவைச் சேர்ந்தவர்களே மற்ற நாட்டினரைவிட அதிக அளவில் உள்ளனர்.  குறிப்பாக, இந்தியர்களில் மொழிவாரியாகப் பார்த்தோமானால், தமிழர்களே நாசாவில் அதிகளவில் பணிபுரிக்கின்றனர் என்பதுதான் உண்மை" என்று அவர் கூறுகிறார்.#
======================================================================================