குப்புச்சாமி, சன்னலோர இருக்கையில் அமர்ந்தவாறு நகரப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தான்.
வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவனின் கவனத்தை, முன் இருக்கையிலிருந்த இரு இளம் பெண்களின் உரையாடல் ஈர்த்தது.
“என்னவோ தெரியல. இப்போ எல்லாம் நான் அடிக்கடி கோபப்படுறேன். உப்புப் பொறாத விசயத்துக்கெல்லாம் அடாவடியாப் பேசி அடுத்தவங்க மனசை நோகடிக்கிறேன். அப்புறம் கொஞ்ச நேரத்துலயே அதுக்காக வருத்தப்படுறேன்” என்று வருத்தத்துடன் சொன்னாள் சன்னலோர இருக்கைக்காரி.
“கோபம் வர்ற மாதிரி தெரிஞ்சா ஒன்னு ரெண்டு மூனு எண்ண ஆரம்பிச்சுடு. ஐம்பது எண்ணுறதுக்குள்ள அதெல்லாம் இருந்த இடம் தெரியாம போயிடும்” என்றாள் அவளோடு இருந்தவள்.
“அதையும் பார்த்துட்டேன். பலனில்ல.”
அந்த முன்கோபக்காரியின், ‘முக்கால் நிலா’ வடிவத்தில் தெரிந்த அழகிய முதுகையும், வெண் சங்குக் கழுத்தையும், இரு ‘பளீர்’ காதுகளின் பின்புறங்களையும் ஆராய்ந்தான் குப்புச்சாமி.
ஏமாற்றம் அவனை ஆரத் தழுவியது.
அவளின் மேற்சொன்ன அழகுப் பிரதேசங்களில் ஒரு மச்சம், மரு, தழும்பு என்று எதுவுமே இல்லை.
தன் முகத்தைச் சற்றே முன்னுக்கு நகர்த்தி, “கோபத்தை விரட்டியடிக்க நான் வழி சொல்லட்டுமா?” என்றான் குப்புச்சாமி.
சடக்கெனத் திரும்பிய இரு பெண்களும் அவனை ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.
முன்கோபக்காரி, “சொல்லுங்க சார்” என்றாள், ஏராள எதிர்பார்ப்புகளுடன்.
“உங்க உடம்பில் மச்சம், மரு, தழும்புன்னு எதுனாச்சும் இருக்கும் இல்லியா? கோபம் வரும்போது அதுல ஒன்னை வருடிக் கொடுங்க. சில நேரம் ரத்தம் வர்ற வரைக்கும்கூடத் தேய்க்க வேண்டியிருக்கும். அப்புறம் பாருங்க, கோபம் மாயமாய் மறைஞ்சுடும்” என்றான் குப்பு[இனி, 'குப்பு’ என்றே செல்லமாக அழைப்போம்].
“அப்படியா!” என்று வியப்பின் எல்லைவரை சென்று திரும்பிய அவள், “என் உடம்பில் இதுல ஒன்னுகூட இல்லீங்க. என் அம்மாகூட நீ அதிசயப் பிறவியடின்னு அடிக்கடி சொல்வாங்க. சார், ஒரு சந்தேகம். எனக்கு வேண்டப்பட்டவங்களோடதைத் தடவலாமா?” என்றாள்.
“அது வந்து.....” என்று குப்பு ஏதோ சொல்ல முயற்சிக்கையில், பின்னாலிருந்து ஒருவர், “கோபத்தைப் போக்க இப்படியொரு வழி இருக்கா? சார், நீங்க மச்ச மரு ஜோதிடரா?” என்று கேட்க, பேருந்து முழுக்கப் பெருத்த சிரிப்பலை பரவி அடங்கியது.
"கவலையை மறக்கவும் இப்படி எதையாவது தடவலாமா?” என்றார் ஒரு பழங்கிழம்.
ஓர் இளவட்டம், “பொண்ணுகளை ‘சைட்’ அடிக்காம இருக்கவும் இது உதவுமா?” என்றான்.
இப்படி, ஆளாளுக்குக் கேள்விக்கணை தொடுக்க, ஒட்டு மொத்த பஸ் பயணிகளும் நக்கலாய்ச் சிரித்தார்கள்; நினைத்து நினைத்துச் சிரித்தார்கள்; குப்புவை ஓரக் கண்ணால் பார்த்துப் பார்த்துச் சிரித்தார்கள்.
அவமானத்தால் தலை குனிந்தான் குப்பு.
அடுத்த நிறுத்தத்திலேயே இறங்கிக்கொண்டான்.
இப்போதும் அவன் தலை தாழ்ந்தே இருந்தது. எவனோ ஒரு அரைகுறை அறிவுஜீவி, 'கோபத்தைக் கட்டுப்படுத்துறதுக்குச் சொன்ன இந்த யோசனையை நம்பி இப்படி அவமானப்பட்டுட்டேனே' என்று முணுமுணுத்துக்கொண்டே நடந்தான் குப்பு.
============================================================
முக்கியக் குறிப்பு: மிகப் பழைய முன்னணி வார இதழ் ஒன்றில் வெளியானது இந்த 'மச்ச மருத்துவம்'!
எழுதியவர்: கத்துக்குட்டிக் கதாசிரியன் 'பசி'பரமசிவம்!